Sunday, August 20, 2006

சுமைகளும் சுகங்களும் பகிர்வதில் சுகமே...! - சிறுகதை

அதிகாலை நான்கு மணியில் இருந்து தன்னந்தனியாக சுழன்று கொண்டிருந்த சுமதிக்கு எரிச்சல், கோவம் எல்லாம் ஒன்றாய் கொழுந்து விட்டு எரிந்த கொண்டிருந்தது. இரவு நித்திரையில்லை குழந்தை உறங்க 1 மணி ஆகிவிட்டது.

“என்ன செய்வது என் கஸ்டம் எப்ப தீருமோ.? அப்பவே சொன்னான் பாழாய்ப்போன கலியாணம் எனக்கு வேண்டாம் என்டு கேட்டுதுகளே.. பாரம் இறக்கி வைக்கிறம் என்டு பாழுங்கிணத்துக்கை தள்ளி விட்டிட்டு அவை சந்தோசமாய் இருக்கினம். நான் படுற பாடு எனக்குத்தானே தெரியும்.” தன் சோகங்களை தனியாகவே புலம்பிக்கொண்டு வேலைகளை செய்தவளிற்கு குழந்தையின் அழுகையை கேட்டதும் கோவம் கொழுந்து விட்டெரிந்தது. .

“ சுமதி இங்க கொஞ்சம் வாரும்.. பிள்ளை ஒண்டுக்குப்போட்டுது போல அழுகுது” நித்திரை கலையாத ரவியின் குரல். “அதுக்கும் நானே வரோணும் பக்கத்தை எல்லாம் கிடக்கு எடுத்து மாத்துங்கோ” ரவியின் உடுப்புகளை அயன் பண்ணியபடி பதில் தந்தாள் சுமதி. “இங்க வந்திட்டுப்போம். என்னால முடியாது” என்ற படி மறுபக்கம் திரும்பி படுத்துக்கொண்டான் ரவி. இதைக்கேட்டதும் சுமதிக்கு அழுகையே வந்தது.

கலியாணத்திற்கு முன்னர் “உன்ரை அம்மாமாதிரி நான் உன்னை கவனிப்பன்” என்று வாக்குறுதியை வழங்கிய ஆண்மகன் ரவி. பிள்ளைக்கு ‘நப்பி’ மாத்திறது, பிள்ளை வண்டி தள்ளுறது இதுகளை பெண்கள் வேலையாகவும், வீட்டுவேலைகள் யாவும் பெண்களே செய்யவேண்டும் என்ற சிந்தனை கொண்ட படித்த இளைஞன்.

குழந்தையின் அழுகை நிண்டபாடில்லை அது அழுது கொண்டிருக்க தாய்க்கு வேலை ஓடுமா? அப்படியே போட்டுவிட்டு படுக்கையறை சென்று குழந்தையை பார்த்து அழுகையை நிறுத்தி பாலும் கொடுத்துவிட்டு வந்தாள்.

ரவியைப்பார்க்கையில் வேதனையாக இருந்தது..
“என்னை ஒரு மிசினாக நினைச்சிட்டாரோ” தனக்குள் கேள்வியை கேட்டுக்கொண்டு மறுபடி புலம்பலை ஆரம்பிக்கிறாள். தினமும் தனியனாய் 4 மணிக்கு எழும்பி.. பள்ளி செல்லும் பிள்ளை, வேலைக்குப்போகும் கணவன், இவைகளின் அன்றாட வேலைகளையும் செய்து, தனது வேலைகளும் செய்து.. அயன் பண்ணி, சமையல் செய்து, குளிக்கவைத்து, சாப்பாடு பரிமாறி, தான் வேலைக்குச்சென்று மறுபடி வந்து குழந்தைகளை அழைத்து, வீட்டு வேலைகள் பார்த்து நித்திரைக்குப்போக 10-11 ஆகிவிடும். அதிகாலை 4 மணிக்கு எழுந்தால் தான் அனைவரையும் சரியாக கவனித்து 8 மணிக்கு தானும் வேலைக்கு போகலாம். கணவனிடம் இருந்து எந்த உதவியும் ஆதரவும் இன்றி தன்னந்தனியாக சுழலும் அவளது மன உளைச்சலையும், சுமையையும் பங்கிட அவன் தயாராக இல்லை.

அவனைப்போலத்தான் அவளும் வேலைக்குச்செல்கிறாள் உழைக்கிறாள்.. ஆனால் அவளுக்குமட்டும் குடும்பத்தில் சுமை ஏன் அதிகம்..?? வீட்டு வேலைகள் பெண்கள் வேலையாம் அதைச்செய்ய வெட்கப்படும் அவன்

“நான் பொட்டையன் இல்லை உதுகள் செய்ய”

என்பான். உதவி கேட்டால் தேவையில்லாத பிரச்சனை

“ என்ன நீர் தான் பெரிய வேலைக்குப்போற பொம்பிளை மாதிரி தினம் படம் காட்டிறீர்.. உங்க மற்றவை போறதில்லையோ..?? பிள்ளையளை கவனிச்சுக்கொண்டு எங்கட அம்மாமார் வீட்டு வேலை செய்யலையோ.?? உமக்கு வேறை வோசிங் மிசின், காஸ் அடுப்பு இப்படி நிறைய வசதிகள் கிடக்கு அவை எவ்வளவு கஸ்டப்பட்டவை” என்று பேசுவான்.

“ ஏனப்பா என்னை மாதிரி அவையும் வேலைக்குப்போனவையோ.. 24 மணிநேரம் வீட்டில இருந்தவை செய்திச்சினம் நான் வேலைக்கும் போய் இங்கையும் மிசினாய் வேலை செய்யவேண்டியதாய் எல்லோ கிடக்கு, வோசின் மிசினுக்க உடுப்பு போடாமல் தானாய் தோய்க்குமே.. அடுப்பில காய்கறியளை வெட்டி வைக்காமல் தானாய் காய்ச்சுமே..?? அதுக்கு தான் உதவி வேணும் எண்டிறன். நான் என்ன மிசினே வீட்டிலையும் மாடாய் வேலைசெய்து ஒபிசிலையும் வேலை செய்து கஸ்டப்பட” அவளும் கேட்காமல் இல்லை..

அவளது பேச்சிலும் நியாயம் இருக்கத்தான் செய்கிறது. அவனை விட அவள் எந்த விதத்தில் உயர்ந்தவள் அல்லது எந்த விதத்தில் தாழ்ந்தவள். 2 வேலை செய்ய அவனால் முடியாதவிடத்து அவளால் எப்படி முடியும். குடும்பம் அவளுடையது, குழந்தைகள் அவளுடையது அதற்காக தனியாக கஸ்டப்பட முடியுமா.?

சுகங்களை பகிரும் துணைவன் சுமைகளையும் பகிரும் போது தானே அவளுக்கும் மகிழ்ச்சி. அவனும் ஒரு கை கொடுத்தால். 4 மணிக்கெழும்பி 8 மணிவரை சுடுதண்ணியாய் கொதிப்பவள். சற்று தாமதமாய் எழுந்து பிள்ளைகளையும் கவனிச்சு சந்தோசமாய் ஆரோக்கியமாய் இருக்கலாம் தானே. இது அவளது கேள்விகள்.

அவன் அதை உணர்ந்ததாய் தெரியவில்லை. எத்தனை நாள் தான் வாய்விட்டுக்கேட்பது அது தான் தனக்குள் புலம்புகிறாள். மணி 7 அடித்துவிட்டது. 6.30 க்கே பிள்ளைகளை எழும்பி குளிக்க வைத்து தயார்படுத்திவிட்டாள். தானும் தயாராகிவிட்டாள். 7 அடித்ததும் ரவி படுக்கையை விட்டு எழுந்தான்.

“உடுப்புகள் றெடியா”.. எந்த சேட் அயன் பண்ணினீர்”. அதற்குள் ஆயிரம் கேள்விகள்.

“ ஏன் நீங்களும் பேபியே, அயன்போட்ல கிடக்கு போய்ப்பாருங்கோ.. பிடிக்காட்டால் திரும்ப அயன் பண்ணுங்கோ.. அவள் பதில் சொல்லிவிட்டு பிள்ளைகளை அதட்டி உணவு ஊட்டிக்கொண்டிருந்தாள். ரவி குளித்து முடித்து வந்து மேசையில் வைத்திருந்த தேனீர்க் கோப்பையை தூக்கியபடி சென்று தொலைக்காட்சிப்பெட்டிக்குள் தன்னை நுழைத்துக்கொண்டான்.

அழைப்பு மணி அலறியது.

“கதவைத்திறக்கிறியளே” என்று குரல் கொடுத்தாள் “ போய்த்திறவும் உமக்குத்தான் ஆக்கள் வந்திருப்பினம்” என்றான் ரவி. அவனை முறைத்துப்பார்த்தபடி கதவைத்திறந்தாள் சுமதி. வாசலில் நின்றது பக்கத்துவிட்டு சுந்தரி..

“ வாங்கோ என்ன சுந்தரியக்கா இந்த நேரம்..” ஆச்சர்யமாக கேட்டாள். ஏனெனின் சுந்தரியும் இப்ப அவசரமாய் வேலைக்கு கிளம்பிக்கொண்டிருக்க வேண்டியவள். “ஒரு உதவி கேக்க வந்தனான் சுமதி” என்றாள சுந்தரி.

“என்னக்கா சொல்லுங்கோ” கருசனையோடு வினவினால் சுமதி.

“என்னெண்டால் கண்ணன் நேற்றொரு சின்ன கார் விபத்தில கொஞ்சம் காயப்பட்டிட்டார். இரவு ஒரு பாட்டியால வரேக்க நடந்திருக்குது அது தான் நீங்கள் உங்கட பிள்ளையளை பள்ளிக்கூடம் கூட்டீட்டு போகேக்க கபிலனையும் கூட்டீட்டுப்போறியளே? எனக்கு கொஞ்சம் வேலை கிடக்கு.. வழமையா அவர் பிள்யைளை வெளிக்கிடுத்த நான் சமைக்கிறனான்.. அவர் பிள்ளையளை கொண்டே விட்டிட்டுவர நான் வெளிக்கிட்டிடுவன் போகலாம்.

இண்டைக்கு இரவு கண் முழிச்சது என்னால வெள்ளெனவும் எழும்ப முடியேல்லை. பாவம் கண்ணன் நான் சமைக்காமல் போனால், பிறகு நாங்கள் வந்து அவசரப்படுவம் எண்டு ஏலாததோட எழும்பி சமைச்சு கஸ்டப்படுவார். அது தான் இவனை உங்களோட விட்டால் நான் சமைச்சு வைச்சிட்டு என்ர நேரத்துக்குப்போவன். உங்களுக்கு ஏலும் என்டால் சரி இல்லாட்டால் நான் கடையில எடுத்து வைச்சிட்டுப்போப்போறன்” என்று முடித்தாள் சுந்தரி.

“சே பிரச்சனையில்லை அக்கா இவை இரண்டு பேரும் இப்ப தயாராகிட்டினம் நான் போகேக்க கூப்பிடிறன் கொண்டு வந்து ஏத்திவிடுங்கோ. பின்னேரமும் நான் கூட்டீட்டுவாறன். கண்ணன் அண்ணைக்கு நல்லாகும் மட்டும் நான் கூட்டீட்டுப்போறன் அக்கா நீங்கள் கஸ்டப்படாதேங்கோ” என்ற சுமதி பெருமூச்சுத்தான் விட முடிந்தது.

சுமதிக்கு ஒரு விதத்தில் சுந்தரிமேல் பொறாமை தான். இயலாத நேரத்திலும் கண்ணன் அண்ணை அவாக்கு உதவி செய்ய நினைக்கிறார். அவர் கஸ்டப்படக்கூடாது என்று மனைவி எப்படித்துடிக்கிறா இதெல்லோ வாழ்க்கைத்துணை என்ற சொல்லிற்கே அழகு. இனி என்ன செய்வது மெளனமாய் விட்டுவந்த பாதி வேலையை தொடரச்சென்றாள் சுமதி.

ம் ஒற்றுமையாய் வாழுற அந்த குடும்பத்திற்கு இந்த உதவியை ஆவது செய்வமே என்று புறுபுறுத்த படி பிள்ளைகளை ஏற்றிக்கொண்டு பாடசாலை சென்றுவிட்டாள் சுமதி. மறுநாள் வழமையை விட சற்று முன்னரே எழும்பிய ரவி.. தன் வேலைகளை தானே செய்யலானான்.. அப்படியே பிள்ளைகளையும் கவனித்தான். அத்தோடு நின்று விடாமல். “சுமதி நான் வேணும் என்றால் இன்டைக்கு பிள்ளையளை கொண்டே விட்டிறன். நீர் வரேக்க கூட்டீட்டுவாருமன்.” என்றான் ரவி.

சுமதிக்கு ஒரே ஆச்சர்யம் என்ன இண்டைக்கு சந்திர சூரிய கிரகணம் ஏதுமே என்று முழித்தாள்.

“என்ன லூசு மாதிரி முழிக்கிறீர்.. இல்லை நேற்று சுந்தரி கண்ணனுக்கு சுகமில்லை என்ற உடனை வழமை குழம்பி கஸ்டப்பட்டு உன்னட்டை உதவி கேட்டு வந்திட்டா.. அவனுக்கு ஒன்று என்றதும் அவவின்ர நாளாந்த வாழ்க்கையில இத்தனை மாற்றம். ஆனால் எனக்கு ஒன்டென்றால் உனக்கு எந்த மாற்றமும் இருக்காதே. நான் நல்லாய் இருக்கும் போது கூட.. நலமற்றவன் மாதிரி நடந்திருக்கிறனே, இனியாவது கொஞ்சம் சுமப்பம்.

"என் குடும்பச்சுமைகளை சுமப்பதில் சுகம் காணுவம்” என்றபடி கண் சிமிட்டினான். அவனது பேச்சைக்கேட்க பாவமாய் இருந்தது சுமதிக்கு. இருந்தாலும் அது தானே உண்மை. சுகதேகியான அவன் இத்தனை நாளும் அவளில் சார்ந்தல்லவோ இருந்தான். குழந்தைகளோடு அவனையும் சேர்த்தல்லவோ அவள் சுமந்தாள். “சரி ரவி நீங்கள் கூட்டிக்கொண்டு போங்கோ நான்.. அடுப்பிலை வைச்சதுகளை இறக்கி வைச்சிட்டு ஆறுதலாய்ப்போறன்”. என்ற அவளின் வார்த்தையில் ஒரு தெளிவும் குளிர்ச்சியும் நிறைந்திருந்தது அதை கவனித்த போது அவனுக்கே உறைத்தது. இனியாவது விடிய விடிய வீட்டில வெடி விழாமல்.. அமைதியாய் நாட்கள் மலரட்டும் என்று கூறி பிள்ளைகள் கையைப்பிடித்தான்.

Monday, January 23, 2006

மனசுக்குள் என்ன..?!

"என்ர அப்பு ராசா. நீ யார் பெற்ற பிள்ளையோ தெரியாது மோனை, நல்லாய் இருப்பாய்." கொடுத்த சாப்பாட்டை கையில் வாங்கிய படி அந்த ஆச்சி தன்னை அறியாமலே எங்களைப் பாராட்டுறார். ஏன் ஆச்சி சாப்பிடாமல் இருக்கிறீங்கள். சாப்பிடுங்கோ. " கன காலமப்பு இப்படிச் சாப்பாடுகள் கண்டு.. நீ நல்லாய் இருப்பாய் மோனை" மீண்டும் மீண்டும் ஆச்சியின் வார்த்தைகள் எங்களைப் பாராட்டுவதிலையே குறியாய் இருக்குதே தவிர கொடுத்த உணவை கையால் தொட்டுக் கூடப் பார்க்க முயலவில்லை. இதை அவதானித்தப்படியே நான் சற்று அப்பால் நகர்ந்தேன்.

அப்படி என்ன தான் இருக்கு அந்த ஆச்சிக்கு எங்களில பாசம் காட்ட, மனதுக்குள் நானே எனக்குள் பேசி ஏக்கத்தை வளர்த்தப்படி மற்றவர்களுக்கும் சாப்பாடு பரிமாறினேன். அவை பரிமாறப்பட்டு முடிந்ததும் மீண்டும் அந்த ஆச்சியிடம் சென்று.. அப்ப ஆச்சி நாங்கள் போயிற்று வரப்போறம். " என்ன மோனை அவசரம், இஞ்ச கொஞ்சம் இரனப்பு". ஆச்சியின் கெஞ்சல் என் இதயத்தின் வாசல் வரை சென்று மனதை நெகிழச் செய்தது. இல்லை ஆச்சி நேரம் போகுது, இங்கால பக்கத்திலையும் ஒரு இடத்த போகனும். "அப்ப போயிட்டு வா மோனை. இஞ்சால திரும்பிப் போகேக்க போற வழியில என்னையும் ஒருக்கா வந்து பாத்திட்டுப் போ என்னப்பு". நிச்சயமா ஆச்சி.. நேரம் கிடைச்சா வருவன். கவலைப்படாதேங்கோ இப்ப தந்ததைச் சாப்பிடுங்கோ என்ன.

யாரோ ஒரு ஆச்சி. பார்த்து விட்ட அந்த ஒரு சில நொடிகளுக்குள் எத்தனை பாசம். போற வழில ஆச்சியைப் பாத்திட்டுத்தான் போறது. திடமாய் எண்ணியபடி அடுத்த இடம் நோக்கி பயணிக்கலானேன்.

" என்ன பிரியன் ஆச்சிக்கு உன்னைப் பிடிச்சிட்டுது போல". இல்ல மோகன்... ஆச்சிக்கு நாங்கள் கொடுத்த சாப்பாட்டை விட எங்களைக் கண்டது தான் மகிழ்ச்சியடா. ஆச்சிட கண்களைக் கவனிச்சனியே, அவா சாப்பாட்டை வாங்கும் போது அவை பனிச்சிட்டுது. அவாக்குள்ள ஏதோ பெரிய ஏக்கம் ஒன்று பொதிஞ்சிருக்குதடா. இப்படித்தான் அங்க இருக்கிற மற்றவைக்குள்ளும் இருக்கும் என்ன?. என் ஏக்கம் கலந்த வினவல் மோகனையும் சிந்திக்க வைச்சிருக்க வேணும். "உண்மை தான் பிரியன் நானும் அவதானிச்சனான். அங்கை இருக்கிற ஒவ்வொருத்தருக்கையும் ஒரு திரைக்கதையே இருக்கும் போல". நிச்சயமா மோகன். திரும்பி வீட்ட போகேக்க அங்க ஒருக்கா போயிட்டுப் போவமே?. " நேரம் இருந்தா போவம் பிரியன். நீ உதுகளைப் பற்றி யோசிக்காத இது தாண்டா இப்ப உலகம்." மோகன் சொல்லுறதும் சரி போலத்தான் தெரியுது. நிச்சயம் ஆச்சியைச் சந்திக்க வேணும் அவாக்குள் இருக்கிறதுகளை அறிய வேணும் என்ற உறுதியோடு சைக்கிளை மிதித்தேன்.

"வாங்கோ தம்பிமார் வாங்கோ. வருசம் என்டால் எங்களுக்கு பொழுது வராட்டிலும் நீங்கள் வந்திடுவியள் என்ற ஒரு எதிர்பார்ப்பு இருக்கிறது. உங்களைக் கண்டதில பெரும் மகிழ்ச்சி. பிள்ளைகள் இஞ்ச வாங்கோ யார் வந்திருக்கினம் என்று பாருங்கோ". இவ்வளவையும் வாசலிலேயே கேட்ட நமக்கு எங்களை எந்தளவுக்கு இந்த உள்ளங்கள் எதிர்பார்த்திருக்கின்றன என்ற உண்மை புரிந்தது. ஒருவேளை நாங்க வராமல் விட்டிருந்தால் அதை எண்ணி இவர்கள் எவ்வளவு வருந்தியிருப்பார்கள். உள்ளத்தில் அவற்றை எண்ணங்களால் உணர்ந்தபடி..வாங்கோ ரீச்சர் பிள்ளையளோட கொஞ்சம் கதைப்பம் என்று கூறி இல்லத்துக்குள் நுழைகின்றோம்.

நாங்கள் ரீச்சரோடு இல்லத்துக்குள் நுழைந்ததும். " பிள்ளையள் அண்ணாமார் புது வருசத்துக்கு உங்களைப் பார்க்க வந்திருக்கினம். வணக்கம் சொல்லுங்கோ" இது ரீச்சர். அதற்குப் பிள்ளைகள் எல்லோரும் சேர்ந்து, "வணக்கம் அண்ணாக்கள்" என்றார்கள். அவர்களின் ஓங்கி ஒலித்த அந்த வணக்கம் ஒன்றே அவர்களுக்குள் எங்களைக் கண்டத்தில் எவ்வளவு பூரிப்பு என்பதைச் சொல்லியது. ரீச்சர்.. நாங்கள் இவற்றைப் பிள்ளையளட்ட நேர கொடுக்க விரும்புறம். உங்களுக்கு ஆட்சேபனை இல்லைத் தானே. " என்ன இப்படிக் கேட்டுட்டீங்கள்.. நீங்கள் வருடா வருடம் எங்கட சிறுவர் இல்லத்துக்கு அன்பளிப்புகள் கொடுக்கிறனீங்கள் தானே. உங்களில எங்களுக்கு நம்பிக்கை இருக்கு. இந்த முறை நீங்களே அன்பளிப்புகளை நேர பிள்ளையளட்டக் கொடுங்கோ. அப்பதான் அவைக்கும் மகிழ்ச்சியா இருக்கும்". நன்றி ரீச்சர் எங்கட ஆதங்கத்தைப் புரிஞ்சு கொண்டிருக்கிறீங்கள்.

ஒவ்வொரு குழந்தைகளிடமும் நேரடியாக பரிசில்களையும் வழங்கிவிட்டு, கொண்டு சென்ற கணணியை இயக்கி அந்தச் சிரார்களுடன் இணைந்து சில கணணி விளையாட்டுக்களை விளையாடிவிட்டு விடைபெற ஆயத்தமானோம். தம்பி தங்கைகளா.. அண்ணாக்கள் போயிட்டு வரப்போறம் "ராரா" காட்டுங்கோ. இதைக் கூறி முடிப்பதற்குள்.. ஒரு சிறுவன் ஓடி வந்து.. "அண்ணா போகாதேங்கோ..எங்களோட கணணி விளையாட ஆக்களில்லை போகாதேங்கோ.. என்று ஏக்கத்தோடு கண்களில் நீர் ததும்ப கையைப் பிடித்துக் கொண்டான்". "சீலன் அண்ணாக்கள் தூரத்த இருந்து வருகினம். இப்ப போயிட்டு பிறகு வருவினம். இஞ்ச தான் இருப்பினம். இப்ப போயிட்டு வரட்டும் என்ன. அதுவரைக்கும் ரீச்சர் சொல்லித்தாறன் கணணில விளையாட்டு எப்படி விளையாடுறது என்று சரியா" ரீச்சரிடம் இருந்து வந்த வார்த்தைகளைக் கேட்டுவிட்டு, அரை மனத்தோடு வலிந்து உருவாக்கிய நம்பிக்கையோடு சிறுவன் கையை விட்டு ரீச்சரிக்கு அருகில் போய் நின்று கொண்டு ஏக்கத்தோடு பார்க்கத் தொடங்கினான். அவன் பார்வைக்காகவே அங்கு தங்க வேண்டும் போல் இருந்தது. பாவம் அந்தப் பிஞ்சுக்குள் உணரப்படும் தனிமைக்கு யார் கொடுப்பார் ஆறுதல். பெற்றவர்களா..?? உறவினர்களா..?? இல்லை உலககெங்கும் சிறுவர்களைப் பராமரிக்கிறம் என்று கூறித்திரியும் கனவான் நிறுவனங்களா..??!

புதுவருடமும் அதுவுமா எங்கும் ஏக்கங்களும் வினாக்களுமே மீதமாக மீண்டும் வீட்டை நோக்கிப் பயணிக்க ஆயத்தமான போது.. முதியோர் இல்லத்து ஆச்சியின் எண்ணங்கள் வந்து மோதிச் சென்றன. மோகன் வீட்ட போகேக்கை அந்த ஆச்சியோட ஒரு நாலு வார்த்தை பேசிட்டுப் போவம் என்ன?. " என்ன பிரியன் ஆச்சியின் பாசம் உன்னை மிகவும் பாதிச்சிட்டுப் போல.. சரி சரி போகேக்க ஒருக்கா போயிட்டுத்தான் போவமே".

சைக்கிள் முதியோர் இல்லத்தை நெருங்குகிறது. கண்கள் ஆச்சியைத் தேடத் தொடங்கின. ஆச்சி வாசலில் எங்களை எதிர்பார்த்தபடி அதே சாப்பாட்டுப் பொட்டலத்தோடு காத்திருக்கிறார். சைக்கிளை மரத்தடியில் நிறுத்திவிட்டு, ஆச்சியை அணுகி.. என்ன ஆச்சி இன்னும் சாப்பிடல்லைப் போல. எங்களையோ எதிர்பார்த்து இருகிறீங்கள்?. "ஓம் மோனை உன்னைத்தான் எதிர்பாத்திருக்கிறன். எனக்கு ஒரு உதவி செய்வியோ மோனை?" என்ன செய்யனும் கேளுங்கோ ஆச்சி.

"எனக்கு ஒரே ஒரு மகள். இங்க ஊருக்கத்தான் கலியாணம் கட்டினவள். மாப்பிள்ளை வெளிநாடு போய்.இப்ப எல்லாரும் லண்டனில இருக்கினம். என்ர பேரப்பிள்ளையளும் இங்க தான் பிறந்தவை. நான் அவையளை 10, 15 வயது வரை வளர்த்தனான் மோனை. இப்ப லண்டன் போய் 5 வருசம். ஒரு கடிதம் கூடப் போடுறதில்லை. இங்க ஆமிக்காரன் வரேக்க என்ர வீட்டை குண்டு வைச்சு உடைச்சுப் போட்டான். நான் அநாதையா நிக்கிறன் இப்ப. எனக்கு ஊரில காணி பூமி இருக்கு. அதுவும் இப்ப இவன் ஆமிக்காரன்ர வளவுக்க இருக்காம் என்று அங்க போக விடுறாங்கள் இல்லை. அதுதான் நான் போக இடமில்லாம உறவினர்களும் கவனிக்காம விட இங்க வந்திட்டன் மோனை.

என்ர தங்கச்சிட மகன் செல்வராசா நல்லூரடியில முத்திரைச்சந்தியில கடை வைச்சிருக்கிறான். அவன்ர பிள்ளையள் எல்லாம் லண்டனிலையாம் என்று அறிஞ்சன். அவையளுக்கு என்ர மகள் வீட்டோட தொடர்பு இருக்கும். அதுதான் ஒருக்கா இவன் செல்வராசாட்ட என்னை வந்து பார்த்திட்டு போகச் சொல்லுறியோ மோனை." என்று தன் ஆதங்கத்தை கொட்டிய ஆச்சி மீதியையும் தொடர்ந்தார்..

"இவள் என்ர மகள் காசு அனுப்ப வேணாம். நாலு வரில ஒரு கடிதம் போடலாம் எல்லோ. என்ர பேத்திமார் பேரன்மார் என்னை மறந்திட்டுதுகள். முந்தி இங்க இருக்கேக்க அம்மாச்சி அம்மாச்சி என்று முன்னும் பின்னும் காலுக்க நிண்டதுகள். இப்ப எல்லாம் மறந்திட்டுதுகள். அம்மம்மாக்கு எண்டு நாலு வரி எழுதக் கூட அவைக்கு நேரமில்லை. எனக்கும் எவ்வளவு ஆசைகள் இருக்கும். வயசு போன நேரத்தில என்ர பிள்ளை என்னைப் பராமரிக்கும் என்று சொல்லிச் சொல்லி வளர்த்தன். காலம் இப்படிச் செய்து போட்டுது மோனை. எப்படி இருந்த நான் இப்படி அநாதையா இங்க சீரழியுறன். என்னை யார் பாப்பினம் சொல்லு ராசா. நீ பாக்கிறாய் தானே மோனை, என்ர கோலத்தை" என்று ஏக்கங்களோடு தன் சொந்த எதிர்பார்ப்புக்களை எல்லாம் சொல்லி முடித்ததும் ஆச்சியின் கண்களில் இருந்து கண்ணீர் கன்னத்தின் வழி வழிந்தோடியது.

சரி சரி.. அழதேங்கோ ஆச்சி. உங்களைப் போலத்தான் பல பேர் இங்கையும் இன்னும் கொஞ்சப் பேர் பிறநாட்டுக்குப் பிள்ளைகளை நம்பிப் போய் அங்கும் அநாதைகளா அன்புக்கும் பராமரிப்புக்கும் ஆளில்லாமல் தவிச்சுக் கொண்டு இருக்கினம். நிச்சயமா ஆச்சி உங்களுக்கு நான் உதவி செய்யுறன். உங்கட தங்கைச்சிட மகனைச் சந்திச்சு விபரம் சொல்லுறன். எதுக்கும் உங்கட விபரங்களைத் தாங்கோ. " ஓம் ராசா என்னைப் பற்றிச் சொல்லுறன் எழுதிறியோ மோனை". ஓம் ஆச்சி.

ஆச்சிடம் விபரங்களைப் பெற்றுக்கொண்டு.. அப்ப ஆச்சி நாங்கள் போயிட்டு வரப் போறம். நீங்கள் கவலைப்படாமல் இருங்கோ. சாப்பிடுங்கோ ஒழுங்கா. நாங்கள் உங்கள் மகளோட உங்களுக்கு தொடர்பு ஏற்படுத்த இயன்றது செய்வம். சரியா ஆச்சி. " நீ யாற்ற பிள்ளையோ தெரியாது மோனை.. என்னில இவ்வளவு பாசம் வைச்சிருக்கிறாய். என்ர சொந்தப் பிள்ளை என்னை மறந்திட்டுது. சரி மோனை நீங்கள் கவனமா போயிட்டு வாங்கோ. இஞ்சால வந்தா இந்த ஆச்சியையும் பார்க்காமல் போகாத மோனை". நிச்சயமா ஆச்சி, இங்கால வரமுடியல்ல என்றாலும் ஒரு கடிதமாவது போடுவன். கவலைப்படாதேங்கோ. என்று உறுதிமொழி அளித்து விட்டு ஆச்சியிடம் இருந்து நானும் நண்பன் மோகனும் விடைபெற்றுக் கொண்டோம். அப்போது கூட ஆச்சியின் கண்கள் பனித்தபடியே இருந்தது. நாங்கள் வெளியேறி மறையும் வரை ஆச்சி எங்களை நோக்கியபடி வாசலிலேயே நின்று கொண்டிருந்தார். எங்களைச் சந்தித்ததன் மூலம், தனக்குள் வைத்திருக்கும் சுமைகளில், கொஞ்சத்தை என்றாலும் இறக்கி வைச்ச சுகமாவது நிச்சயம் அவருக்குள் இருக்கும் என்ற நம்பிக்கையோடு அவருக்காக நான் முத்திரைச்சந்தி நோக்கி பயணிக்கலானேன்.


ஆக்கம்: தேசப்பிரியன்

Monday, January 16, 2006

ஒரு விவசாயின் ஏக்கம்.

"எனை அம்மா உவர் எங்கட மானத்தை வாங்காமல் இருக்க மாட்டாராமோனை"

மோட்டார் வண்டியை விட்டதும் விடாததுமாய் எனது இளைய மகனின் வார்த்தைகள் என்னைக் குறிவைத்தன.

"ஏன்டா நடு இராத்திரியில பே மாதிரி உவடம் எல்லாம் அலைஞ்சு போட்டு வந்து சிவனே என்றிருக்கிற அந்த மனிசனை வம்புக்கிழுக்கிறாய்.. என்னடா பிரச்சனை?, என்ன நடந்தது? "

எனது மனைவியும் தன்பங்கிற்கு கேள்வியை அடுக்குகிறாள்.

"உன்ர மனிசனுக்கு வேறை வேலை என்ன? அதுகள் சுளை.. சுளையா பணம் அனுப்புதுகள் செலவு செய்து கொண்டு சும்மா இருக்கிறதுக்கு. குளத்தடி ஆலமரத்திக்கு கீழ இருந்து புலம்பல், இவருக்கு சிநேகிதங்கள் வேறை ஆமாப் போட்டுக்கொண்டு, பக்கத்தால போனவங்கள் கேட்டிட்டு வந்து நக்கலடிக்கிறாங்கள்."

மதியம் மரத்தடியில் சிநேகிதர்களுடன் நான் பேசினதை எவனோ கேட்டுக்கொண்டு போய் பத்தவைச்சிட்டான். என்ர வேதனையைப்புரிய யாருமே இல்லை இப்ப அமைதியாய் இருக்கிறது தான் எனக்கு நல்லது.

"ஏன்டா அவர் புலம்பினதுக்கும் உனக்கும் என்ன சம்பந்தமாடா?? ஏன்டா நீ புலம்புறாய் இப்ப??"

என்ர மனைவியும் அவனை விடுவதாய் இல்லை.

"ஓமனை ஓம் உன்ர மனிசன் பெரிய உளைப்பாளி, விவசாயி அவருக்கு பட்டங்களை கொடுத்துக் கொண்டே போகலாம், அந்த விவசாயம் எத்தனை நாள் எங்களுக்கு வயித்திற்கு அரை வயிற்குச்சாப்பாடு போட்டது. அவரால சும்மா இருக்கேலாதாம் ஓடியாடி வேலை செய்த உடம்பாம் சும்மா இரு என்ட சாக்குப்பத்திப்போச்சாம். கால்வயிறு கஞ்சி குடிச்சாலும் குனிஞ்சு நிமிந்து உளைச்சுக்குடிக்கிறது போல வராதாம்... பிள்ளையள் அனுப்பிறதில சாப்பிட கூசுதாம் கேளன் பின்ன. அவனவன் உளைச்சுத்தர அளில்லையே என்று அழுகிறான் இவருக்கு சும்மா இருந்து சாப்பிட முடியேல்லை" அடுக்கிக்கொண்டே போகிறான் மகன். சின்னப்பிள்ளை என்று செல்லம் கொடுத்தது தப்பாய்ப்போச்சு. காணாததிற்கு தமக்கை தமையன் என்று வெளிநாட்டில இருந்து காசனுப்ப கண்ட படி பேசவும் வெளிக்கிட்டிட்டான். தகப்பன் கிள்ளுக்கீரையாய்ப்போயிட்டன்.

"அட பழையபடி வேதாளம் முருங்கை மரத்தில ஏறுது போல.. சரி மோனை நீ வா சாப்பிட " அத்தோடு என்ர மனைவி அமைதியாகிவிட்டாள்.

நாளையிண்டைக்கு தைப்பொங்கல். நான் ஒரு விவசாயி என்ர நிலத்தில் ஏர் எடுத்து மாடு பூட்டி உழுது தான் எங்கள் குடும்பம் வாழ்ந்தது. அது தான் எங்கள் முக்கிய தொழில் எனக்கு ஜந்தாறு பிள்ளைகள் எனது உளைப்பு குடும்பச்செலவிற்கே சென்று விடும் வறுமை தான் யாருக்கில்லை?? கஸ்டப்பட்டுத்தான் வளர்த்தனான் எவ்வளவு கஸ்டப்பட்டாலும் படிப்பை நிறுத்தவில்லை. கால் வயிறு கஞ்சி கொடுத்து புத்தகங்கள் வாங்கிப்படிக்க வைத்திருக்கிறன். அப்ப எல்லாம் தாழ்வாய்ப்படாத விவசாயம் இன்று என் பிள்ளைகளுக்கு மதிப்பற்ற ஒன்றாகிவிட்டது. இவை எல்லாம் ஒரு நேரம் என்னொட கூட நின்று பாத்தி கட்டின ஆக்கள் இப்ப சேறு காணாதவை போல எட்டி நடக்கினம். எனக்கோ வயிறு பத்தியெரியுது.

எனது மூத்தமகளிற்கு வெளிநாட்டில் இருந்து வந்த சம்பந்தத்தால் அடுத்தடுத்த பிள்ளைகளும் வெளி நாடு செல்லும் அளவிற்கு எங்களுக்கு நிலமை மாறிவிட்டது. மகிழ்ந்தேன் எங்கள் வாழ்க்கை முறை மாறியது சாதாரன மண் குடிசையில் வாழ்ந்த நாங்கள் 5..6 அறையில் வீடு கட்டினோம் இன்னும் மகிழ்ச்சி தான். ஆனால் செல்வம் வந்த உடன் விவசாயம் ஏன் இனி அதை விட்டு விடச்சொல்லி என் பிள்ளைகள் சொன்ன போது நான் ஆடிப்போய்விட்டேன். அவர்களது அறியாமையை தீர்த்து வைக்க என்னால் முடியவில்லை. விவசாயம் செய்து சாப்பிடிற அளவில அவையில்லையாம். பிள்ளையள் வெளிநாட்டில தகப்பன் வயலுக்க என்று சனம் பழிக்குமாம் சனத்தி . செல்வம் வந்த உடன் விவசாயம் அவர்களிற்கு கசந்தது எப்படி..?? விவசாயி என்பவம் தாழ்வானவனா..?? என்னைப்போல் விவசாயிகள் சேற்றில் இறங்கி ஏர் பிடிக்காவிடின் எந்த செல்வந்தனும் உயிர் வாழமுடியுமா..?? அதை உணர மறுக்கின்ற என் பிள்கைள். எங்கள் ஊரில் இது தற்பொழுது நாகரிகமாகிவிட்டது குடும்பத்தில் ஒருவராவது வெளிநாட்டில் இருக்கிறார்கள். அவர்களது பணம் இங்குள்ளவர்களை தலைகால் தெரியாது ஆட வைக்கிறது. நாள் ஒரு உடுப்புடன் மோட்டார் வண்டியில் சுற்றித்திரியும் என் இளைய மகனிற்குக்கூட நான் விவசாயம் செய்வது கெளரவக்குறைவாய் போய்விட்டது. இதை எடுத்துச்சொல்ல என் மனைவியோ.. " ஏனப்பா நீங்கள் உளைச்சு சாப்பிடிற நிலையில யாரும் இல்லை வயசு போன நேரத்தில ஏன் கஸ்டப்படுறியள் பேசாமல் உங்கின படுங்கோ"...

தரிசி பற்றிப்போனது என் நிலம் மட்டும் அல்ல என் மனசும் தான். அறியாமையில் மூழ்கியிருப்பது எழுதப் படிக்கத்தெரியாதா நானா..?? இல்லை நாலெழுத்துப்படித்து இன்று நல்ல நிலையில் இருக்கும் என் பிள்ளைச் செல்வங்களா எனக்கு புரியவில்லை. தைப்பொங்கல் பொங்க தடல் புடலாய் ஆயத்தங்கள் நடக்கின்றன எதற்கு?? ஒரு உண்மை விவசாயின் உணர்வுகளைப்புரிய மறுக்கும் இவர்கள் வெறும் சம்பிரதாயத்திற்காக பொங்கல் கொண்டாடி என்ன பயன்..?? என்னுள் பெருமூச்சுத்தான் இதை பலதடவை இவர்களிற்கு புரியவைக்க முயன்றும் என்னால் முடியவில்லை பலதடவை அவமானப்பட்டுப்போனேன் இன்று என்மகன் வந்து பேசிய தொனியைப்பார்த்தீர்கள் தானே விவசாயம் பற்றி நான் கதைத்தால் என் நிலை இது தான்.?? நாலு பேருக்கு அன்னம் போடும் ஒரு விவசாயின் வீட்டில் இருந்து அரிசிவாங்க கடையேறும் மனைவியும் பிள்ளைகளையும் காண்கையில் எப்படி ஒரு விவசாயின் மனதில் மகிழ்ச்சி பொங்கும்.? இந்த தைப்பொங்கலை எப்படி நான் மனமகிழ்ந்து கொண்டாடமுடியும். எனது சொந்த நெல்லை அறுத்து அதில் பொங்கிப் படைப்பதில் உள்ள சுகம் இனி ஒரு முறை என்னைச்சேருமா ஏக்கம் தான் மிச்சம்....??

Friday, December 30, 2005

உண்மை உறவுகள்..!

சரவணனிற்கு தவறுதலாய் தான் மண்டை உடைந்தது, இருந்தும் தான் தள்ளியதால் தான் உடைந்தது என்ற கவலை கலந்த பதட்டம் கலாவிற்குள். 999 ற்கு அடிக்கச் சென்றாள்.

"இஞ்ச கலா அதொன்டும் பெரிய காயம் இல்லை பேசாமல் விடும், இப்ப அவங்களுக்கு கடிச்சால் ஆயிரம் கேள்வி கேட்டுக்கொண்டிருப்பானுகள். அவனது பேச்சைக் கேட்கையில் தலைக்கேறின வெறி முற்றாய் முறிஞ்சிருக்க வேணும் என்ற எண்ணம் கலாவிற்குள் எழுந்தது. சரவணனின் பேச்சையும் மீறி 999 ற்கு அடித்து அம்புலன்சிற்கு சொல்லிவிட்டு வீட்டுச்சாவி மற்றும் ஏனைய முக்கிய பொருட்களை எடுத்து கைப்பையில் போட்டுக்கொண்டு அம்புலன்ஸ் வர போவதற்கு தயாரானாள். சரவணனின் தலையில் இருந்து கசிந்து கொண்டிருந்த இரத்தத்தை நிறுத்த வெள்ளைத்துணியினால் கட்டி தன்னால் முடிந்த முதலுதவியைச் செய்து முடித்திருந்தாள்.

இரண்டு ஆண்களும் ஒரு தாதியும் அம்புலன்சில் வந்து இறங்கினார்கள். தாதியாக வந்த ஒரு வெள்ளைக்கார பெண்மணி என்ன நடந்தது என்று கேட்க, கலா நடந்ததை சொல்ல முன்னர். " ஒரு சிறிய விபத்து" என ஆங்கிலத்தில் கூறிமுடித்தான் சரவணன். சரவணனைப் பார்க்க கலாவிற்கு பாவமாய் இருந்தது. ஏன் பொய் சொல்கிறான் என்னைக்காக்கவா இல்லை தன்னைக்காக்கவா? என்ற கேள்வி அவளிற்குள்.

போதையில் வந்து கலாவிடம் வாலாட்டிய சரவணனிடம் இருந்து தன்னக்காக்க நடந்த கெடுபிடியில்.. அவள் அவனைத் தள்ளியபோது அருகில் இருந்த நிலையுடன் அவன் மோதியதால் ஏற்பட்ட காயம். அதில் இருந்து தான் இரத்தம் கசிந்து கொண்டிருந்தது. உண்மை தெரிந்தால் பொலிஸ் கேசாக் கூட மாறலாம்.

பிரயாணத்தின் நடுவே "கலோ றூபி... நான் அண்ணி கதைக்கிறன். அண்ணாவை ஆஸ்பத்திரிக்கு கொண்டு போறன், உனக்கு நாளைக்கு ஏதாவது சோதினை இருக்கோடா இல்லை எண்டா ஒருக்கா வா. இதில கை கில் யெனரல் கொஸ்பிரல் என்று தான் நினைக்கிறன். எதுக்கும் போன உடனை போன் பண்ணிறன். வண்டியைப் பாத்து ஓட்டு அவருக்கொண்டும் இல்லை சரியேடா.. பிறகு உன்னை தனிய வாட்டில பாக்க முடியாது " ... " சரி அண்ணி வந்திடிறன் பதட்டப்படாதேங்கோ இப்ப எனக்கு ஒரு சோதினையும் இல்லை சும்மா தான் நிக்கிறன். " அவன் ரூபன் சரவணனின் தம்பி படிப்பதற்காய் வந்தவன் விடுதி ஒன்றில் தங்கி நின்று படிக்கிறான்.

வைத்தியசாலைக்கு வந்த ரூபன் நேரடியாகச் சென்று அண்ணன் சரவணனை சந்தித்தான், அவனுடன் காரசாரமான வாக்குவாதம். " அம்புலன்ஸைக்' கூப்பிட்டு ஆஸ்பத்திரிக்கு வந்தாச்சு இனி வக்கிலக் கூப்பிட்டு கோட்டுப்படி ஏறுவது எப்பண்ண?.. பாவம் அண்ணி
உன்னை கலியாணம் செய்ததைவிட என்ன தம்புச்செய்தவா?.. உன்ர வாழ்க்கையையும் அழிச்சு அவவின்ர வாழ்க்கையையும் அழிச்சு என்னையும் அநாதையா நடுத்தெருவில நிக்கவிட்டிட்டியே.. இதை நினைச்சா உனக்கு வெட்கமாய் இல்லையே??" ஆத்திரம் தீரக்கத்தி விட்டு வராண்டாவில் அமர்ந்திருந்த கலாவிடம்.

" என்ன அண்ணி செம போடு போட்டிருக்கிறயள் போல கிடக்கு இழைப் போட்டிருக்கு... அண்ணா மன்னிப்பெல்லாம் கேக்கிறார்.. நீங்கள் பாவமாம் நிறைய கஸ்டப்படுத்திப் போட்டாராம்.. நினைக்க வெட்கமாயக்கிடக்காம்.. கதையைப்பாத்தா அடிபலமாய் விழுந்திட்டுது போல கிடக்கு?? இதை முதலிலையே செய்திருந்தால் நான் ஏன் கடைச்சாப்பாட்டில கிடந்து காயிறன். உங்களோடயே இருந்திருப்பன் எல்லே. அவற்ற தொல்லை தாங்காமல் தானே என்னை விடுதிக்கணுப்பினியள். போங்கண்ணி உங்களில எனக்கு கோவமும் தான்" மெல்ல சலுத்துக் கொண்டான் ரூபன்

"எட விசரா நான் ஒன்டும் செய்யேல்லை. உன்ர கொண்ணனோட சரியாக்கதைச்சு இரண்டு கிழமையாச்சு. தினமும் சரியான வெறி. நான் வேலையால வந்து என்ரபாடு.. பத்துப்பதினொன்டுக்குப் பிறகு வருவார். நான் சாப்பாட்டைப் போட்டா போய் படுத்திடுவார்.
நான் இல்லாட்டாப் போட்டுச் சாப்பிடுவார். இப்படி தினம் விளையாடிக் கொண்டிருந்தார். இண்டைக்கு வேலையால வந்து களைப்பில படுத்திட்டன் சமைக்க நேரம் போட்டு. அறக்க பறக்க என்டு சமைச்சுக் கொண்டிருக்கிறன் அடுப்படிக்க வந்து ஏதோ தனகிக்கொண்டு நிண்டார். பேசாமல் நான் என்ர பாட்டில வேலை செய்திட்டிருக்க. என்ன உம்.. என்றிருக்கிறாய் கதையன் என்டு அடிக்க வந்தார். தடுத்துப்போட்டு தள்ளிவிட்டன் நிலையில போய் மோதினார், அதில கிடந்த ஆணி ஒன்று கிழிச்சுப்போட்டுது, அது தான் கொண்டந்தனான்" என்று விரக்தியோடு சொல்லி முடித்தாள் .

"நல்ல வேலை செய்தியள் அண்ணி.. நீங்களும் பாவம் அண்ணாவை என்ன செய்யிறது எனக்குத் தெரியேல்லை. பாப்பம் இனிக் குடிக்கமாட்டன் என்றார்" ஏக்கத்தோடு கூறினான் ரூபன்.

கலா துடுக்கோடு சுத்தித்திருந்த ஒரு சிட்டு. இப்படி ஒரு வாழ்க்கை அமையும் என்று ஒரு நொடி கூட கற்பனை பண்ணியிருக்கமாட்டாள். உயர்தரம் முதலாவது முறை எழுதி பெறுபேறு காணாதென்று இரண்டாது தடவை தோற்றுவதற்காய் விண்ணப்பித்துவிட்டு படித்துக் கொண்டிருந்தவள். திடீரென கூடிவந்த திருமணம். லண்டன் மாப்பிளை சரவணன். 10ப்பொருத்தமும் பொருந்திச்சாம் நல்லாய் இருப்பாளாம். பெற்றார்களின் ஆவல் அவளை சம்மதிக்க வைத்தது.

லண்டன் குடியுரிமை பெற்ற சரவணன் அவளை இலங்கைக்கு வந்து மணம் முடித்து வர எந்தப் பிரச்சனையும் இருக்கவில்லை. திருமணமான புதிதில் சரவணன் இலங்கையில் இருந்த ஒரு சில வாரங்களில் இருவரைப்பற்றியும் பேசி தாங்களே அறிந்து கொண்ட நேரம். குடி புகை பற்றி கலா கேட்டபோது முன்பு பழக்கம் இருந்ததாகவும் பின்னர் நிறுத்திவிட்டதாகவும் சரவணன் கூறினான். நேர்மையாக உண்மையைக்கூறிய அவனை அவளிற்கு அந்தக்கணங்கள் மிகவும் பிடித்திருந்தது. " எல்லாம் அளவோட இருந்தால் நல்லது தானே... இதில மற்றவைக்கு இடையூறுகள் வராமல் இருக்கவேணும்.... நீங்கள் இப்ப விட்டிட்டியள் என்றதில மகிழ்ச்சி.." அவனைப் பாராட்டினாள்.

திருமணம் முடிந்து ஒரு சில மாதங்களின் பின்னர் சகல சம்பிரதாயங்களையும் சட்டரீதியாக முடித்து லண்டன் வந்து சேந்தாள் கலா.
புதிய நாடு, புதிய சூழல் வாழ்க்கை மாற்றம், பிடித்த கணவன் என்று இடர்களிற்குள்ளும் சிறிதுகாலம் ஆனந்தமாய் போனது வாழ்க்கை.
அவர்களது மகிழ்ச்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க வந்த நிகழ்வாய் ஒரு அழைப்பு. திருமண விருந்து என்று இருவரையும் உறவினர்கள் அழைக்க அங்கு சென்ற சரவணனிற்கு மறுபடி அரங்கேற்றம். மெல்ல மெல்ல கைவிட்டவற்றை எல்லாம் கையில் எடுத்தான். ஆரம்ப நாட்களில் அளவோடு நின்றான். அதால் அவளிற்கு எந்தப்பிரச்சனைகளும் இல்லை. சிறு வருத்தம் இருந்தாலும் அதை அவள் சரி செய்து கொண்டாள்.

நாளாக நாளாக நிலமை முற்றியது சரவணன் மறுபடி மதுவிற்கு தன்னை முற்றாக அடிமையாக்கிக்கொண்டான். அது மட்டுமல்ல கலாவை தாக்கவும் செய்தான். முதன்முறை எதுவும் அறியாமல் அவனிடம் அடிவாங்கிய கலா என்ன செய்வதென்று அறியாது திகைத்து நின்றாள். அதன் பின்னர் தன்னை சுதாகரித்துக்கொண்டாள் அவனை எதிர்கொள்ளத் தயாரானாள். இப்படித்தான் ஒருநாள் முழுப்போதையில் வந்து அவளை அடிக்க முயன்றவனை தும்புத்தடியால் விளாசு விளாசென விளாசிவிட்டு கட்டிக்கட்டிலில் போட்டுவிட்டாள். இவற்றை எல்லாம் பார்த்திருந்த ரூபன் சற்று குழப்பமடைந்தான் படிப்பில் கவனம் செலுத்த முடியாது தவித்தான். சரவணனின் கூத்து அப்போதெல்லாம் ஏதாவது ஒருவிதத்தில் தினமும் வீட்டில் கலகத்தையே கொண்டு வந்தது. அதனால் தான் கலா ரூபனை விடுதியில் தங்க வைத்தாள். எப்பாவது ஒருநாள் இவர்களை ரூபன் வந்து பார்த்துச்செல்வதுண்டு. அன்பான அண்ணி அண்ணன் அருகில் இருந்தும் அநாதையாய் தனியாக வாழவேண்டிய துர்ப்பாக்கிய நிலை ரூபன்.

சரவணனிற்கும் கலாவிற்குமிடையிலான இடைவெளி நீண்டுகொண்டே போனது. சரவணனது குடிப்பழக்கத்தை கண்டிக்கும் தகப்பனும் கலா அவனை அடித்தாள் என்பதைக்கேட்டு கலாவிற்கு சாபமழை பொழியும் தாயும் என்று சரவணன் குடும்பம் ஒருவிதமாக இருந்தது.
தானாக வேலையைத்தேடி தனது வாழ்க்கையை தானே தீர்மானிக்க தொடங்கிவிட்டாள் கலா. குடிவெறி அதனால் அவளிடம் சச்சரவு இதைவிட குறை சொல்லும்படி சரவணனிடம் எதும் இல்லை. ஆனால் அவனது போதைக்கு அவள் காயங்களைச்சுமக்க முடியாது என்ற முடிவோடு அதன் வலியை அடிக்கடி அவனிற்கு உணர வைத்தாள் கலா இன்றும் கூட அப்படித்தான். அழகாய் பூத்துக்குலுங்க வேண்டிய இளம் தம்பதிகளின் வாழ்க்கை இப்படி விடையின்றி விரிந்து சென்றது.

பாவம் சரவணன் இப்படி படுக்கவைத்து விட்டோமே என்ற கவலை அவளினுள். அவளது வாழ்க்கை நாலுபேர் சிரிக்கிற நிலையில் இருக்கிறதே என்று வருத்தம். அவர்களிற்குள் உள்ள விரிசலை சரி செய்ய முனையாத உறவுகள் விடுப்புப் பார்ப்பதில் துடியாய் நின்றார்கள். அதனால் உறவுகள் மேலும் அவளிற்கு வருத்தம். தான் உண்டு தன்ர பாடு உண்டு என்று ஒதுங்கியே இருந்தாள். அவர்களது வெற்றிலை வாய்க்கு இவள் அவலாக விரும்பவில்லை.

இன்றைய பிரச்சனை கொண்டு வந்த தீர்வு. இனிமேல் குடிப்பதில்லை என்ற முடிவுக்கு சரவணன் வந்திருந்தான். தான் செய்த தவறுகளுக்காய் கலாவிடமும் ரூபனிடமும் அழுது மன்னிப்புக்கேட்டான். இதை எந்த அளவு நம்புவது கலாவிற்கு சிறிய தடுமாற்றம் நடப்பதை எதிர்கொள்ளத் தயாராகிவிட்டாள். அவனை துண்டு வெட்டி வீட்டிற்கும் கூட்டி வந்து விட்டார்கள்.

சரவணன் மருந்துவமனையில் அனுமதிக்கப்பட்டதையும் மண்டை உடைந்ததையும் அறிந்த சரவணனின் பெற்றோர் துள்ளிக்குதித்தார்கள். " ஒரு பொடிச்சி மண்டையை அடிச்சு உடைச்சு ஆஸ்பத்திரில போடுவாள் அதைப்பாத்திட்டு சும்மா இருக்கவேணுமே.. அப்பவே சொன்னான் உந்த புத்தகம் தூக்கினதுகளை கட்டாதேங்கோ.. என்னை மாதிரி ஒன்டைக்கட்டியிருந்தால் அடிச்சா என்ன பிடிச்சா என்ன அழுதுபோட்டு அமைதியா இருந்திருக்கும்.. இது நாலு எழுத்துப்படிச்சதை கட்டிவைச்சு அது வேலை வெட்டி செய்யிறன் என்ட உடனை அவன்ர மண்டையை உடைச்சுப்போட்டுது. அங்க ஒருத்தன் பாத்துக்கொண்டிருக்கிறான். அண்ணனுக்கு அடிச்சவளை வெட்டிப்போட்டு ஜெயிலுக்குப் போக வேண்டாமே..?? " அறியாமை நிறைந்த ஒரு அப்பாவித் தாயின் ஏக்கங்கள் அப்படி வெளிப்பட்டன... அவள் ஏன் இந்த நிலைக்குத் தள்ளப்பட்டாள் என்றதை உணர அவர்கள் தயாராக இல்லை.

கலாவிற்கு சிரிக்கிறதா அழுகிறதா தெரியவில்லை. சரவணனைப் பார்த்தாள் அவன் தெளிந்திருந்தான், தனது தவறிற்கு தக்க தண்டனை தன் மனைவி கொடுத்திருந்தாள் அதை அவனும் ஏற்றிருந்தான் தாயிடம் கூறினான். "அம்மா உன்ர பிள்ளை நான் குடிச்சு கொண்டு என்னையே நான் அழிச்சுக்கொண்டிருந்தா நீ பாத்திட்டு சும்மா இருப்பியா..?? உன்னை மாதிரித்தானே கலா என்னை திருத்தியிருக்கிறாள். ஏன் பேசிறாய்?? இனியாவது நாங்கள் வாழலாம் மகிழ்ச்சியாய் மூன்று வருசங்கள் வீணாய் போயிட்டுது இனி இப்படி ஒரு தவறை நான் செய்ய மாட்டன். சும்மா கத்தாதையணை." உறுதியோடு அழைப்பைத் துண்டித்தான்.
கலாவின் மகிழ்ந்தாலும் சற்று கனத்தது வன்முறைக்கு வன்முறை தான் தீர்வா?? அவளது மனதில் பெரிய கேள்வி?.

பெட்டி படுக்கைகளுடன் ரூபனும் வாசலில் நின்றான். " அண்ணி இனி நீங்கள் அடிச்சுக் கலைச்சாலும் நான் போகமாட்டன். நேரத்திற்கு நேரம்.. படம் பாத்தது காணும் புத்தகத்தை எடுடா என்ற அந்த அன்பான அதட்டலும் அடிக்கடி என்னை மேற்பார்வை செய்யும் அண்ணாவின் அன்பும் எனக்கு வேணும். அநாதையா என்னால வாழமுடியாது" ஓடிச்சென்று இருவரையும் அணைத்துக்கொண்டு.. அவனும் குதூகலத்தில் பங்கெடுத்தான். கலாவிற்கு சரவணன் மேல் நம்பிக்கை மறுபடி சற்று அதிகரித்திருந்தது.

Tuesday, December 27, 2005

சற்றிங் சாலையில்....

காலை நேரம் பல்கலைக்கழக வாசலில் ஒரே கூட்டம். பஸ்ஸில் இருந்து இறங்கிய சங்கர் ஓட்டமும் நடையுமாய் அவசரமாய் போய்க் கொண்டிருந்தான். அவனை வாசலில் கண்டுவிட்டு ஓடி வந்த துசி " டேய் சங்கர் எங்க போறா... ஒப்படை (அசைன்மெண்ட்) கொடுக்கிறதுக்கோ, நில்லு நானும் வாறன்". அதுக்கு சங்கர்.. இல்லையடாப்பா, சின்னப் பிரச்சனை ஒன்று, என்ர நண்பிகள் அவசரமா வரச் சொல்லி போன் பண்ணிச்சினம் அதுதான் போறன். "இன்று ஒப்படைக்கு இறுதி நாள் எல்லோ.. சரி சரி நீங்கள் போய் அவைக்கு விலக்குப் பிடியுங்கோ.. நான் ஒப்படை கொடுக்கப்போறன்"

சங்கர் பல்கலைக்கழகம் வந்த புதிதில் அப்பாவியாகத்தான் தெரிந்தான். பின்னர் நாட்கள் போகப்போக நண்பிகளோடு சுற்றுவதும் அவர்களோடு கடலை ( அரட்டை) போடுவதும் "காட்ஸ்" விளையாடுவதும் என்று தன் பல்கலைக்கழகப் பொழுதை செலவு செய்ய ஆரம்பித்தான். அவன் தன் நண்பர்களைக் காணும் போதெல்லாம் தான் பழகும் ஒவ்வொரு பெண்ணைப் பற்றியும் அவர்களின் குணம், இயல்புகள், நடத்தைகள் என்று பலவாறு விபரிப்பான். அவர்களும் கேட்டு ரசித்து சிரிப்பார்கள். இது அவனோடு பழகும் பெண்களுக்கும் தெரியும். இருந்தும் அவர்களும் இவற்றைக் கண்டுகொள்வதில்லை. சில சந்தர்ப்பங்களில் மிக மட்டமாகக் கூடக் கதைப்பான்.அதைக் கூட அவர்கள் பெரிதுபடுத்துவதில்லை. அதையே வேறு யாரும் செய்துவிட்டால் காவாலி, பொறுக்கி என்று திட்டுவார்கள், கோவிப்பார்கள். ஒருவேளை அவர்களும் அவனிடம் அதை விரும்பினமோ என்னவோ, சங்கர் அவர்களுக்கு மிக நெருக்கமானவனாகவே இருந்தான்.

ஒரு நாள் சங்கர் துசியிடம்.. டேய் இவள் மதி பற்றி என்ன நினைக்கிறா என்றான். " டேய் உனக்கே இது தகுமா.. எனக்குத்தான் பெரிசா அவையளோட பழக்கமில்லையே. பார்க்க அமைதியான நல்ல பிள்ளையாத்தான் தெரியுது. பழகிப் பார்த்தாத்தான் புரியும். நமக்கு அதுக்கெல்லாம் நேரமில்லை. ஏன் கேட்கிறாய் ஏதும் பிரச்சனையோ ??" என்று பதில் கேள்வியோடு முடித்தான் துசி. ம்.. சின்னப்பிரச்சனை அவளை இங்க ஒரு பொடியன் விரும்புறான். இவளும் அவனோட நல்ல மாதிரித் தான். இப்ப சமீபத்தில அவைக்க புதிசா ஒரு பிரச்சனை கிளம்பியிருக்கு. அதுதான் போன் பண்ணி என்னை அன்று வரச் சொன்னாள். " ஓஓ அப்படியே.. அவைக்கு இப்படியான பிரச்சனைக்கும் நீங்களே "அட்வைஸ்" கொடுக்கிறனீங்கள். நல்ல தொழில்தான் செய்யுங்கோ " என்று நக்கலாகப் பதில் கொடுத்தான் துசி. டேய் துசி உனக்கு பெண்களைப் பிடிக்காது. அதால அலட்சியமாப் பேசுறா.. அதுகளுக்கு எத்தினை பிரச்சனைகள் தெரியுமே சமூகத்தில. அதற்கும் துசி.." அப்படியே, தேவையில்லாம கண்டவையோடும் பழகிறது.. பழகிட்டு பழகினவையில, சமூகத்தில குறை சொல்லுங்கோ. சரி ஏதோ பிரச்சனை எண்டா... அப்படி என்னதான் பிரச்சனை சொல்லன்."

இல்லையடாப்பா.. மதி கொஞ்சம் "மொடேன்". தெரியும் தானே. அவள் இன்ரநெற் சற்றிங் அது இதென்று ஜாலியான பெண். இவன் கபிலன் இருக்கிறான் எல்லோ அவன் தான் இப்ப அவளோட நெருக்கம். " அட இவன் கபிலனே.. அடப்பாவி அவனும் தொடங்கிட்டானே " பின்ன எல்லாரும் உன்னை மாதிரி சாமியாரோடாப்பா. உடனே துசி " சங்கர் சும்மா கடிக்காம விசயத்தைச் சொல்லு எனக்கு வகுப்பு இருக்கு" இவள் மதி சற்றிங் என்று போறவள். அங்க பலரோடும் அவள் வஞ்சகமில்லாம கதைப்பாள். உடனே துசி குறுக்கிட்டு " அதுசரி அவள் வஞ்சகம் இல்லாமல் தான் கதைக்கிறாள் என்றது எப்படி உனக்கு தெரியும். ஏதாவது கருவி வைச்சிருக்கிறியா கண்டுபிடிக்க" அதுக்கு சங்கர்.. எல்லாம் பழகிப் பார்த்து வந்த ஒரு நம்பிக்கையிலதான். நான் சீரியஸாக் கதைச்சிட்டு இருக்கிறன் நீ நக்கலடிச்சுக் கொண்டே இருக்கிறா. " இல்லையடாப்பா நீங்களா தான் எல்லாம் சொல்லுறிங்கள் வஞ்சம், சூதுவாது, நல்லவன், கெட்டவன் என்று அதுதான் எப்படி அறியுறிங்கள் என்று கேட்டன்". சரி அதைவிட்டிட்டு விசயத்தைக் கேளன். அதற்கு துசி "ம் சொல்லு கேட்பம்". அவள் சற்றிங் போற "இன்ரநெட் சற் கிளப்புக்கு" ஒரு நாள் எதேச்சையா கபிலனும் போயிருக்கிறான். அங்க ஒரே கூத்தும் கும்மாளமுமாம். ஆண்களும் பெண்களும் விடிய விடிய ஏதோ கதைக்கினமாம். துசி மீண்டும் குறுக்கிட்டு " என்னடாப்பா சங்கர்.. விடிய விடிய அப்படி என்னதான் கதைக்கினம். உலக அரசியலோ.. இல்ல விஞ்ஞானக் கண்டுபிடிப்புகள் பற்றியோ.. இல்ல கதாப்பிரசங்கமோ வைக்கினம்". பாத்தியே மீண்டும் நக்கல் உனக்கு. அதுகள் சின்னஞ்சிறுசுகள் பலதும் பத்தும் கதைக்குங்கள். " ஏண்டா.. சின்னஞ்சிறுசுகள் என்றா.. பலதும் பத்தும் கதைக்குங்கள் என்றா, அப்ப அங்க வில்லங்கம் இருக்குது போல. சமீபத்தில கேள்விப்பட்டன் சற்றிங்கில ஒரு பெண் தன்னை நடிகை அசின் என்று சொல்லி ஒருத்தனை ஏமாத்தினதா. அப்படி ஏதும் ஏடாகூடமா நடந்திட்டோ". ம்.. நீ விசயத்துக்கு கிட்ட வந்திட்டா துசி.. கதையை கேளன்.. கபிலன் சற்றிங் போன இடத்துக்கு மதியும் வழமை போல போயிருக்கிறாள். கபிலன் வேற பெயரில போனவனாம். மதியும் வேற பெயரில தானாம் இருந்தவள். இரண்டு பேரும் நல்லா கதைச்சிருக்கினம். கபிலன் படம் காட்டச் சொல்லி கேட்டிருக்கிறான். பெயர் விபரம் ரெலிபோன் நம்பர் எல்லாம் கேட்டிருக்கிறான். மதியும் எல்லாம் கொடுத்திருக்கிறாள். படமும் காட்டி இருக்கிறாள். உடன கபிலன் திகைச்சுப் போய் மதி நீயா என்று கேட்டு தான் கபிலன் என்று சொல்லி இருக்கிறான். சுமார் 4 - 5 மணி நேரம் சற்றிங்காம், அதிகாலை வர. தான் சற் பண்ணினது கபிலன் என்று அறிஞ்ச உடன மதி சற்றிங்க "கட்" பண்ணியிருக்கிறாள். இப்ப அதுதான் அவைக்க பிரச்சனையாப் போச்சடாப்பா.

பாத்தியோ சங்கர், இணையம் என்றது பனிப்போர் காலத்தில அமெரிக்க இராணுவ தகவல் பரிமாற்றத்துக்கு என்றிருந்தது. சோவியத் வீழ்ச்சிக்குப் பிறகு அதை தகவல் பரிமாற்றத்துக்கு என்று உலக வலைப் பின்னலாக வர்த்தக நோக்கத்துக்குப் பயன்படுத்த தொடங்கியதும் பல நன்மைகளோட தீமைகளும் வந்திருக்கு. அதிலும் இந்த சற்றிங் பல மணித்தியாலங்களை வீணே விழுங்கிறதோட சின்னஞ்சிறுசுகளில இருந்து தாத்தாக்கள் வரை நல்ல விசயங்களை பகர மட்டுமன்றி பெருமளவில வேண்டாத அலட்டல்களிலும் ஈடுபடவும் தூண்டுது. குறிப்பாக இளம் பெண்களும், ஆண்களும் இப்ப சற்றிங்கிலதான் அதிக நேரம் செலவிடினம். அதிகம் அறியாதவையோட வெளிப்படையாகவும் ரகசியமாகவும் பேசிக் கொள்ளினம். அவை என்ன பேசினாலும் வெளி உலகுக்கு தெரியாது என்பதால எதுவும் அங்க பேசப்படலாம். அவை அவர்களை உளவியல் ரீதியில் பாதிக்கவல்லனவாகக் கூட இருக்கலாம். அதால பல தீமைகளும் நடந்தேற வாய்ப்பிருக்கு. இது இப்படியே கட்டுப்பாடில்லாமல் கவனிப்பாரற்று தொடர்ந்தால் பெரிய சமூகத் தாக்கம் ஒன்றை உலகம் எதிர்கொள்ள வேண்டி இருக்கும். மேற்குலகத்தைப் பொறுத்தவரை அவைக்கு இது ஒன்றும் புதிதல்ல. ஆனால் நாங்கள் இந்தச் "சுதந்திர சற்றிங்" கருத்துப் பரிமாற்றம் பற்றி கவனமாக இருக்க வேண்டும். குறிப்பா சிறுவர், சிறுமியர், இளம் ஆண்கள், பெண்கள் தொடர்பில் இந்த சற்றிங்கில யாரோட என்ன கருத்தப் பரிமாற்றம் செய்யினம் என்றதிலை குடும்பத்தில் உள்ள பெரியவர்கள் மற்றும் பொறுப்புவாய்ந்தவர்கள் கூடிய கவனம் எடுக்க வேண்டும். இல்லாட்டி கபிலன் - மதிக் கிடையில் தோன்றியது போல சின்னச்சின்ன பிரச்சனைகளில இருந்து பெரிய குழப்பங்கள் வரை குடும்பத்தில சமூகத்தில நாட்டில வர வாய்ப்பிருக்கு.

ம்ம்... நீ சொல்லுறது சரி தாண்டா துசி. எப்படித்தான் இதைக் கட்டுப்படுத்த வெளிக்கிட்டாலும் அரட்டைக்கு பழகினவையை கட்டுப்படுத்திறது கொஞ்சம் கஸ்டம் தான். " என்ன சங்கர் அனுபவம் பேசுதோ". இல்லையடா துசி.. இது விடயத்தில கட்டுப்பாடுகளைக் கொண்டு வர, தாங்கள் சுதந்திரமா கதைக்கிறதை தடுக்கினம், தங்கள் நோக்கங்களைச் சந்தேகிக்கினம் என்று வேற வடிவத்தில பிரச்சனை திசை மாறிட வாய்ப்பிருக்கு எல்லோ. எனவே எல்லோரும் அவையா நிலைமைகளைப் புரிந்துணர்ந்து தேவையற்ற சற்றிங்கில ஈடுபடுறதைத் தவிர்த்தா இப்படியான அநாவசிய முரண்பாடுகளை, தனி நபர், குடும்ப, சமூகப் பிரச்சனைகளைத் தவிர்க்கலாம். முன் பின் அறியாத கண்டவையோடும் தனிப்பட்ட முறையில் வீணே கண்டதையும் கதைச்சு, தனிப்பட்ட தகவல்களை பரிமாறப் போய் ஏன் வில்லங்கத்தை வலிய விலைக்கு வாங்க வேணும் சொல்லு பாப்பம். " உண்மைதான் சங்கர் நீயே சொல்லிட்டாய், இதில நான் என்ன சொல்ல இருக்கு. சம்பந்தப்பட்டவை கேட்டு அவதானமா நடந்து கொண்டாச் சரி. இப்ப எனக்கு வகுப்புக்கு நேரமாச்சு போயிட்டு வாறன்." என்று கூறி நண்பர்கள் இருவரும் விடைபெற்றுக்கொண்டனர்..!

ஆக்கம் தேசப்பிரியன்.

Tuesday, December 20, 2005

உயிரா ? உறவா?

"விடிஞ்சிட்டுது எழும்பு தம்பி கடைக்குக்கிடைக்குப்போய் காய் கறி களை வாங்கி வந்தால் காய்ச்சி படைச்சுப்போடலாம் எல்லே. இப்ப போனால் தான் நல்ல மரக்கறியள் வாங்கலாம் எழும்பப்பன்". அம்மாவின் குரல் என்னை சங்கடப்படுத்துகிறது. அதுகளுக்காய் ஒரு சொட்டுக்கண்ணீர் சிந்த வக்கில்லாமல் ஓடிய நாங்கள் படைச்சென்ன காச்சி என்ன?? அலுத்தது மனசு.

கண்கள் மூட மறுத்த இந்த வாரத்தின் முடிவு நாள் இந்த மாதத்தின் தொடக்க நாள். கண்ணீர் இன்றி என் மனசழும் காலமிது. எத்தனையோ வீடுகளில் இது தான் நிலை, அத்தனை சுமையை எங்கள் மீது கொடிய கடவுள் இறக்கிவைத்த நாட்கள் இவை. எப்படி நான் மறப்பன், வருசங்கள் சும்மா இல்லை காலில சக்கரத்தைக்கட்டிக்கொண்டு ஓடுது. நானும் தான் சேந்து ஓடிறன் பலன் என்ன. என்ர மனச்சாச்சியைக்கொண்டு, நான் மிருகமாய் நடந்த அந்த நாளை அந்த கணங்களை பத்து வருசமாகியும் என்னால மறக்கவே முடியவில்லை.

"இன்று என் நண்பன்ரையும் அவன்ர குடும்பத்தின்ரையும் நினைவுநாள். ஒன்றாய் நாலு உருப்படிகளை நான் அநாதைப்பிணங்களாய் விட்டு விட்டு கோழையாய் ஓடிய நாள். வலிகாமத்திற்கு ஆமியின் படை நகர்வு ஆரம்பித்த வேளை அது, செல்லடிகள் பலரது காதுகளை ஊனமாக்கிச்சென்றது. நான் கூட அந்த தாக்கத்தை கனநாள் உணர்ந்திருக்கிறன். நாங்கள் மண்ணில் அ, ஆ எழுதிப்பழகிய காலம் தொட்டு கள்ள மாங்காய்க்கு கல்லெறிந்து, மாடு மேய்ச்சு, மாட்டுக்குப்புல்லறுத்து, தோட்டம் செய்து, மதவடியில சைக்கிலும் கையுமாய் கூட்டம் கூடி காட்ஸ்விளையாடி, அரும்பும் மீசையுடன் அவரவர் வாழ்க்கைத்துணைகளை தேடி இப்படிப்பல நிகழ்வுகளிற்கு என்னோடு ஒன்றாய் நின்றவன். அந்த இடப்பெயர்வோடு என் தோழமையை முடித்துக்கொண்டான்.

என்ர நண்பன் பாஸ்கரன் ஒரு வேலி இங்கிருந்து நான் சமிக்கை காட்ட அதுக்கு ஏற்றபடி எங்களது அன்றாட நடவடிக்கைகளை அமைத்துக்கொள்வான். ஒன்றாய் உண்டு ஒன்றாய் உறங்கி வாழ்ந்த
தோம். நாங்கள் மட்டும் இல்லை எங்களுக்கு அமைஞ்ச மனைவிமார் கூட இருவரும் நல்ல நண்பிகள் தான். குடும்பம் குடும்பமாய் எங்கட நட்பு விரிந்து சென்றது. செல்லடியின் உக்கிரம் உணர்ந்த பாஸ்கர். தோட்டம் துரவு காணி வீடு என்று இதுகளை கட்டிக்கொண்டிருந்த என்னையும் என் குடும்பத்தையும் எத்தனை தரம் கெஞ்சி இடப்பெயரச்செய்தான். "எட பைத்தியக்காரா காணி பூமிகளை நாளைக்கு நாங்கள் வாங்கிச்சேர்க்கலாமடா இதுகள் எங்க ஓடப்போகுதுகள் நீ எத்தனை வருசம் கழிச்சு வந்தாலும் இங்க தான் இருக்கும். இதுகளைப்பாக்கிறதுக்கு நீ முதலில உயிரோட இருக்கோணுமடா. விசர்க்கதை கதைக்காமல் வெளிக்கிடு போவம்."

அவனது அதட்டலும் அன்பான வேண்டுதலும் உயிர்காக்க எங்களது ஓட்டத்தை ஆரம்பிக்க வைத்தது. இருவரும் ஆளுக்கொரு உழவு இயந்திரத்தில் அத்தியவசியமான பொருட்களை ஏத்திககொண்டு வெளிக்கிட்டோம். அவனது வண்டி முன்னால் சென்று கொண்டிருந்தது நான் அவனைப்பின் தொடர்ந்தேன். இடையில் இரு மரநிழலில் அவன் வண்டியை மறித்து "மச்சான் சீப்பிளேன் மேலால பறக்குது இப்படி இரண்டு வண்டி முன்னாலும் பின்னாலும் போக வந்து அடிக்கப்போறான். நான் முன்னால போறன் ஒரு கால் மணித்தியாலம் கழிச்சு பின்னால வா பத்திரமாய் ஓடுடா அவசரப்படாதே. நான் கொஞ்சத்தூரம் போய் காத்திருக்கிறன்." என்றான்.

அவன் எப்பொழுதும் தீர்க்க தரிசனத்தோடு நடப்பதுண்டு நானும் உடன்பட்டேன். அது தான் எங்கள் கடைசி பேச்சு என்று நான் எதிர்பார்க்கவில்லை. அவன் சொன்னபடி கால் மணிநேரம் கடந்தபின்னர் எனது குழந்தைகள் பசியாறி முடிய மரநிழலில் இருந்து வண்டியை எடுத்துக்கொண்டு நெடுஞ்சாலையில் பயணமானேன். கண்ணுக்கெட்டிய தூரம் வரை அவனைக்காணவில்லை கொஞ்சம் விரைந்து சென்றேன். அவனது வண்டி ஒரு மதவுடன் மோதி நின்றிருந்தது அந்த பெட்டியில் இருந்த பொருட்களிற்கும் அவர்களது தசைகளிற்கும் வித்தியாசம் தெரியவில்லை எல்லாம் ஒன்றாகி கிடந்தது நாங்கள் நிழலில் நின்ற வேளை காதைக்கிழித்துக்கொண்டு சென்ற செல் என் நண்பனை பதம் பார்த்திருக்கும் என்று நான் நினைக்கவில்லை. ஒருவர் கூட மிச்சம் இல்லை அவனது நாய் மட்டும் மதவின் கீழ் முனகிக்கேட்டது. அந்த சத்தத்தைக்கேட்ட எனது நாயோ தன் தோழனைத்தேடிக்குரைத்து குதித்துச்சென்றது. நாயை நின்று அழைத்து வர அவசரம் என்னை விடவில்லை. குடும்பத்தோடு அநாதையாய் சிதறிப்போயிருக்கும் என் நண்பனை அருகில் சென்று கட்டி அணைத்து அழ என்னால் முடியவில்லை. "அப்பா பாஸ்கரன் மாமாவையிட வண்டி அங்க கிடக்குது நாங்கள் எங்க போறம்" என் மகனின் கேள்விக்கு எனக்கு விடை கிடைக்கவில்லை. தேம்பி அழுது கொண்டிருந்த அவர்களை. "சத்தம் போடாமல் இருக்கிறியளா இப்ப இதில நிண்டா உங்களுக்கும் இது தான் கதி" சற்று முரட்டுத்தனமாய் அடக்கிவிட்டு நான் வண்டியை ஓடியபடியே இருந்தேன்.

ஒரு கணம் நின்று நான் அவனிற்காய் அழுதால் அடுத்த கணம் தொடர்ந்து பெய்து கொண்டிருந்த செல்மழையில் நானும் அதே நிலைக்குத்தான் ஆளாகியிருக்கக்கூடும். மரணத்தை தொட்டுவிட்ட என்ன நண்பனைப்பற்றி விளிம்பில் நிற்கும் நான் சிந்திக்கலாமா?? என்ற சமாதானத்தை எனக்கு நானே கூறியபோதும் அடிக்கடி நான் தலைகுனிவேன். கோழையாய் நான் எப்படி ஓடினே. சீவனை விட்டுக்கிடப்பவன் என் நண்பன் அவனது உருவம் கூட சரியாக இல்லை சிதறிப்போய் இருந்தான். கையும் காலும் எங்கெங்கோ போயிருக்க முண்டங்களாய் கிடந்த அவனது மனைவி பிள்ளைகளை திரும்பிப்பார்க்காமல் ஓடிய என்னை நண்பன் என்று அவன் ஏற்றுக்கொள்வானா.?? எனது நாய்க்கு இருந்த உணர்வு கூட அந்த நிமிடங்கள் எனக்குள் செத்துப் போனதே இதை அவனது உயிர் பார்க்கக்கிடைத்தால் என்னை மன்னிக்குமா? ஒன்றா இரண்டா 35 ஆண்டுகள் நட்பை அரைநொடியில் வந்த மரணபயம் அறுத்துவிட்ட அவமானக்கதையை மறந்து விடத்தான் முடியுமா.? என்னையே என்னால் மன்னிக்க முடிவதில்லை. அவனிடம் மண்றாடுவதுண்டு மன்னித்துவிடும்படி இறைஞ்சுவதுண்டு மன்னிப்பானா? கேட்டுச்சொல்லுங்கள்! இன்று அவன் நினைவு நாள் காய்ச்சிப்படைப்போம் அவன் வந்து போவான் என்னை காறித்துப்பாமல் போவானா.??

Sunday, December 04, 2005

கோலங்கள்! [தேசப்பிரியன்]

விமானம் யாழ்ப்பாணம் பலாலியில் இருந்து கிளம்புகிறது. ஏக்கம் கவ்விய மனதோடு கவின் யன்னலோர இருக்கையில் இருந்து சொந்த தேசத்தின் அவலங்களை பார்த்தபடி பறக்கிறான். என்ன அழகான தேசம், என்ன நேர்த்தியான கட்டுமானங்கள், கட்டம் கட்டமாக வயல்களும் தோட்டங்களும், இன்று அவை இருந்த அடையாளங்கள் சிதைந்து சின்னாபின்னமாகி..காவலரண்களால் நிறைந்திருக்கின்றன. காணும் காட்சி கவலையைத் தந்தாலும் ஐரோப்பிய இயந்திர வாழ்க்கைக்குள் செயற்கைச் சூழலுக்குள் கடந்த பதினைந்து ஆண்டுகளாக சுழன்றவனுக்கு சொந்த தேசத்தின் அலங்கோலம் கூட ரசிக்கக் கூடியதாவே இருந்தது.

அன்று ஒரு நாள், அதிகாலை நேரம், சன்னங்கள் வீட்டு யன்னல்களைப் பதம்பார்க்கின்றன. நாய்கள் விடாமல் தொடர்ந்து குரைக்கின்றன. "பூட்ஸ்" சத்தங்கள் வீட்டைச் சுற்றிவளைக்கின்றன. சிறிது நேரம் கழித்து பூட்டப்பட்டிருந்த வீட்டுக்கதவு தட்டப்படுகிறது. "சலோ சலோ" என்று ஹிந்தியில் சொல்லி சிலர் கத்துகிறார்கள். "அம்மா இந்தியன் ஆமி வந்திருக்கிறான் என்ன செய்யுறது" கவின் சிறுவனாக பயத்தால் குரல் நடுங்கியடி, தாயை அணைத்துக் கொண்டு கேட்கிறான். " பொறு..பயப்பிடாத.. அப்பா போய் என்னென்று பார்ப்பார்.." அம்மா மகனைத் தேற்றியபடி. கணவனைப் பார்த்து "என்னங்க தனியப் போகாதேங்கோ நாங்களும் வாறம்". தகப்பன் முன்னே செல்ல தாயும் கவினும் பின்னே நிற்க, கதவு திறக்கப்பட்டதும் ஹிந்தியில் ஏதோ கத்தியபடி இந்தியன் ஆமி வீட்டுக்குள் நுழைந்து நாலு பக்கமும் சூழ்ந்து கொள்கிறது. அவர்களில் ஒருவன் சென்னைத்தமிழில் " உங்க வீட்டுக்க எல்ரிரிஈ ஆக்கள் பதுங்கி இருக்கிறதா..? சோதனை பண்ணனும்". அவன் சொல்லி முடிப்பதற்குள் வந்த மற்றையவர்கள் வீடு முழுவதும் தட்டிக்கொட்டி சோதனை செய்யும் சத்தம் கேட்கிறது.

தொடங்கிய சோதனை முடிவதற்குள் மீண்டும் அந்த ஆமிக்காரன் தமிழில் " உங்க வீட்டில இருந்துதான் எல்ரிரிஈ சுட்டிருக்கு.. விசாரணைக்கு ஒருவர் வரனும்" அதைக்கேட்ட கவினின் அப்பாவும் அம்மாவும் செய்வதறியாது திகைத்துப் போயினர். " என்ர அவரை தனிய விட ஏலாது நானும் பிள்ளையும் கூட வாறம்" என்று கவினின் அம்மா காட்டமாகச் சொல்ல " எல்லாரும் நட, ஜீப்பில ஏறு" என்று உத்தரவு வருகிறது. நடந்த சம்பவம் தொடர்பாக எதுவும் அறியாத அவர்கள் மூவரும் வாகனம் ஒன்றில் ஏற்றப்பட்டு கண்கள் கட்டப்பட்டு நீண்ட பயணத்தின் பின் முகாம் ஒன்றில் இறப்பட்டு விசாரிக்கப்படுகின்றனர். விசாரணையின் பின் தாய் வேறாகவும் தகப்பனும் சிறுவனான கவினும் சேர்த்து வேறாகவும் பிரிக்கப்பட்டு அடைக்கப்படுகின்றனர். பல மணி நேரம் விசாரணை தொடர்வதாக சொன்னாலும் இறுதியில் கவின் மட்டும் வற்புறுத்தி வீட்டுக்கு அழைத்து வரப்படுகிறான். பள்ளிச் சிறுவன் என்று காரணம் காட்டி அவனை வீட்டில் விட்டுவிட்டு சென்றுவிட்டார்கள்.

அந்த நாள் வரை தாயையும் தந்தையும் பிரிந்தறியாத கவின் அன்று அவர்களின் பிரிவால் பெரும் துன்பப்பட்டான். பதட்டம் பயம் ஒரு புறம் பெற்றோறைப் பிரிந்த கவலை மறுபுறம் வாட்ட அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அவனின் துன்பத்தைப் பாராது விடுப்பு கேட்பதிலேயே அதிகம் அக்கறை காட்டினர். அதுவும் கூட அவனுக்கு மிக வேதனை அளித்தது. பிறர் உதவிகள் ஏதும் இல்லாது தனிமைக்குள் தனித்துவிட்ட சின்னவனான கவின் வீட்டில் அழுதபடி கண்ணீரோடு காலம் தள்ளத்தொடங்கினான். அதுவே தொடர்கதையுமானது. இப்படியே வந்த நாட்கள் சோகமாக கடந்தனவே தவிர தாயும் தகப்பனும் விடுவிக்கப்படுவதாக இல்லை. பின்பு ஒரு நாள் தாயும் தகப்பனும் காங்கேசன்துறை இந்திய இராணுவ வதை முகாமுக்கு மாற்றப்பட்டு அங்கு நீண்ட நாள் காவலில் அடைக்கப்பட்டிருப்பதாக உறவினர்கள் மூலம் அறிந்து கொண்டான். நீண்ட நாள் பெற்றோரின் பிரிவு, அது தந்த விரக்தி, நீதி என்பதே கிட்டாது எனும் போது எழுத்த ஆதங்கம், மனச்சோர்வு இவை தந்த பாதிப்புக்களால் வாழ்கையில் வெறுமைக்குள் சென்ற கவின் யாருக்கும் சொல்லாமல் கொள்ளாமலே வீட்டை விட்டு வெளியேறி இயக்கத்தோடு இணைந்து செயற்படத் தொடங்கினான். சில காலம் இயக்கத்தோடு செயற்பட்ட பின் அவன் ஐரோப்பாவுக்கு நெருங்கிய உறவினர்களால் அழைக்கப்பட்டுக்கொண்டான்.

ஐரோப்பிய மண்ணில் பல வித்தியாசங்களை சந்தித்த போதும் வசதிகள் வாய்ப்புக்கள் இருந்த போதும் அவனால் மனதளவில் அவற்றோடு ஒன்றித்து அவற்றை திருப்தியோடு அனுபவிக்க முடியவில்லை. அவற்றோடு ஒன்றித்து தன்னை வித்தியாசமானவனாக காட்டி போலியாக வாழவும் முடியவில்லை. பெற்றோரின் பிரிவும் அவர்களுக்கு என்ன நேருமோ என்ற ஏக்கமுமே அவனுக்குள் எப்போதும் குடிகொண்டிருக்கும். வீட்டு நினைவுகளால் அவன் அடிக்கடி ஆளப்படுவான். சொந்த மண்ணில் கண்ட அனுபவங்களே அவனை அந்நிய மண்ணிலும் கொள்கைப்பற்றோடு ஒரு தெளிவான வளமான இலட்சியத்தோடு பற்றுறுதியோடு வாழ வழி சொல்லிக்கொண்டிருந்தது. ஐரோப்பாவிலும் அவன் தனிமையையே விரும்பினான். தானும் தன் படிப்பும் வேலையும் அதுவே அவனுக்கு வாழ்வாகிப் போனது. மற்றைய ஊர் ஆட்கள் போல அவனால் சொந்த மண்ணின் அவலங்களை மறந்து சொந்த வாழ்வில் சந்தித்த துயரங்களை மறந்து போலிப் போர்வைக்குள் புகுந்து இயல்பான அடையாளங்கள் தொலைத்து ஐரோப்பியனாக தன்னை அடையாளம் காட்டி போலித்தனத்தனமாக வாழவும் அவனால் முடியவில்லை. அதற்காக அவன் அப்படி வாழும் மற்றவர்களைக் குறை கண்டதும் இல்லை. அவரவர் தங்கள் மனத்துக்குப் பிடித்தது போல வாழ்கிறார்கள்.அது அவரவர் சுதந்திரம் என்றுணர்ந்தும் கொண்டான்.

விமானம் இரத்மனால விமான தளத்தை நெருங்குகிறது. பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னர் இந்திய இராணுவ வதை முகாமுக்குள் விட்டுவிட்டு வந்த பெற்றோரைக் கண்டு, கொஞ்சி மகிழ்ந்த திருப்தியும், சொந்த மண் பெரும் அவலத்தைக் கண்டிருந்தாலும் இன்னும் அழியாது வைத்திருக்கும் சில அழகுகளை ரசித்த திருப்தியும் மனதிற்கு ஒரு சின்ன ஆறுதலை தந்தாலும், வானூர்தியில் இருந்து அவன் அவதானித்த தாய் மண்ணின் கோலத்தையும் சிங்கள மண்ணின் கோலத்தையும் ஒப்பிட்ட பார்த்த போதுதான் தன் தாய் மண்ணின் ஏழ்மையையும் அவள் இன்னும் ஓரவஞ்சனையை சந்தித்துக் கொண்டிருப்பதையும் தெளிவாக உணரமுடிந்தது. மனதில் அதை படமாக்கிப் பதிந்தும் கொண்டான். ஐரோப்பாவிலும் சரி சிங்கள மண்ணிலும் சரி கடனோ சொந்தமோ வசதிகள் என்று வாழ்ந்தாலும் அந்நியத்தனம் என்பது மனதுக்குள் தேடாமல் தேடி வரும் ஒன்று. அதை சொந்த மண்ணில் அவன் உணரவே வாய்ப்பிருக்கவில்லை. வசதிகளால் ஏழ்மை என்றாலும் சொந்த மண் மனதுக்கு தரும் திருப்தியால் என்றும் நிறைவானதுவே." சொர்க்கமே என்றாலும் நம்மூரைப் போல் ஆகுமா"...என்ற கவிவரிகளின் யதார்த்தத்தை அனுபவம் தந்த உணர்வுகளால் உள்வாங்கியபடி கவின் கொழும்பு இரத்மனால விமான தளம் விட்டு வெளியே நடக்கிறான்.

Friday, November 25, 2005

அஞ்சலி! [சிறுகதை]

புதுக்குடியிருப்பு மாவீரர் மயானத்தை அடைந்ததும். விறு விறுவென என் கால்கள் காந்தி அக்காவின் கல்லறையை நோக்கி
நடைபோட்டது. பையினில் இருந்த மலர்கள் அவளிற்கு அஞ்சலி செலுத்த மலர்ந்து கொண்டன. இங்கு வருகிறோம் என்று தெரிநதவுடன்.
அவசர அவசரமாய் பறித்த மலர்கள். இதைப்போல ஒரு நாள் தான் நான் விரும்பாத அந்த நிகழ்ச்சி நடந்தேறியது.

அன்று மழை பெய்து கொண்டிருந்தது. மாவீரர் துயிலும் இல்லம் நோக்கி எங்கள் 'வான்' நகர்ந்து கொண்டிருக்கிறது.
'பாண்ட்' வாத்திக்குழுவில் நானும் இணைந்ததில் இருந்து ஒவ்வொரு முறை இங்கு வரும்போது என் வயிற்றிற்குள் புதுப்புது நோய்களை உணர்வேன்.
மாவீரர் வித்துடல்களிற்கு அஞ்சலி செலுத்தும் போது என் நெஞ்சம் எதையோ நினைத்து ஏங்கும். இது காந்தியக்காவாய் இருக்கக்கூடாது
, எனக்கு தெரிந்த முகங்கள் இங்கு நிற்கக்கூடாது என்று பலவற்றை மனசு வேண்டி நிக்கும்.

நான் சின்னனாய் இருக்கையில் எங்களை விட்டிட்டு அப்பா இறந்த போது கதிகலங்கிப்போனோம். சிறிது காலத்தின் பின்
அம்மாவும் எங்களை விட்டுப் போன பின். நான் செஞ்சோலையில் தஞ்சமானேன்.
காந்தியக்கா அதற்கு முதலே இயக்கத்தில் சேர்ந்துவிட்டாள். அண்ணாவும் சின்னக்காவும் அடிக்கடி என்னை வந்து பார்த்துச் செல்வார்கள்.
காந்தியக்கா எப்ப எங்கு நிக்கிறாள் என்று எனக்கு தெரிவதில்லை. நான் 'பாண்ட்' வாத்தியக்குழுவில் சேர்ந்ததற்கு முக்கிய காரணம்.
இப்படி எங்கையாவது போகும் போது அக்காவை சந்திக்க முடியும் என்பதால் தான். அப்படித்தான் அடிக்கடி எங்காவது சந்திப்போம்.
அக்கா அங்கு நின்றால் 'பாண்ட்' வாத்தியக்குழுக்களை தேடி வருவாள். சந்திப்போம் எப்போதாவது கடிதம் போடுவாள் என்னையும் பார்க்கவருவாள்.

யார் யார் வீரமரணமானார்கள் என்ற செய்தி என் காதை அடையும் வரை என் தொண்டை வறண்டிருக்கும்.
என் அக்காவாய் இருக்கக்கூடாது என்று மனம் தவிக்கும். எல்லாரும் என் அக்காமார் அண்ணாமார் என்றதை அந்த நொடிகள்
என் மனம் மறந்து போய் நிக்கும். அஞ்சலி செலுத்த வந்திருக்கும் மாவீரர் பெற்றோரை என் கண்கள் அவசர அவசரமாய் தேடும்.
அங்கு சின்னக்காவும் அண்ணாவும் இல்லை என்றவுடன் தான் என் மனம் அமைதியாகும்.
அந்தப் பெற்றோர்கள் கண்ணீர் கண்டு மறுபடி என் மனம் கலங்கும்.
அப்போதெல்லாம் அடிக்கடி சண்டை நடக்கும்... அடிக்கடி புதுக்குடியிருப்பு மாவீரர் துயிலும் இல்லம் மட்டுமன்றி அனேக இல்லங்கள் மலர்களால் நிறைந்திருக்கும்.

இப்படி அஞ்சலி நிகழ்வுகளிற்கு கெஞ்சி மண்றாடி அந்தக் குழுவில் நானும் வந்துவிடுவேன். அன்றும் அப்படித்தான் வந்தேன்.
என் வேண்டுதல்கள் பொய்யாய்ப்போனது. 'வான்' புதுக்குடியிருப்பு மாவீரர் துயிலும் இல்லைத்தை அடைந்ததும். நான் வண்டியை விட்டு இறங்கி விடவில்லை அதற்கு முன்
"கலைமகள் கலைமகள்" எனது பெயர் கீழிருந்து சோதியக்காவால் அழைக்கப்படுவது கேட்டு அவசரமாய் இறங்கினேன். "என்னக்கா ஏன் கூப்பிட்டனீங்கள்"? ஒன்றும் இல்லை " 'கொஸ்டல்' போனேன் நீங்கள் இங்க வந்திட்டதாய் சொல்லிச்சினம்
அது தான் என்று இழுத்தார்". பதட்டத்துடன் "என்னக்கா விசயம்" என்றேன். அதற்குள் ஆயிரம் எண்ணங்கள் என்னுள் உதயமாகி மறைந்து விட்டன.
"உங்கட அக்கா வீரச்சாவு" .................... "வீட்டிற்கும் தகவல் போயிட்டுது" வீட்டில இருந்து ஆக்கள் வந்திருக்க வேணும்.
இதை உங்களுக்கு தெரிவிக்க தான் வந்தனான்". எனக்கு ஆறுதல் சொல்லிவிட்டு சென்றார்.

ஒரு நிமிடம் யாவரும் அமைதியானார்கள் என் கண்கள் ஆறாய் பெருக்கெடுத்தது. உள்ளே சென்றேன், ஓடிச்சென்று அக்காவின் முகத்தை பார்த்துவிட என் மனம் ஏங்கியது.
அருகில் சென்றேன் இன்று இங்கு வந்திருக்கவே வேண்டாம் என்று என் மனம் அழுதது.
சின்னக்கா விம்மி விம்மி அழுதுகொண்டிருந்தாள் அண்ணாவின் கண்களும் தான் கலங்கிக்கொண்டிருந்தன. எப்பவும் காந்தியக்காவோடு
கூடியிருக்கும் புன்னகை இன்றும் அவளை விட்டு விலகிவிடவில்லை. முகம் கறுத்துப்போய் இருந்தது. என்னைக் கண்ட சின்னக்கா கட்டிப்பிடிச்சு அழுதாள்.
அண்ணா என்ன செய்வார். அவரும் தான். இடையில் ஒரு குரல் " கலைமகள் பிரச்சனை இல்லை நீங்கள் அஞ்சலியைச் செலுத்துங்கோ நாங்கள் ஆளொரால் கூப்பிடிறம் என்றார் சோதியாக்கா". நூற்றுக்கணக்கான அக்காமார் அண்ணாமாருக்கு 'பாண்ட்' வாசிச்ச நான் என் அக்காவை மட்டும் எப்படி தவிர்த்து விடமுடியும்.

"இல்லை அக்கா பிரச்சனையில்லை நான் வாசிக்கிறன். அதை விட சிறந்த அஞ்சலி வேறெது" சொல்லி விட்டு நிமிர்ந்தேன். வார்த்தைகள் இன்றி
முதுகை தட்டி விட்டு விலகினார் சோதியக்கா. அதன் பிறகு இங்கு வரும் வேளை பதட்டங்கள் தேடல்கள் இருப்பதில்லை. கண்மட்டும்
கல்லறையோடு ஏதோ பேசும். காந்தியக்கா என் கண்ணீரோடு உணர்வால் பேசுவாள் இங்கு தானே விதைக்கப்பட்டிருக்கிறாள். என் அக்காவாய்
இருக்கக்கூடாது என்ற நிலை மாறி எல்லா அக்காக்களுக்குமாய் மனம் அழும் அஞ்சலி செலுத்துவேன்.

Monday, November 21, 2005

ஊமைக் குரல் - ( தேசப்பிரியன்)


பாடசாலை விட்டு வந்த சுஜீவன் அறையின் மேசையில் கிடக்கும் கடிதத்தைப் பார்க்கிறான். இது அண்ணன் கையெழுத்தாச்சே என்று எதிர்பார்ப்பை வளர்த்தபடி அவசர அவசரமாக கடிதத்தை பிரித்துப் படிக்கிறான். படித்தவன் கண்களில் நீர் வடிய மூலையில் சாய்கிறான். சுஜீவன் 12 வயசுச் சிறுவன். போரின் விளைவால் அனாதையாகிவிட்டவன். உறவினரோடு தங்கித்தான் வாழ்கிறான். எதிர்காலம் என்பது அவனைப் பொறுத்தவரை நிச்சயமில்லாததாகி விட்டது.

சசி சுஜீவனின் அண்ணன். அவர்கள் இருவருமே குடும்பத்தில் மிஞ்சி உள்ளனர். தாயும் தகப்பனும் சில ஆண்டுகள் முன்னர், யாழ் குடாவில் கிளாலிக் கடற்பரப்பில் பயணிக்கும் போது, சிங்களக் கடற்படை பயணிகள் படகுமீது நடத்திய தாக்குதலில் படகோடு காணாமல் போனவர்கள் தான். இன்று வரை அவர்களின் கதி என்னவென்று யாருக்கும் தெரியாது. சசி கெட்டிக்காரன். இழப்புக்களைக் கண்டு துவண்டுவிடாது உயர்தரம் படித்து கண்டி பேராதனைப் பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகிப் போனான்.

சசியைப் பொறுத்தவரை அவன் பிறந்தது வளர்ந்தது எல்லாம் அவனின் சொந்த ஊரான ஒரு விவாசயக் கிராமத்தில் தான். தாயும் தகப்பனும் ஆசிரியர்கள் என்றாலும் விவசாயத்தோடும் ஒன்றிப்போனதாலோ என்னவோ அவர்களுக்கு சொந்த ஊரைவிட்டு வேறிடம் நகரப் பிடிக்கவில்லை. அப்போ அவர்களின் திட்டமெல்லாம் பிள்ளைகள் கஸ்டங்கள், நஸ்டங்கள், உறவுகள் என்று எல்லாம் அறிந்து வளர வேண்டும் என்பதாகத்தான் இருந்தது. அவர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யத்தக்கதாகவே சசியும் உருவாகி இருந்தான்.பல்கலைக்கழகத்துக்கு தெரிவாகி கண்டிக்குப் போன போது தான் அவன் முதன்முதலாக புதிய சூழலுக்கும், புதிய மனிதர்களுக்கும், வேற்று மொழிக்கும் என்று புதியவற்றிற்கு முகங்கொடுக்க வேண்டி இருந்தது.

அன்று பல்கலைக்கழகத்தில் முதல் நாள். வழக்கம் போல சாதாரண உடையோடு எளிமையாக சசி தனது வகுப்பறை நோக்கிச் சென்று கொண்டிருந்தான். போகும் வழியெங்கும் இளைஞர்களும் யுவதிகளும் கூடிக்கூடி ஏதோ பேசிக் கொண்டிருந்தனர். அவன் அவற்றை அவதானித்தப்படி அவர்களைப் பொருட்படுத்தாது தனது முதல் வகுப்பு நோக்கி பல கனவுகளோடு நடந்து கொண்டிருந்தான். அப்போ யாரோ கைதட்டும் ஓசை கேட்டு திரும்பிப் பார்த்தான். ஒரு குழு அவனை தங்களிடம் வர அழைத்தது. சைகை மூலம் தனக்கு வகுப்பு என்று சொல்லி விட்டு சசி வகுப்பை நோக்கிச் சென்றான். வகுப்பு முடிந்து வெளி வரும் போது அதே குழாம் அவனை நெருங்கி வந்து " அடேய் கூப்பிட்டோம் எல்லோ ஏன் வராமல் போனாய் " என்று மிரட்டலாக தமிழில் கேட்டனர். சசியும் பதிலுக்கு "எனக்கு வகுப்புக்கு நேரமாச்சு அதுதான் சைகை காட்டிட்டுப் போனன்" என்றான் துணிச்சலை வரவழைத்தப்படி. அதற்கு அவர்கள் "என்ன எதிர்த்தா கதைக்கிறாய்... நாங்கள் உனக்கு 'சீனியேர்ஸ்...' எங்கள் உதவி இல்லாமல் நீ இங்கிருந்து வெளியேற முடியாது" என்று மேலும் மிரட்டினர். அதைக் கேட்ட சசி கொஞ்சம் திக்குமுக்காடித்தான் போனான். "இப்ப என்ன கேட்கிறீங்கள்" என்று அப்பாவித்தனமாகக் கேட்டான். "உன்னை ஒன்றும் கேட்கவில்லை. பின்னேரம் விடுதிக்கு வா" என்றனர் அவர்கள். "வராமல் விட்டா நடக்கிறதே வேற" என்று போகும் போதும் மிரட்டி விட்டுச் சென்றனர்.

பின்னேரம் போல சசி தயங்கித் தயங்கி அவர்கள் சொன்ன விடுதிக்குச் சென்றான். அங்கு அவனைக் கண்ட அந்தக் கூட்டத்தினர் "வாடா என்ன சுணக்கம்" என்றனர். "சுணக்கம் இல்லை அண்ணா.. சொன்ன நேரத்துக்கு வந்திட்டன்.. ஏன் கூப்பிட்டிங்கள்" என்று அப்பாவித்தனமாய் பதிலுக்கு வினவினான் சசி. "இதோடா ஏன் கூப்பிட்டமாம்...இங்க உனக்கு விருந்து வைக்கப் போறம் அதுதான் கூப்பிட்டம்" என்றனர் அவர்கள் நக்கலாக. அதைக் கேட்ட அவர்களின் பெண் நண்பிகள் வாய்விட்டு பெரிசாக சிரித்தனர். அவர்கள் தங்கள் ஆண் நண்பர்களை உற்சாகப்படுத்தும் விதமாக கூச்சலும் போட்டனர். இதையெல்லாம் அவதானித்த சசி இவர்கள் பகிடிவதைக்கு தன்னை பலியாக்கப் போகின்றனர் என்பதை தெளிவாகப் புரிந்து கொண்டு நடக்கிறது நடக்கட்டும் என்று துணிச்சலை வரவழைத்தப்படி, அவர்களை எதிர்கொண்டான். அவனுடைய அப்பாவித்தனத்தைக் கண்டுவிட்ட அந்த மாணவர்களும் மாணவிகளும் அவனை இலகுவில் விடுவதாகவும் இல்லை. ஆரம்பத்தில் பெயர் ஊர் என்று கேள்விகள் கேட்டு ஆரம்பிக்கப்பட்ட அவர்களின் அறிமுகப் பகிடிவதை ஆபாசம் கலந்து அக்கிரமாகத் தொடர்ந்தது. அது எல்லை மீறப் போகிறது என்பதை ஊகித்து அறிந்து கொண்ட சசி " இதுக்கு மேல என்னால் எதுவும் செய்ய ஏலாது.. செய்யுறதைச் செய்யுங்கோ" என்றான் துணிவோடு. "அடேய் நீயும் எங்கட ஊர் தான் நாங்களும் அதே ஊர் தான்... தனியாள் உனக்கே இந்தளவு திமிர் எண்டா எங்களுக்கு எவ்வளவு இருக்கும்" என்று அவர்கள் பதிலுக்கு அவனை மிரட்டியதுடன் நெருங்கி வந்து சட்டையை பிடித்து இழுது தள்ளிவிட்டனர்.

தரையில் விசையோடு விழுந்த சசி மூர்ச்சையுற்றான். அதைக் கண்டு அவர்கள் ஓட்டம் பிடித்தனர். சில மணி நேரத்தின் பின் கண் விழித்த சசி தான் வைத்தியசாலையில் இருப்பதை உணர்ந்தான். ஆனால் அவனால் பழைய நினைவுளை மீட்டிப் பார்க்க முடியவில்லை. தான் ஒரு புதிய உலகில் இருப்பது போல உணரத் தொடங்கினான். தன்னிலை அறியாது தவித்தான். வைத்தியர்கள் வந்து அடிக்கடி பரிசோதித்துவிட்டுச் சென்றனர். இறுதியில் அவன் மனநோய் மருத்துவமனைக்கு மாற்றப்பட பரிந்துரைக்கப்பட்டு அங்கு சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டான். அங்கு இரண்டு ஆண்டுகள் கழிந்துவிட்ட நிலையிலும் அவன் இன்னும் பழைய நிலைக்கு திரும்பவில்லை. இருந்தாலும் தன் தம்பியை மட்டும் அப்பப்போ சிறிதளவு அவனால் நினைக்க முடிந்தது. அவனுக்காக இயலும் போதெல்லாம் ஓரிரு வரிகள் எழுதுவான். அப்படி இரண்டு வருடங்கள் எழுதிய அந்த வரிகளை தம்பிக்கு அனுப்ப முடிவு செய்தான். தாதிகளின் உதவியுடன் அதை தம்பிக்கு அனுப்பியும் வைத்தான்.

இரண்டு ஆண்டுகளாய் தன்னை விட்டுப் பிரிந்துவிட்ட, தன் ஒரே ஆறுதல், சொந்த அண்ணனின் எழுத்துக்களை, வரிகளை கண்டவிட்ட அந்தப் பிஞ்சு சுஜீவன் அண்ணனை நேரில் காண்பதற்காய் ஏங்கினான். வந்த கடிதம் தாங்கி வந்த பாச வரிகளை மீண்டும் மீண்டும் படித்துப் படித்து கண்ணீரால் அதை பூஜித்தான். அவன் படும் துன்பங்களை, தாங்கும் ஏக்கங்களை அண்ணனிடம் பகிர வழியின்றி மெளனியாக அழுவதை விட அவனுக்கு வேறேதும் செய்யத் தெரியவில்லை. அவன் சின்னவன். அவனின் ஆசைகள் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க யார் இருக்கினம். அம்மாவா அப்பாவா யாருமே இல்லை. ஏக்கங்கள் மட்டுமே அவனோடு மிஞ்சி இருக்கிறது. ஏங்கியபடியே இயலாமையோடு வெற்றறையின் மூலைக்குள் கடிதத்தை அணைத்தபடி முடங்கிக் கொண்டான் சுஜீவன்.

அவனைப் பொறுத்தவரை அவனுக்குள் இவ்வளவு துன்பங்களையும் ஏக்கங்களையும் பரிசளித்தவர்கள் பெற்ற தண்டனை என்று ஏதுமில்லை. அதற்காய் அவனுக்கு கிடைத்த பரிகாரங்களோ...சமூகத்தில் அனாதை.. பரிதாபத்துக்குரியவன் என்பவைதான். குற்றம் செய்யாமலே மூலைக்குள் முடங்கிவிட்டது சுஜீவன் மட்டுமல்ல. அவனைப் போன்று எத்தனையோ பிஞ்சுகள். அவர்களின் நியாயங்கள், எதிர்பார்ப்புக்கள், தீர்வுகள் இன்றி ஏக்கங்களோடு வெளிப்படாமலே ஊமைக் குரல்களாய் அடங்கிப் போயிருக்கின்றன. உலகில் யார் இருக்கார் அவர்களுக்காய் நீதி கேட்க ?! ஊமைக் குரல்களாய் அடங்குதல் தான் அவர்கள் விதியோ அல்லது சதியோ ?! நாளை இந்தச் சுஜீவன் தன் விதியை சதியை வெல்லானா ?! எதிர்பார்ப்புகளோடு என் விழிகள் திறக்கின்றன...அப்போ மூலைக்குள் அடங்கியவன் நிச்சயமான தெம்போடு மற்றவர்களின் ஆதரவுக்கு இடங்கொடாது தானே எழுவதைக் கண்டேன்..அண்ணனுக்காய்..தனக்காய்..தன் போன்றோருக்காய்..என்பதாய் உணர்ந்தேன்.

Monday, November 07, 2005

வீழா வீரங்கள்...!

அதிகாலை ஒரு மணி இருக்கும். வெடிச்சத்தம் காதைப் பிளக்க.. நித்திரை இடையில் கலைகிறது. "சண்டை தொடங்கிட்டுது எல்லாரும் எழும்புங்கோ" அம்மா அவசரப்படுத்திக் கொண்டிருக்க, பலாலிப்பக்கம் இருந்து 'ஆட்லறிகளும்' கூவுகின்றன. "மண்டை தீவுப்பக்கம் தான் அடி விழுகுது" அப்பா தன் பங்குக்கு சொல்லும் பொழுதே வெடிச்சத்தம் உக்கிரமடைகிறது. பயம் கெளவிக் கொள்ள வீட்டை விட்டு வெளிய வந்து மாமரத்துக்கு அருகில் நின்றபடி அவதானிக்கிறோம். "சந்திரிக்கா போட்ட யுத்த நிறுத்தம் இந்தளவும் தானா?" அம்மா ஏக்கத்தோடு என்னைப் பார்த்துக் கேக்க, "அவள் கதிரை பிடிச்சிட்டாள் எல்லோ எனி என்னவும் செய்வாள்" அப்பா பதிலுரைக்கிறார். நித்திரை குழம்பிய பக்கத்து வீட்டு 'அங்கிளும்'. வெளியே வந்து, வீதியில் நின்றபடி " என்ன அடி தொடங்கிட்டுது போல". பதிலுக்கு அப்பா "ஓமோம் ஓமோம் சத்ததைப் பார்க்க அப்படித்தான் தெரியுது, பலாலி கோவமா இருக்குது இழப்புகள் போல" .... " இருக்கும் விடிய பேப்பரில பார்க்கத்தான் தெரியும்". என்ன சாதாரணமாய் இருக்கினம். என் மனம் கேள்வி கேட்டுவிட்டு, நினைவுகளால் விரிகின்றது.

அவனை சந்தித்து நண்பனாக்கியது அதிஸ்டமோ துரதிஸ்டமோ நான் அறியேன். வீட்டுக்கு அருகில்தான் அவனும் வாழ்ந்தான். இருந்தாலும் நாங்கள் பேசிக் கொண்டதேயில்லை. கனகாலம் முகம் அறிந்திருந்தும் பேச்சுக்கு அவசியம் இருக்கவில்லை. அன்று ஒருநாள் திலீபன் அண்ணாவின் நினைவு நாளுக்காய் வாழைமரம் கேட்டு வீட்டுக்கு வந்தான். "வாழைமரம் வேணும் தருவிங்களா" "ஏன் தம்பி எதுக்கு " சம்பிரதாயமாய் பதில் கேள்வி எழுகிறது அம்மாவிடம் இருந்து. "திலீபன் அண்ணாவின் நினைவு நாளுக்கு 'ஆன்ரி' ". "அதுதான் பொடியங்கள் வாழைமரம் கட்ட வேணாம் என்றிட்டினம் எல்லோ பிறகேன் கட்டுறீங்கள்..". "ஓம் 'ஆன்ரி' இது நான் எங்கள் வீட்டில படம் வைக்க" பதிலுக்கு அவன். "சரி தம்பி வெட்டிப் போங்கோ" "அந்த வாழைகளைக் காட்டி விடப்பு" . என்னிடம் அம்மா. கத்தியோடு வாழை காட்ட அவனைத் தொடர்கிறேன். அப்போ.. "உங்களைக் கண்டிருக்கிறன் எங்க இருக்கிறனீங்கள்" தெரிஞ்சும் கேட்கிறேன்.. "செல்வாண்ணா கடைக்கு அருகில" எங்க படிக்கிறீங்கள் "கொக்குவில் இந்துவில"..பதிலுக்கு அவன் "நீங்கள்"... நான் "பற்றிக்ஸ்".

அன்றிருந்து சந்திக்கும் போதெல்லாம் நாங்கள் கதைத்துக் கொள்வோம். ஒரு நாள் அவனே கேட்டான். "நீங்கள் தமிழுக்கு ரியுசன் போறனீங்களோ".. இல்லை நான் தமிழுக்குப் போறதில்லை.. "கந்தசாமி மாஸ்ரட்ட போக விருப்பமா". "அம்மாட்டக் கேட்டிட்டு சொல்கிறேன்" அம்மாவிடம் கேட்க அவாவும் சம்மதிக்க நாங்கள் இருவருமே அவரிடம் படிக்க இணைந்தோம். அவருடைய வகுப்புகள் விடிய 6 மணிக்கு ஆரம்பிக்கும்.அவன் விடிய 5:00 க்கே வீட்டு கேற்றில் தட்டிக்கொண்டு நிற்பான். எனது 'சைக்கிளில்' அக்கறையோடு தோழமையோடு இருவரும் வகுப்புப் போவோம். கட்டுரைகள் வீட்டுவேலைகள் கலந்தாலோசித்து செய்வோம். அப்படியே நாங்களும் நல்ல நண்பர்களானோம்.

திடீர் என்று ஒருநாள் நான் கந்தரட்ட வரேல்ல என்றான்.."ஏன் என்ன பிரச்சனை.." . என்றேன். "பிரச்சனை ஒன்றுமில்ல"...என்று இழுத்தான். சொல்லுங்கோ நாங்கள் இயன்றது செய்யுறம் என்ற.."நான் வேற ரியுசனுக்கும் போறனான்.. எல்லாத்துக்கும் காசு பிரச்சனை அதுதான்" என்றான். பாவம்.. அது உண்மைதான். அவன் வீட்டில் அம்மா தான் எல்லாம்..வருமானம் குறைவுதான். அவன் அப்பா வேறு திருமணம் செய்து போய்விட்டார். நான் சொன்னேன் "சரி நாங்கள் கந்தரோட கதைப்பம்...அவர் கஸ்டம் என்றா இலவசமாப் படிக்க விடுவாராம்". கதைச்சுப் பார்ப்பமே என்றேன். ஓம் என்றான். நாங்களும் கதைக்க அவரும் ஓம் என்ற அவன் வகுப்பைத் தொடர்ந்தான். பிரச்சனைகள் ஏதுமின்றி எங்கள் கல்வியும் நட்பும் தொடர்ந்தது.

வழமை போல் அன்றும் வகுப்பிருந்தது. ஆனால் அவன் வரவில்லை. வரமாட்டான் என்று சொல்லவும் இல்லை. காத்திருந்துவிட்டு நான் வகுப்புக்கு சென்றுவிட்டோன். அடுத்த நாளும் அவன் வரவில்லை. வீட்டில் போய் விசாரிக்க அவன் உறவுக்காரர் வீட்டுக்கு கிளிநொச்சி போனதாகச் சொன்னார்கள். ஏக்கம் ததும்ப எப்ப வருவார் என்று கேட்டேன். "அவர் அங்க இருந்துதான் படிக்கப் போறார்" என்றார்கள்...அது கேட்டது முதல் மனசு கனத்தது. நண்பனென்று அவனுடத்தான் அதிகம் பழகியது, இருந்தும் இடையில் இப்படிச் செய்திட்டானே ஒரு வார்த்தை கூடச் சொல்லவில்லை... கோவமும் கவலையும் சேர ஏமாற்றத்துடன் நட்புக்கு முற்றுப்புள்ளி வைத்தேன்.

மணலாறில் மின்னல் இராணுவ நடவடிக்கை தொடங்கிய போது ஒரு மாதத்துக்கும் மேலாய் பெரிய சண்டை. காயமடைந்த போராளிகள் வைத்தியசாலைக்கு கொண்டு வரப்பட்டார்கள். பாடசாலையில் இருந்து போராளிகளைப் பரமாரிக்க நண்பர்கள் போனார்கள். நானும் ஒரு நாள் கூடிப் போனேன். அங்கு ஒரு அதிர்ச்சி காத்திருப்பது அறியாமல் என் வேலைகளைக் கவனித்துக் கொண்டிருந்தேன். அப்போ "இங்க ஆக்கள் அதிகம் நிக்கிறீங்கள் மற்ற வோட்டுக்குப் போங்கோ" என்று ஒரு போராளி அண்ணா சொன்னார். நானும் எங்களில் சிலரும் அங்கு போனதும் கண்டகாட்சி மனதை உலுக்கியது. முதற் கட்டிலில் அவன்.... நண்பனாகி.. சொல்லிக் கொள்ளாமலே..என்னைப் பிரிந்தவன் கால் ஒன்றை இழந்து காயத்தோடு அனுங்கியபடி.... ஓடிச்சென்று பரிவோடு பார்வைகளால் பேசினேன். அவன் கண்கள் கலங்கின. ஏக்கங்கள் ததும்ப என் கைகளைப் பிடித்தான். கவலைப்படாதே எல்லாம் சரியாகிடும் என்று ஆறுதல் கூறிவிட்டு அவனையும் மற்றவர்களையும் பராமரிக்கும் பொறுப்பை கேட்டு வாங்கி சில தினங்கள் செய்தேன்.

சில வாரங்கள் கழித்து காயங்கள் ஆறி அவனும் வீட்டுக்கு வந்து பேசினான். நான் மீண்டும் போகப் போறன். "அம்மா பாவமில்லையா" என்றேன்.." அப்படிப் பாத்திருந்தா நான் போயிருப்பேனா.. என் கடமையை நான் முழுக்க முடிக்க வேணும்" என்றான் அவன். அவனிடம் உறுதி தெரிந்தது.. வேட்கை இருந்தது. பாசறையில் வளர்ந்தவன் எல்லா..திடமாய் இருந்தான். உன் இலட்சியம் வெல்ல வாழ்த்துக்கள் என்று வாழ்த்துவதை விட வேறெதுவும் பேச சந்தர்ப்பம் அளிக்கவில்லை அவன். அவனுடைய உறுதி என்னை வியக்க வைத்தது. அன்று ஒரு நாள் கோபத்தில்.. அவனுடன் வைத்த நட்புக்கான முற்றுப்புள்ளியை அந்தக் கணமே அகற்றிக் கொண்டேன். ஒரு இலட்சிய வீரனை நண்பனாக்கியதில் எனக்குள் இறுமாப்பு பற்றிக் கொண்டது.

அதன் பின் எங்கு சண்டை என்றாலும் அவன் எண்ணங்களே என்னை ஆட்கொள்ளும். இன்றும் சண்டை என்றதும் அவன் எண்ணக்களே எண்ணில் வந்து மோதின. பொழுது விடிய விடிய சண்டையின் உக்கிரம் தனிந்தது. பயம் நீங்கி கொஞ்சம் படுப்பம் என்று தூங்கிய நான் எழும்ப 10 மணிக்கு மேல ஆகிட்டுது. முகத்தைக் கழுவிட்டு சைக்கிளை ஒரு மிதி மிதிச்சு பேப்பரோட வந்து நின்றேன். செய்தி பெரிசா இல்லை. "மண்டைதீவு இராணுவ முகாம் மீது தாக்குதல்" தலைப்புச் செய்தியோடு விபரம் பெரிசா இருக்கவில்லை. விபரங்கள் கிடைக்கல்லப் போல ஸ்பெசல் பேப்பர் வரும் என்று காத்திருந்தன். வீட்டில் எல்லோருக்குள்ளும் செய்தியறிய ஏக்கம் கலந்த ஆவல். அன்றைய பொழுது அசாதாரணமாகவே கழிந்து கொண்டிருந்தது.

பிற்பகல் போல ஸ்பெசல் பேப்பர் வந்தது. விபரங்கள் தேடத்தேட ஏக்கங்கள் அதிகரித்தது, போராளிகளுக்கு என்ன இழப்பு. விபரம் காணேல்ல என்று எண்ணியபடி பக்கங்களைப் புரட்டினேன். ஓர் இடத்தில் வீரச்சாவு பட்டியலில் சிறிதாக இருந்தது. சில பெயர்கள் மட்டுமே இருந்தன. அப்பாடா பெரிய இழப்பு இல்லை. என் நண்பன் அவன் பெயரும் இருக்கவில்லை. ஏதோ சொல்லி மனம் தன்னைத்தானே தேற்றிக் கொண்டிருக்கும் போது சோக கீதம் இசைக்கும் சத்தம் கேட்டது. அப்போதுதான் மனதுக்குள் ஏதோ ஒரு குற்ற உணர்வை உணர்ந்தேன். பல கேள்விகள் முளைக்கலாயின.. அவன் மட்டுமா எனக்கு நண்பன்.. பழகினால் தானா நட்பு.. சொந்த மண்ணுக்காய் வீழ்ந்துவிட்ட இவன் நண்பன் இல்லையா.. ஏன் நான் இப்படி சுயநலத்தோடு ..??! விடை காணத்துடித்தேன்..அன்றிலிருந்து எல்லாப் போராளிகளயும் என் நண்பர்களா எண்ணிக் கொண்டேன். நண்பன் ஒருவன் வித்தாகி விழுந்துவிட்டால் கண்ணீர் சிந்தித்தான் செய்தியே படிப்பேன். வித்தாகிவிட்டவர்களுக்கு தேடிச் சென்று மரியாதை செய்வேன். "எதிர்பார்ப்புகள் இல்லா உன்னதங்கள் மாவீரர்கள்" என்ற வசனத்தை எனக்குள் பொறித்துக் கொண்டேன்..! அவர்களை உதாரணமாக்கி வாழப்பழகிக் கொண்டேன். உண்மையில் என் நண்பனே இந்தனை மாற்றங்களுக்கும் வித்திட்டவன். இப்போ அவனே புரட்சியாளன் எனக்குள். பிறிதொரு சண்டையில் அவன் வீரச்சாவடைத்த போது அவனுக்காக அழவில்லை.. இறுமாந்து கொண்டேன். எனக்குள் புரட்சியாளனாக அவனே வாழ்கிறான். அவன் வீழ்ந்தாலும் அவன் விட்டுச் சென்ற நினைவுகள் வீழாது வாடாது.



ஆக்கம் தேசப்பிரியன்

Saturday, October 15, 2005

நம்பிக்கை தந்த பரிசுகள்..! (சிறுகதை)


குழந்தை அழைத்துக்கொண்டு தோட்டத்திற்கு சென்றிருந்தேன். அங்கும் அவனது மனசிற்கு ஆறுதல் கிடைக்கவில்லை. இன்று ஞாயிற்றுக்கிழமை விடுதியில் இருந்த பிள்ளைகளைப் பார்க்க உறவினர்கள் பெற்றோர்கள் என பரிசுப்பொருட்களுடன் வந்திருந்தார்கள். அவர்களைக் காணுகையில் அந்த பிஞ்சு மனம் எதை எதிர்பாக்கும். எத்தனை தடவை என்னை கேட்டிருக்கிறான். "செல்வி 'ஆன்ரி' எப்ப வருவா மேடம்" என்று. அநாதையான தனக்கு ஆறுதலே செல்வி தான் என்று அந்த பிஞ்சு எண்ணியிருக்க வேண்டும். ஒரு தாய் ஆன்ரியாக வேடம் போட்டபடி 5 வருடங்கள் ஓடிப்போய் விட்டன. தாய்மை வலிக்காமல் விடுமா? ஒரிரு மாசத்திற்கு ஒரு முறை இங்கு வந்து போவாள். இரத்தம் பகிர்ந்த உறவுகளின் சந்திப்பு கைவிட்டு எண்ணக்கூடிய நாட்களில் அடங்கிப்போய்விட்டது. "ஏன் செல்வி ஆன்ரி என்னை மட்டும் என் அப்பா அம்மாக்கு பிடிக்கேல்லை நான் என்ன செய்தனான்" . எத்தனை தடவை ஏங்கி அவளிடமே கேட்டிருக்கும் பச்சைக்குழந்தை. என்னோடு கண்ணீரில் பகிந்து கொள்வாள். கவலைப்படாதே என்று சொல்வதைத் தவிர என்னால் என்னத்தை சொல்லிவிட முடியும். ஏற்கனவே மதிக்கவேண்டிய அறிவுரைகளை மிதித்ததனால் தானே இந்தக்கண்ணீர். அன்று இளமையின் துடிப்பில் வாயால் பேசமுடிந்த அவளால். இன்றைய அவளது நிலையில் தனது தவறை உணர்ந்து வாழமுடியவில்லை. 5 வருடத்திற்கு முன்னால் ஒளிந்தவள் தான் இன்னும் ஒளிந்தபடியே திரிகிறாள்.

எங்கள் கல்லூரி வாழ்வில் கசப்பாய். கூடவே வந்து கொண்டிருக்கின்ற ஓரு வடுவான நிகழ்வாய் போனது செல்வியின் வாழ்க்கை. செல்வி சிவா பிரியாத காதல் ஜோடிகள். காதலர்களாய் இருந்தாலும் மற்றவர் முன்னால் விலகி நடந்த ஒரு சில காதல் ஜோடிகள் முன்... யாரைப்பற்றியும் வருத்தம் இன்றி கைகோர்த்து நடந்து சென்றவர்கள். அவர்களது நெருக்கம் பெற்றவர்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. செல்வியின் பெற்றோர்கள் திருமணம் செய்து கொள்ளக்கூறி வற்புறுத்தினார்கள். தாலி என்ற ஒரு நூலும் இருவரது சாட்சியுடன் கையெழுத்து போட்டு நடைபெறுகின்ற சடங்குகள் தங்கள் காதலிற்கு தேவையில்லை என்று எத்தனை கதை அளந்தார்கள். "எனக்கு சிவா மேல் நம்பிக்கை உண்டு சிவாக்கு என் மேல் நம்பிக்கை உண்டு இதை விட வேறென்ன வேணும்" என்று ஒரு முறை எனது கேள்விக்கு விடை வந்தது. புரட்சி புதுமை என்று பேசுபவர்கள் வாழும் முறைவேறு. இந்த புரட்சியையும் புதுமையையும் இப்படி ஒரு சிலரின் வாழ்வைத்தான் சூறையாடிச் சென்று போனது. சம்பிரதாய சடங்குத் திருமணமோ, பதிவுத் திருமணமோ எதுவுமே இன்றி நம்பிக்கையில் வாழ்வோம் என்று செல்வி வாழ வெளிக்கிட்டாள். அத்துடன் அவளுடனான தொடர்புகளை செல்வியின் வீட்டில் துண்டித்துக்கொண்டார்கள். சிவாவிற்கு வீட்டில் திருமணம் பேசி அவனும் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்த விடயம் செல்வியின் காதுகளில் விழும்வரை, அந்த முறிந்து போன உறவுகள் செல்விக்கு எந்த தாக்கத்தையம் ஏற்படுத்தியதாக தெரியவில்லை.

அவளைச்சுற்றியிருந்தது நாகரீகமும் புதுமையும் தான். அந்த நம்பிக்கையில் உருவான சின்னம் தான் கதிர். அந்தக் கருவை அழிக்கச் சொல்லி சிவா கூறிவிட்டான். அதை செல்வி மறுத்ததனால் அவர்களது விரிசல் நீண்டது. அதை வைத்து தன்னை உறவு கொண்டாடக்கூடாது என்று பேசினான். அப்பொழுது தான் செல்வி தலைகுனிந்து நின்றாள். நல்ல தோழியாக என்னை நாடி வந்தவள் அலோசனை கேட்டாள். ஒரு சிசுவைக்கொல்வதில் எனக்க உடன்பாடிருக்கவில்லை. பாவத்தின் மேல் பாவம் செய்யாதே என்று ஒரு வரி செல்லி வைத்தேன்.

திருமணப்பத்திரிகை அவளது கைகளில் கிடைத்தது. எதுவுமே நடக்காத மாதிரி சிவா நடந்து கொண்டான். சிவாவின் திருமணம் முடிந்தது, கொழுத்த சீதனத்துடன் உறவுப்பெண்ணொருத்தியை மணந்து கொண்டான். எந்த ஆதாரம் என்ன சாட்சி அவனிடம் நியாயம் கேட்க? நம்பிக்கை என்று ஆரம்பமானது நம்பிக்கை எங்கே போனது. அக்னி சாட்சியாய் அருந்ததி பாத்து, சுற்றம் சூழல் சாட்சியாய், வாழ்த்துகளுடன் வாழ்க்கையில் நுழைந்தவர்கள் கூட பாதை மாறிப்போன கதைகள் உண்டு. இந்த உறவும் நம்பிக்கையில் புதுமையின் கிளர்ச்சியில் ஆரம்பித்து இரகசியமாய் முடிந்தது.

அவனால் எந்த பாதிப்பும் இல்லை என்பதாய் காட்டிக்கொண்டாள் செல்வி. என்னிடம் வந்து அடைக்கலம் புகுந்து கொண்டாள். ஊர் பழிக்கு அஞ்சினாள். பெற்றோர் முகம் பார்க்க பயந்தாள். இரு இளசுகள் செய்த தவறால் உருவாகிப்போன அந்த பிஞ்சு என்ன பாவம் செய்தது. வாடகைக்கு வீடு எடுத்து வேலைக்கு ஆள் அமர்த்தி இரகசியமாய் குழந்தையைப் பெற்றெடுத்து, இரகசியமாய் வளர்த்தாள். இப்போ இந்த விடுதியில் அந்தக் குழந்தை தஞ்சம். பிறப்பின் காரணமோ, இங்கு வாழும் காரணமோ அதுக்கு தெரியாது. ஊர்க் குழந்தைகள் பலர் ஏதேதோ காரணத்திற்காய் இந்த விடுதியில் வந்து தங்கியிருக்கிறார்கள் .

இந்த விடுதியில் உள்ள குழந்தை என்றதைத் தாண்டி என் நண்பியின் குழந்தை என்ற உரிமையோடு நான் கவனமெடுக்கிறேன். மாதம் ஒருமுறை என்னைப் பார்க்கும் சாட்டில் தனது இரண்டாவது கணவனிடம் கதை சொல்லி தன் சேயைப்பாக்க பாசத்தோடு வரும் தாயை பார்க்கையில் பரிதாபம் தான் வருகிறது. தான் செய்த தவறால் ஒரு குழந்தையின் எதிர்காலம் கேள்விக்குறியாய் இருப்பதை அவள் உணராமல் இல்லை. இன்று இரண்டு குழந்தைகளிற்கு தகப்பனாய் வாழ்கின்ற சிவாவிற்கு இது பற்றி சிந்தனை வந்திருந்திருந்ததாய் தெரியவில்லை. அவனது நம்பிக்கைக்கு தான் இன்னொரு பெண் வந்துவிட்டாளே.! உறவுகள் தெரியாது ஊர் ஏளனத்தில் நாளை தலைகுனிந்து வாழப்போவது இந்த நம்பிக்கையின் சின்னம் தானே. தடுக்கிவிழும் போது தாங்கிப்பிடிக்க ஒரு தந்தை, பாசம் காட்ட ஒரு தாய் இன்றி தளர்ந்து போகப்போவது இந்த நம்பிக்கையின் சின்னங்கள் தானே. நம்பிக்கை வைத்தவர்கள் வாழ்க்கை தொடர்கதையோ.. ????? நம்பிக்கையின் சின்னங்கள் வாழ்க்கை கேள்விக்குறியோ..?!

Tuesday, September 06, 2005

காதலில் காதல்.! (2)

ஒரு சித்திரை வருடப்பிறப்புக்கு கிட்ட ஒரு நாள் ராதிகா பாடசாலை ரியூசன் எங்கும் வரவில்லை கணேஸைத்தேடினேன் அவனையும் காணமுடியவில்லை. உண்மையில் இந்த சித்திரைப்பொங்கலுக்கு அவளை எனது வீட்டிற்கு எப்படியாவது கூட்டிட்டுப்போய் அறிமுகப்படுத்துவது என்று இருந்தேன். விதி வேறுவழி விளையாடியது. ராதிகாவின் அப்பாவிற்கு விசம்கலைச்சு அவர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்து விட்டதாய் எங்கள் தலைமை ஆசிரியர் சொன்னார். எனக்க சரியான கஸ்டமாய் இருந்தது. உடனையே அவர்கள் வீட்டிற்கு சென்றிருந்தேன்.

கணேஸின் மடியில் ராதிகா மயங்கியநிலையில் இருந்தாள். கணேஸ் கூட கனநேரமாய் அழுதிருக்கிறான். கண்கள் சிவந்திருந்தன. என்னைக்கண்டதும் மறுபடி கண்கலங்கியது. நான் அவனைத்தேற்றினேன். ராதிகாவை அந்த நிலையில் பாத்த எனக்கு தாங்க முடியவில்லை. என்க்கு அழுகையே வந்துவிட்டது. அதுதான் காதலோ என்று பின்னர் நினைத்தேன். அந்த நிகழ்வோடு எனது வாழ்க்கை மட்டும் அல்ல ராதிகாவின் வாழ்வும் தான் மாறிப்போய் விட்டது.

கணேஸ் உறவினர் ஒருவரின் உதவியுடன் வெளிநாடு செல்வதற்கென கொழும்பு சென்றுவிட்டான். உறவினர்கள் தெரிந்தவர்கள் என்ற யாருமே இல்லாத ஊரில் இருப்பதற்கு பிடிக்காமல் ராதிகாவும் தாயாரும் திரும்பவும் யாழ்ப்பாணம் சென்று விட்டனர். இவை எல்லாம் ஒரு சில கிழமைகளில் நடந்தேறின. கடைசியாக ராதிகா என்னோடு பேசிய போது அவள் இருந்த சோகத்தில் காதல் சொல்ல வேண்டும் என்று எனக்கு தோன்றவே இல்லை. அதோடு ராதிகாவிற்கும் எனக்கும் இடையிலான தொடர்புகள் அற்றுப்போயின.

எனது தலைமை ஆசிரியரிற்கு ராதிகாவிடம் இருந்து கடிதம் வந்ததாக அடிக்கடி சொல்வார். எங்களை எல்லாம் நலம் விசாரித்திருந்ததாகவும் சொல்வார். அருகில் இருந்தவர்கள் என்னை ஒருவாறு பரிதாபகமாக பார்ப்பார்கள். நான் பல தடவை தலையைக்குனிந்த படியே இருந்திருக்கிறேன். அவளது நலங்கள் அறிந்து கொள்ள முடிந்தது. அதன்பிறகு எப்பவாவது வரும் கடிதங்களும் நிண்டு போயிருந்தன.

ஐந்தாறு வருடங்களின் பின்னர் வந்த கடிதத்தில் ராதிகாவிற்கு திருமண ஆயத்தங்கள் செய்து கொண்டிருப்பதாக செய்தி வந்தது. ராதிகா ஏல் படிக்கும் போது ஏற்பட்ட பழக்கமாம் அது காதலாகி பின்பு இருவீட்டார் சம்மதத்தோடு திருமணம் முடிந்து விட்டதாகவும். ராதிகா ஆசிரியர் பயிற்சிக்கலாசாலையில் பயிற்சியில் இருப்பதாகவும். அவளது கணவன் ஒரு கணக்காளன் என்ற செய்தியும் கீடைத்தது. கூடவே அவளது திருமணப்படமும் அனுப்பப்பட்டிருந்தது, வழக்கம் போல ஆசிரியர் எனக்கு கொண்டு வந்து காட்டியிருந்தார். அவரின் அனுமதியுடன் அதிலும் ஒரு படம் எடுத்து என்னோடு வைத்துக்கொண்டேன். இதற்கிடையில் ராதிகா சிவபுரம் விட்டு சென்ற அடுத்த ஆண்டே கிளிநொச்சி இயக்கத்தின் கதையில் வந்த உடனே எனது குடும்பத்தாரும் அங்கு போய்விட்டார்கள். நான் மட்டும் வரமாட்டேன் என்று உறுதியாக இங்கேயே இருந்து விட்டேன்.

நான் படிச்ச அந்த பள்ளிக்கூடம், கல்வி நிலையம் என்று அவளது நினைவு சுமந்த அந்த இடத்தில் இருந்து விட்டேன். வீட்டில் இருந்து அம்மா, அக்கா அடிக்கடி வந்து போவார்கள். என்னையும் கிளிநொச்சி வரும்படி வற்புறுத்துவார்கள். நான் அந்த கல்லிநிலையத்திற்கு அருகில் ஒரு கடை போட்டுக்கொண்டு அதோடையே என்ர காலத்தை ஓட்டிக்கொண்டிருக்கிறேன். இன்றும் அம்மா வந்திருக்கிறா. பெண் பாத்து வந்திருப்பா படம் கொண்டு வந்திருப்பா. வழக்கம் போல நான் வேண்டாம் என்று சொல்லுவேன். அம்மா அழுதபடி வீடு திரும்புவா. இது தொடர்கதையாகப்போய்விட்டது.

அவள் என்னைக்காதலிக்கவில்லை, எனக்கு கிடைக்கப்போவதில்லை என்ற எண்ணங்கள் என்னை வருத்தியதில்லை. எனது காதலில் எனக்கு பூரண திருப்தி. அவளை உண்மையாக நேசித்தேன் என்பதில் எனக்கு சந்தோசம். என்னோடு அதிக காலமாய் பழக்கம் வைத்திருக்கின்ற எங்கள் கல்விநிலைய தலைமை ஆசிரியர் பலதடவை எனக்கு அறிவுரை கூறியிருக்கிறார். அம்மாவின் வேண்டுதலால். யார் சொல்லியம் இதுவரை என்னுள் மாற்றம் ஏற்படவில்லை. கடந்த வருடம் எங்கள் எல்லாரையும் பார்ப்பதற்கென்று ராதிகா சிவபுரம் வந்திருந்தாள். எதிர்பாராத தரிசனம். அவளில் பெரிய மாற்றங்கள். குணம், துடுக்கான பேச்சு எதுவும் மாறவே இல்லை. என்னைப்பொறுத்தவரை அவள் இன்னும் அப்படியே தான் இருந்தாள். என்னோடு நன்றாக பேசினாள். அவளது கணவனுக்கும் அறிமுகப்படுத்தியிருந்தாள். அவளது சாமத்தியவீட்டு வீடியோவில் என்னைப்பாத்ததாக சொல்லியிருந்தார். என்னை நேசிச்ச பல ஜீவன்கள் வாழ்ந்த வாழ்கின்ற இடம் மீண்டும் ஒருமுறை தரிசிக்க வந்ததாய் சொல்லியிருந்தாள். அதன் அர்த்தம் எனக்கு புரியவில்லை. என்னைப்பற்றி கதைத்தார்கள். ஏன் திருமணம் செய்யவில்லை என்று கேட்டாள். நான் பதில் பேசவில்லை.

தலைமை ஆசிரியர் பேசினார். "ஓரு பிள்ளையைக்காதலிச்சவனாம், அந்தப்பிள்ளையட்ட காதலைச்சொல்லேல்லையாம். அது ஊருக்கு போயிட்டுது. இப்ப கலியாணமும் செய்திட்டுது என்றார். இவன் இன்னும் இப்படியே இருக்கிறான். சரியான விசரன். என்ன சொல்லியும் கேக்கிறான் இல்லை ராதிகா". என்றார்.

அவளும் அவளது பாட்டிற்கு. " ஒருதலைக்காதலிற்கு இத்தனை காத்திருப்பா. உங்களுக்கு என்ன பைத்தியமா? நீங்க காதலிச்சவங்க கொடுத்து வைச்சவங்க. உங்கள தவறவிட்டிட்டாங்களே" என்றாள். நான் அந்த கொடுத்துவைச்சவள் நீ தான். என்று சொல்லவழியின்றி. ஆசிரியரைபப்பாத்தேன். அவரது கண்கள் என்னை பாவமாய் பாத்தது. என்கண்கள் ஏனோ கலங்கியிருந்தது. எனது கண்களை கண்ணீருடன் கண்ட ராதிகாவின் கணவன். " சும்மா இருடா ராதி, பாவம் அவர் கஸ்டப்படுத்தாதே" என்று அவளை கட்டுப்படுத்திக்கொண்டார்.

அவர்கள் சிவபுரத்தில் இரண்டு கிழமைகள் தங்கியிரந்தார்கள். கோவில்கள் பள்ளிக்கூடம் என்று எல்லா இடமும் சுற்றிப்பார்த்தார்கள். எனது வீட்டிற்கும் ஒரு நாள் விருந்துக்கு அழைத்திருந்தேன். நான் தனியாக சமைப்பதை கண்ட ராதிகாவும் அவளது கணவனும் எனக்கு உதவி செய்தார்கள். வீட்டிலும் இப்படித்தானாம். ராதிகாவை தனியாக சமைக்க விடுறதில்லையாம். வாழ்க்கையின் பலனை அடைந்த மாதிரி உணர்வு.

ராதிகாவை அவளது கணவன் ஒரு குழந்தை போல பார்த்துக்கொண்டான். தொலைவில் இருந்து பார்த்தேன். முகம் கழுவும் போது சட்டையை நனைத்துவிட்டாள் என்று பேசினான். அவளிற்கு சளிப்பிடித்துவிடுமாம். அக்கறையோடு சண்டை போட்டான். "சரிடா சரி வீட்டை மாதிரி இங்கையும் தொடங்காதே, பாக்கிறவை தப்பாய் நினைக்கப்போயினம். நான் என்ன குழந்தையா? உனக்கு பொண்டாட்டியாக்கும் நினைவில வைச்சுக்கொள்" அதே வாய் அவனை செல்லமாய்ச்சீண்டி அடக்கியது. அவனும் "வீட்டை வாம்மா பாத்திக்கிறேன்" என்று சிரித்தான். நான் கூட இப்படி அவளை கண்ணும் கருத்துமாய் பாத்திருப்பேனா சந்தேகம் தான். என்னை விட சிறந்த ஒருவன் அவளிற்கு கணவனாய் கிடைத்ததை இட்டு மிகமகிழ்ந்தேன்.

போகும் போது ராதிகா அக்கறையோடு சொல்லிச்சென்றாள். "உங்கட காதலி இன்னொருதரை மணந்த பின்னும் அவளுக்காக நீங்க உங்கள் வாழ்க்கையைப்பாழாக்கிறது நல்லாய் இல்லை. யோசிச்சு செய்யுங்க உங்களுக்கு புத்தி சொல்ற அளவிற்கு எனக்கு அநுபவம் இல்லை. மீண்டும் உங்களை எல்லாம் காணக்கிடைக்குமோ தெரியாது. அப்படி கிடைச்சா கண்டிப்பா உங்களுக்கென்று ஒரு வாழ்க்கை அமைஞ்சிருக்க வேணும் என்று கடவுளிட்ட வேண்டுறன். அது தான் என்னால் இப்போதைக்கு முடிந்தது" என்று கூறிச்சென்றாள். அவளது கண்ணிகளிலும் கண்ணீர் காரணம் எனக்கு தெரியவில்லை. ஏன் அழுதாள்? என்மேல் அக்கறையா? எதுக்கு? அல்லது என் காதலை அறிந்து கொண்டாளா? எப்படி?
இதற்க விடை என் ஆசிரியரிடம் கிடைத்தது.

ராதிகா சிவபுரம் வந்ததற்கு காரணமே அவர் அனுப்பிய தகவல் தானாம். எனக்காக வரவழைத்திருக்கிறார். சகலவிடயமும் அவளிற்கு தெரிந்திருந்திருக்கிறது. அதனால் தான் கணவனுடன் வந்து தான் மணம் முடித்ததை தெரியப்படுத்தி என்னையும் மறந்து வேறை யாரையும் மணக்கச்சொல்லியிருந்தாள். எனக்கு கொஞ்சம் கவலையாக இருந்தது இதைக்கேக்க. எனக்காக அவள் கவலைப்படுறதை நான் விரும்பவில்லை. எனக்கு கலியாணம் செய்யப் பிடிக்கவில்லை. அதற்காக இப்ப ஒரு முடிவு எடுத்திருக்கிறேன். எனக்கு திருமணம் என்று கூறிவிட்டு சிவபுரத்தை விட்டு வெளியேறப்போகிறேன். தலைமை ஆசிரியர் மூலம் ராதிகாவிற்கு இந்த தகவலும் கட்டாயம் போகும். என்னால் காதலிக்கப்பட்ட குற்றத்திற்காக அவள் வருந்துவது எனக்கு விருப்பமில்லை. ஊர் விட்டு மாறப்போறேன். என்வாழ்வில் மாற்றம் வருமா? எனக்கு இந்த நிமிடம் வரை தெரியாது.

முற்றும்.

Tuesday, August 30, 2005

காதலில் காதல்.! (1)

அம்மா வீட்டிற்கு வந்திருந்தா எனக்கு சுத்தமாய் பிடிக்கேல்ல, ஒரு கடிதம் போட்டிட்டு வந்திருக்கலாம். சொல்லாமல் கொள்ளாமல் வந்திருக்கிறா. இன்னும் நாலைஞ்சு நாளைக்கு ஒரே புராணமாய் போப்போது. வர வர நின்மதியில்லாமல் போச்சு என்ர அறைக்கதவை பூட்டி திறப்பைக்கொண்டு போகவேணும். இல்லை என்றால் மனிசி அறையை ஒரு கை பாத்திடும். போனமுறை வந்து செய்த வேலை காணும். படங்கள் எல்லாத்தையும் பொறுக்கி ஒழிச்சுப்போட்டா. வந்த கோவத்திற்கு வேறை யாரும் என்றால் நடக்கிறதே வேறை அம்மா என்டதால விட்டிட்டு இருந்தனான்.

அவாக்கு இதே வேலையாப்போச்சு எத்தனை வருசமாச்சு சொன்னாக்கேக்கமாட்டன் என்கிறா. அவாவும் பாவம் தானே. என்ர காதல் புனிதம் அவவுக் எப்படிப்புரியும். பாவம் வந்தவ சந்தோசமாய் போகட்டும். என்ன கதைச்சாலும் சத்தம் போடாமல் இருப்பம். அந்த நினைவுகளோட வாழுறதே எனக்கு சந்தோசம் தான். அதை பெத்த தாய் அனுமதிக்க மாட்டா தான். இருந்தாலும் ஏனக்கு அதில நின்மதி. இப்ப நினைச்சாலும் வலு சந்தோசம் தான்.
------
அப்ப நான் A/L படிச்சிட்டிருந்தனான் ராதிகாவும் இந்த சிவபுரம் மகாவித்தியாலத்தில தான் படிச்சிட்டிருந்தவ. அவ அப்ப சின்னப்பிள்ளை ஆனா என்ர மனசில ஆழமாய் பதிஞ்சிட்டா, அழகான பிள்ளை தான். அவளின்ர பேச்சு தான் என்னைக்கவர்ந்தது. துடுக்காய் பேசுவாள், பயப்பிடத்தெரியாது. எங்கட ஆசிரியர்கள், மாணவர்கள் என்று எல்லாரிட்டையும் பிரபல்யமாய் இருந்தவள்.

சிவபுரத்தில இடம் பெயர்ந்து வந்திருந்தாள், சொந்த இடம் யாழ்ப்பாணத்தில எங்கையோ தான். ஏழாம் ஆண்டில் தான் அவள் முதல் முதல் சிவபுரம் வந்தவள். வந்த கொஞ்ச நாளில தன்ர திறமைகளைக்காட்டி எல்லாரின்ர மனசிலையும் இடம் பிடிச்சிட்டாள்.
முதல் முதல் அவள் எனக்கு அறிமுகமானது ஒரு சின்னச்சண்டையில தான். எங்கட பெடியள் வெறும் கமறாவை வைச்சு பொம்பிளைப்பிள்ளைகளை படம் எடுக்கிறம் என்று பிளாஸ் அடிச்சிக்கொண்டு இருந்தவங்கள். அதுக்குள்ள பிலிம்றோல் இல்லை இதைத்தெரியாத அந்தப்பிள்ளையள் பயந்து வரமறுத்திட்டுதுகள். என்ன இது வேலை என்று கேக்க சின்னனுகளை அனுப்பி விட்டிருந்தவை


அப்ப வந்தவள் தான் ராதிகா. பயப்பிடாமல் வந்து எங்கட பெடியளை நல்ல கேள்வி கேட்டாள். இன்னும் ஒருபடி மேல போய் கமறாப்பறிச்சு பிலிம்றோலைக்கழட்ட முயன்றாள் அப்ப தான் அவைக்கு தெரியும் வெறும் கமறாவை வைத்து பிளாஸ் அடிக்கிறம் என்ற விசயம். அதன்பிறக பிளாஷ் என்று எல்லாரும் நினைத்திருக்க நான் மட்டும் ராதிகாவை பலவடிவங்களில் அடிக்கடி படம் எடுப்பேன். இரண்டு அல்பங்கள் நிறைய அவளின் படங்கள் என்னிடம் இருக்கிறது. இது அவளிற்கே தெரியாத விடயம். எனது சகதோழன் நெருங்கிய நண்பன் கரனுக்கு மட்டும் தெரியும். சிவா வேண்டாமடா என்று பலமுறை சொல்லியிருக்கிறான்.
அதுக்கு பிறகு பிள்ளையள் எல்லாம் பயப்பிடாமல் வருங்கள் படத்தை எடுத்தா எங்கட பொடியள் கலியாணம் முடிச்சமாதிரி அலுவல் பண்ணிப்போடுவாங்கள் என்ற பயம் தான் அந்தப்பிள்ளையளுக்க.
அன்று தான் அவள் எனக்கு அறிமுகம். அவளின் துணிவு எனக்கு பிடிச்சிருந்தது. அதுக்கு பிறகு அவளை கவனிக்க ஆரம்பிச்சிட்டன். அன்று "கெட்டிகாரி எப்பவும் இப்படி துணிவா இருக்கவேணும் " என்று பாராட்டிவிட்டேன். "நன்றி அண்ணா, உங்கட நண்பர்களிற்கு கொஞ்சம் அறிவுரை சொல்லக்கூடாதா?" என்று என்னைக்கடிச்சு விட்டுச்சென்றாள்.
அன்றில் இருந்து அவளோடு பழக்கம் ஆரம்பமானது.

ஒரு நாள் நான் ரியுசனில் நிக்கும் வேளை. என்னோடு O/L லில் கூடப்படிச்ச கணேஸ் ராதிகாவை ஏத்திக்கொண்டு வந்தான். யார் என்று விசாரித்ததில் அவள் கணேஸின் ஓரே ஒரு செல்லத்தங்கை என்ற விவரம் கிடைத்தது. அவன் எனது நண்பன் தான் நான் A/L லில் கலைப்பிரிவிற்குள் நுழைந்தேன். அவன் வர்த்தகம் படிச்சவன். இருந்தாலும் அடிக்கடி சந்தித்துக்கொள்வோம். அவனின் தங்கை என்பது எனக்கு இன்னும் மகிழ்ச்சியே.
ஒரு சில வாரங்கள் ஓடின. இரண்டு நாளாய் அவளை நான் காணவே இல்லை. எங்கை என்று விசாரிச்சதில் அவள் பெரியமனிசியாகி விட்டாள் என்ற செய்தி கிடைச்சது. சாதாரனவிடயம் தானே ஆனால் அது என்னை ஆட்டிப்படைத்தது. கோவிலுக்கு சென்று அர்ச்சனை செய்தேன். ஏன் என்ற கேள்விக்கு அவள் பள்ளிக்கூடம் வராத 3 கிழமைகள் என்னை வாட்டிய ஏதோ ஒரு நினைவு பதில் சொன்னது. அதுவரை இருந்த அன்பு காதலாய் மாறியதாக உணர்ந்தேன். ராதிகாவிற்கு மஞ்சள் நீராட்டு விழா அவளது பள்ளி தோழிகள் ஆசிரியர்களிற்கு சொல்லி சிறப்பாக நடந்தது. கணேஸின் நண்பர்கள் என்ற ரீதியில் நாமும் கலந்து கொண்டோம். உண்மையைச்சொன்னால் நான் அந்த சடங்கிற்காய் அதிக வேலை செய்திருந்தேன். அதில் எனக்கு மகிழ்ச்சியும் கூடத்தான். ராதிகா அன்று நடந்து கொண்ட விதத்தில் அவளிற்கு இந்த நிகழ்வில் விருப்பம் இல்லை என அறிந்து கொண்டேன். சாதாரனமாகவே அவள் புதுமை பேசும் பெண். இதை எப்படி ஏற்பாள்.? (நமது சமூகத்தில் இந்த சடங்கு என்பது ஒரு நிகழ்வாக கொண்டாடப்படுவது வழக்கமே)

நண்பனின் தங்கை என்பதால் நண்பர்கள் எல்லோரும் சேந்து கொஞ்சக்கொஞ்ச காச சேத்து ஒரு பரிசுப்பொருள் வாங்குவதாக திட்டமிட்டிருந்தார்கள். அந்த பரிசுப்பொருளுக்கு நானும் காசு கொடுத்திருந்தேன். ஆனால் அவளிற்காய் தனியாக ஒரு சிறிய மோதிரமும் வாங்கியிருந்தேன். கடைசி வரை அவளிற்கு அதைக்கொடுக்க முடியவில்லை. இப்பவும் அதை வைத்திருக்கிறேன்.
அதன் பிறகு அவளில் பலமாற்றங்கள். வளர்ந்து விட்டாள் அழகாய் மிளிர்ந்தாள். அவளை பார்த்திட்டு இருப்பது எனது முழுநேர வேலையாக மாறிவிட்டது. அவளது பள்ளிக்கூட மற்றும் ரீயுசன் நேர அட்டவணைகளிற்கேற்ப எனது வேலைகளை குறித்துக்கொண்டேன். எப்பொழுதும் அவளைத்தரிசிப்பதாற்காய் காத்திருப்பேன். அதில எத்தனை சுகம். அடிக்கடி நினைத்துச்சிரிப்பேன்.
அவளோடு கதைப்பதற்கான, அவளுக்கு உதவி செய்வதற்கான சந்தர்ப்பங்களை வலிய நானாய் உருவாக்கினேன். அவளுக்கு தெரியாத நேரம் அவளது துவிச்சக்கரவண்டியில் காத்தைத்திறந்து விடுவேன். அவளிற்கு முன்னால் காற்றடிப்பேன். அவளது அன்பைப்பெற பல வழிகளில் முயன்றிருக்கேன். ஒரு முறை நல்ல மழை அவள் குடை கொண்டு வர மறந்துவிட்டாள். என்ர குடையைக்கொடுத்தேன். "நீஙக என்ன செய்வீங்க" என்று கேட்டாள். "பக்கத்தில்தானே வீடு போய்விடுவேன்" என்று சொன்னேன். மறுநாள் குடையை திருப்பித்தந்தாள். எனது பொருட்களை சாதாரனமாகவே யாருடனும் பகிர்ந்து கொள்வதில்லை.

என்னைப்பொறுத்தவரை அவள் வேறாக தெரியவில்லை. அன்றில் இருந்து அந்தக்குடைக்கு தனியான கவனிப்பு அந்தப்படியே இப்போதும் வைத்திருக்கிறேன். நான் வீட்டிற்குள் எனது அறையினுள் அடிக்கடி பிடிப்பதுண்டு. அதற்குப்பிறகு அந்தக்குடை வெளியுலகம் சென்றதில்லை. இப்படி அவளுடைய நினைவுகள் சுமந்து என்னோடு வாழும் ஒவ்வொரு பொருட்களிற்கும் கதைகள் உண்டு.

ஓரு முறை சரஸ்வதிப்பூசைக்கு அவள் தனி நடனம் ஆடியிருந்தாள் அன்றும் படம் எடுத்திருந்தேன். "ஏன் என்னை நீங்கள் படம் எடுத்தனீங்கள்" என்று அவள் கேட்ட கேள்விக்கு அவளிடம் பதில் சொல்ல எனக்கு முடியவில்லை. எங்கள் வகுப்புப்பிள்ளைகளை எடுக்கும் போது உங்களையும் எடுத்தான் என்று கரன் சொல்லிச்சமாளித்தான். அப்படியே ஒரு சில படங்களையும் கொடுத்தேன். பணம் கட்டாமல் வாங்க மாட்டன் என்று சொல்லிவிட்டாள். அதற்காக அவளிடம் வாங்கிய 125 ரூபா இன்னும் என்னிடம் உள்ளது. இப்படியே தொடந்தது வருசம் ஓன்று போயாகிவிட்டது. அவளிடம் காதல் சொல்ல நான் நினைக்கவில்லை. சொல்லவும் முடியவில்லை. அவளை காதலிப்பதாக கூறிய இன்னொருவனை அவள் பேசியதாக அறிந்தேன். அதனால் எனக்கும் அவளிற்கும் விரிசல் வந்துவிடக்கூடாது என்பதால் காத்திருந்தேன். அவளிற்கு முன்னால் என்னை பகிடிபண்ணுவார்கள் பட்டம் தெளிப்பார்கள். இருவரும் ஒரே நேரம் ஒரு இடத்தில் நின்றால் குடும்பமா வந்திட்டியளா என்று கேட்பார்கள். ஆனால் இவைகள் அவளிற்கு விளங்கியிருக்கும் என்று நான் நினைக்கவில்லை அந்த நேரங்களில் அவளிடம் எந்த மாற்றத்தையும் நான் கனவில்லை. நான் அவளைக்காதலிக்கும் விடையம் எனது வீட்டிற்கு சாதுவாக தெரிந்திருந்தது. அப்படியே எனது ஆசிரியர்களிற்கும் தெரிந்திருந்தது. "சிவா ராதிகா எங்கே" என்று என்னைக்கேலி பண்ணியிருக்கிறார் எங்கள் தலைமை ஆசிரியர் ராகவன். அது எனக்கு பலத்த சந்தோசத்தைக்கொடுக்கும். அந்த நிமிடங்கள் நான் பறந்து கொண்டிருப்பேன். இப்படி எனக்குள்ளே காதலை புதைத்த நான். கடைசிவரை என் காதலை அவளிடம் சொல்லாமல் இருப்பேன் என்று நினைக்கவில்லை. சொல்வது அவசியமாகவும் எனக்க படவில்லை. "

அடுத்தபகுதி

Friday, August 12, 2005

உயிர் ஊசலாடிய நிமிடங்கள் - சிறுகதை

மத்திய லண்டனை நோக்கி பேரூந்து சென்று கொண்டிருந்தது. அருகே அமர்ந்திருந்த தங்கையின் கடி தாங்க முடியவில்லை. "அக்கா இப்ப இந்த பஸ்ஸில குண்டிருந்தா நாங்கள் காலி" என்று நகைச்சுவையாக பேச்சை ஆரம்பித்தவள். "அது சரி உந்த கிபீர் பொம்பர் எல்லாத்திலையும் இருந்து தப்பி வந்து எவனோ ஒருத்தன் எதுக்காயோ வைக்கிற குண்டு வெடிச்சு சாகோணுமே". துக்கம் கலந்த ஒரு தொனியில் ஒலித்தது மீதிவார்த்தைகள். சிரிப்பு வரவில்லை! சிரிக்கவும் முடியவில்லை "கவலைப்படாதேடி இத்தனை கண்டங்களை தாண்டி வந்தனாங்கள் இப்படி அற்பமாய் போக மாட்டம், அதுவும் நீ போக மாட்டாய் சத்தம் போடாத சனம் தப்பாய் நினைக்கப்போகுதுகள்". என்று மெல்ல அவளை சமாதானப்படுத்தினேன்.

இன்னும் அவளிற்கு கிபீர் எல்லாம் நினைவில இருக்கே, அது சரி எப்படி மறக்கமுடியும் அந்த நாட்களை. அப்போது எனக்கு பத்து பதினைஞ்சு வயசிருக்கும், நல்லாய் நினைவிருக்கு ஒவ்வொரு நாளும் கிபீருக்காக பயந்து ஓடியிருக்கிறம் இப்ப நினைச்சாலும் மனசில என்னவோ செய்யும். சாதாரனமாய் எல்லாருக்கும் காலை விடியும், விடிஞ்சு பள்ளிக்கூடம் போய் காலை ஒன்று கூடலுக்காய் கூடியிருப்போம், சிலநேரம் அந்த நேரம் நாசமறுப்பான் (கிபீர்) வருவான் விழுந்து கிடவுங்கோ எண்டு மாணவர் தலைவர்கள் சொல்ல பிள்ளைகள் எல்லாம் தலை தெறிக்க ஓடுங்கள் காரணம். சனநெருக்கமான இடத்தில தான் அடிப்பாங்கள், காடுகள் வழிய போய் தனியாய் மறைஞ்சிருந்தா அடியாங்கள் என பெற்றோரின் அறிவுறுத்தலாய் கூட இருக்கலாம். (வெள்ளை சீருடை பளிச்சென்று தெரியும் அல்லவா?) நான் கூட அப்படி ஓடியிருக்கிறேன் அதை எப்படி மறக்க முடியும் நல்லா நினைவிருக்கு. வன்னியில எங்கள் பாடசாலை மைதானம் பின்னால் இருந்த பெரிய காட்டை அழிச்சு உருவாகிக்கொண்டிருந்தது. அந்தக்காட்டுக்குள் தான் ஓடுவோம் முட்கள் காலைக்கிழிக்கும் நோக்கூட அறியமாட்டம். அவன் போயிட்டான் என்று தெரிஞ்சாப்பிறகு தான் காலில முள்ளுக்கிழிச்ச காயம் தெரியும்! ரத்தம் வழியிறது தெரியும்! இப்படி எத்தனை நாள். அன்று முட்கள் கிழிச்ச காயங்கள் தழும்புகளாக இன்னும் கால்களில இருக்கு அடிக்கடி நினைவு படுத்திக்கொள்ள ஒரு ஞாபகச்சின்னமாய்!. இன்னும் எத்தனை பேருக்கு கை, கால் இல்லாமல் போயிருக்கும். அதிகமாய் மத்தியான நேரம் வருவான். அதுவும் இடைவேளை நேரம் எங்கட சாப்பாட்டில மண்ணைப்போடத்தான் வருவான். எத்தனை நாட்கள் திட்டியிருப்பம் இந்த ஆங்கிலப்பாடநேரம் வாறதுக்கு உனக்கு என்னடா என்று.

எங்கையோ குண்டு போட்டிட்டு அவன் போக இண்டைக்கு நாங்கள் தப்பிச்சம் என்று நாங்கள் மகிழ்ந்திருக்க. "எங்கோ ஒரு மூலையில கண்டிப்பாக செத்தவீடு நடக்கும். செத்த உயிருக்காய் கவலைப்படுறதா? தப்பின எங்களை நினைச்சு சந்தோசப்படுறதா?" விதி அப்படி விளையாடினது.

"நெருப்பு மழையே வந்தாலும் ஒருநாளும் எங்கள பள்ளிக்கூடம் போகாமல் நிக்கச்சொல்லி அம்மா சொல்லமாட்டா. நாங்களும் நின்றதில்லை. "எங்க செத்தாலும் சா தானே இங்க வாறது அங்க வராதா?" வாண்டுகளாய் நாங்கள் 5 பேர் அப்ப எங்களக்கு அம்மா சொன்ன அறிவுரை, எல்லாரும் ஒரு இடத்தை போய் நிக்கோணும் ஓடினாலும் சரி விழுந்தாலும் சரி ஒன்றா செய்யுங்கோ என்று சொல்லுவா. வீட்டிலை நிண்டாக்கூட 5 பேரையும் இழுத்துக்கொண்டு போய் ஒரு மரத்திற்கு கீழ வைச்சிருப்பா கூட்டமாய் நில்லாதேங்கோ என்று மற்றவை பேசுவினம் எங்களுக்கு கிட்ட வராயினம். ஆனா அம்மா சொல்லுவா "செத்தால் எல்லாரும் சேந்து சாவம், நான் இல்லாமல் பிள்ளையளும் பிள்ளையள் இல்லாமல் நானும் என்ன செய்ய முடியும்" என்பார், எல்லாரையும் சுத்தி இருக்க சொல்லிப்போட்டு அம்மா அணைச்சுக்கொண்டிருப்பா. அப்படி வாழ்ந்தனாங்கள், இரண்டு இரண்டரை வருசம் இப்படியே இருந்தனாங்கள். அந்த எமனிட்ட இருந்து தப்பிறது உண்மையா சின்ன விசயம் இல்லை.

வழமையா ஆமிக்கு ஏதாவது இழப்பு என்றா எங்களுக்கு மகிழ்ச்சி தான். ஆனால் சிலசமயங்கள் எங்கள் பள்ளிக்கூடத்திற்கு கிட்ட உள்ள மாவீரர் துயிலும் இல்லத்திற்கு வித்துடல்கள் கொண்டு வருவார்கள், அந்த நேரம் மனம் கனதியாக இருந்கும். இப்படித்தான் கட்டுநாயக்கா விமான நிலையம் தாக்குதலின் போது விமானங்கள் அழிக்கப்பட்ட செய்தியைக்கேட்டு மகிழ்ச்சி வெள்ளத்தில ஆரவாரிச்ச ஆயிரம் ஆயிரம் தமிழர்களில நானும் ஒருத்தியா இருப்பன். சிறுக சிறுக எங்களை தினம் தினம் கொலை செய்த அரக்கர்கள் அழிஞ்ச, அழிக்கப்பட்ட நாள் அதுவல்லவா உயிரைக்கையில பிடிச்சுக்கொண்டு ஊசலாடிய அந்தக்கணங்களை யாரால மறக்கமுடியும். அநுபவிச்ச யாருக்கும் உயிருள்ளவரை மறக்காது . அந்த அரக்கனிட்ட ஒருநாளா, இருநாளா எத்தனையோ நாட்கள் தப்பினம். அங்க அவங்கள் எங்கள அழிக்க குண்டு போட்டாங்கள் தப்பித்தப்பி வந்தம் இங்க வந்து சம்பந்தமே இல்லாமல் சாகடிக்கப்படுவமா என்ன? நினைச்சுப்பார்க்கவே கண்கள் கலங்கியது. "என்ன அக்கா கிபீரையும் பங்கரையும் நினைச்சிட்டியே நாங்கள் இறங்க வேண்டிய இடம் வந்திட்டுது வா வா" என்ற தங்கையின் குரல் என்னை மறுபடி நிகழ்காலத்திற்கு கொண்டு வந்தது. மெல்ல வண்டியை விட்டு இறங்கினோம். " அப்பாடா பிள்ளையாரை நேந்து கொண்டிருந்தனான் ஒண்டும் நடக்க கூடாது எண்டு போய் ஒரு தேங்காய் உடைச்சுப்போடு" என்றவளை பாத்து சிரிப்பு வந்தது பத்திரமாய் இறங்கிய சந்தோசத்தினாலோ?.

Saturday, July 16, 2005

ஒன்பதாவது முடிச்சு! ( சிறுகதை)

"என்ர இரண்டாவது மனிசன் மோசம் போன போது முதல் மனிசன் உயிரோட இருந்தவர், நான் விதவையா இல்லையா? என்ர நிலை என்ன எனக்கு தெரியேல்ல"

ஆனந்தியின் இந்த வார்த்தைகள் என்னை சிந்திக்க வைத்தது!. ஆனந்தி என்று பெயர் ஆனந்தம் அக்கம்பக்கத்து வீட்டிலும் அவளுக்கருகாய் இருந்ததில்லையாம். கண்ணீர் நிறைந்த ஒரு அபலையின் கதையை கேட்டிவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்தேன். இந்த கதை என்னை விட்ட விலக பலநாள் எடுக்கும் என்பதை அதன் தாக்கம் அப்போதே தெரிந்து விட்டது.

ஆனந்தி, அந்த வீதியில் உள்ள கட்டழகுப்பெண்களில் அவளும் ஒருத்தி. மற்றப்பெண்களிற்கு கிடைக்கின்ற மதிப்பும் மரியாதையும் அவளிற்கு கிடைப்பதில்லை. அவள் 30 வயசினுள் மூன்றாவது திருமணம் செய்து விட்டாள்.
இத்தனைக்கும் யாழ்நகரில் எங்கையே ஒரு கிராமத்தில் பிறந்து இன்று இப்படி வாழும் ஒரு தமிழ்ப்பெண். பிறப்பில் கூட அவளிற்கு சோதனை தான். தாயையும் வீட்டில் நின்ற ஒரு பசுமாட்டையும் கொண்டு அவள் வெளியில் வந்தாள் என்று அடிக்கடி பேசுவார்களாம். ஆனந்தி பிறந்த போது வீட்டில் நின்ற பசுமாடும் பிரசவத்தில் தாயும் இறந்து போய்விட. "அவளிறக்கு தாயை விழுங்கியவள்" என்ற பட்டப்பெயர் கூடவே வந்து சேந்து விட்டது. சற்று வித்தியாசமானவளாக பார்க்கப்பட்டாள். தந்தைக்கு மனைவியாய் வீட்டிற்கு சித்திவர அவளது நிலை இன்னும் பாரதூரமானது. வெளியுலகம் வெறுமையாய் அவளிற்கு. வெளியிலே செல்ல தடை பாதி என்றால், போக்கிடம் தெரியாமல் வீட்டினிலே அடைபட்டது பாதி. காலங்கள் காத்திருக்கவில்லை பருவவயதை அடைந்து விட்டாள். "எவனை முழுங்க இவள் பெரிசானாளோ" தந்தையின் காதுப்பட சித்தி குத்திச்சென்றாள், தந்தை சித்திதாசனாய்.

தான் அப்படிப்பட்டவளா? அதிஸ்டம் இல்லாதவளா? என்ற ஏக்கம் அவளை ஆட்கொள்ள தவித்தாள். தனிமையில் எங்கோ ஒரு மூலையில் தவித்திட்டிருந்தவளை மச்சான் சீலன் ஆற்றினான். பருவமடைந்த புதிசு வேறை சீலனை கவர்ந்திழுத்திருக்கிறாள், இருவரும் காதல் கொண்டனர். ஆநாதரவாய் இருந்தவளிற்கு ஓரே ஒரு ஆதரவு சீலன் தான்.

சீலன் வேறு யாரும் அல்ல ஆனந்தியின் தாய் மாமன் மகன். சீலன் வீட்டில் கரையேற வேண்டிய இரண்டு பெண்கள் கரையேற்ற அவன் விலைமாடாய் நின்றான். அவனிற்கு அத்தனை விலை கொடுத்து ஆனந்திக்கு கணவனாக்க. ஆனந்திவீட்டில் வசதியும் இருக்கவில்லை மனமும் இருக்கவில்லை.

இளமை செய்த வேகம் ஒரு நாள் இருவரும் ஓடிச்சென்று விட்டார்கள். அதன் பின்ன அவளிற்கு "ஓடுகாலி" ஆனந்தி என்ற பெயர் தான் பிரபல்யமானது. இருவரது வீட்டில் இருந்தும் வெளியேற்றப்பட்ட புது ஜோடிகள். அருகிலேயே சீலனின் நண்பன் வீட்டில் வாடகைக்கு குடியமர்ந்தனர். கூலித்தொழில் தான் சீலன் செய்தான். அவள் சந்தோசமாய் வாழ்ந்தாள். குத்தல் இல்லை, நொட்டை இல்லை, சுதந்திரமாய் கால்வயிறு கஞ்சி கிடைச்சால் போதும் என்பது அவள் நிலை. காலம் கரைந்தோடியது, ஆனந்தி ஒரு குழந்தைக்கு தாயானாள் அவளது 19 தாவது வயசில். சீலன் வீட்டார் வலிய வந்து ஒட்டிக்கொண்டனர் பேரப்பிள்ளை என்ற சாட்டோடு. (அவர்களிற்கு அவன் தானே ஆதாயம்) ஆனந்திவீட்டார் ஒதுங்கியே இருந்தனர் ஓடுகாலி என்ற வெட்டோடு. (சீதனம் இன்னும் கொடுக்கப்படவில்லையே)

ஆசை 60 நாள் மோகம் 30 நாள் எல்லாம் போயாச்சு. கலியாண வயசை தாண்டிய அக்கா. வயசை நெருங்கிய தங்கை. இருவரையும் காணுகையில் தான் செய்தது தப்பு என்று சீலனுக்கு புலப்படத்தொடங்கியது. வாய் வார்த்தையால் அவளை சாடத்தொடங்கியவன். சாட்டையால் அடிப்பது வரைக்கும் சென்று விட்டான். இரண்டொரு முறை அடிச்சு கலைச்சும் இருக்கிறான். தாய் வீடு என்று சென்றால் அங்கு தாய் இல்லை சித்திதாசன் தகப்பன், என்ன செய்யமுடியும்?. சுவரில் எறிந்த பந்து போல மீண்டும் அவனிடமே வந்து விடுவாள். இடர்களிற்கிடையில் இன்னொரு பெண் குழந்தை உலகை தொட்டுவிட்டாள்.

"அடி உதை பழகிவிட்டது, அடுப்பிற்கு வாழ்க்கைப்பட்டா நெருப்போடு வாழ்ந்து தானே ஆகவேணும்" அனுபவித்தாள். பிரச்சனை வேறுவிதமாய் சென்றது. வாடகைக்கு வீடு கொடுத்த நண்பன் சீவாவுடன் ஆனந்தியை தொடர்பு படுத்தி புதிய பிரச்சனையை தொடக்கிவிட்டான் சீலன். அதுவரை அப்படி ஒரு எண்ணமே அவளுள் இருந்திருக்க வாய்ப்பில்லை. அவனது சித்திரவதையை தாங்கியதே அவளுக்கு வேலையாச்சு. சிவாவும், சீலணும் சிறுவயசு நண்பர்கள் ஒன்றாய் வேலைக்கு சென்று ஒன்றாய் வீடுவருவார்கள். இதற்குள் அவன் வீட்டை வந்து சென்றான் என்பான். இரவும் பகலும் வேதனை, சிவாவும் இதை தெரிந்தும் தெரியாததும் போல நடந்து கொண்டான். "இந்த தொல்லை வேண்டாம் நாங்கள் வீட்டை மாறுவம்" என்றவளை. "ஏன்டி அங்க எவனாவது இருக்கிறானா?" என்று உதைப்பான் , துடிதுடித்துப்போவாள். அவனது வீட்டில் இருந்தும் எந்த ஆதரவும் இல்லை. வேண்டா பெண்டாட்டி மட்டும் அல்ல அவள் வேண்டா மருமகளும் கூட.

அன்று அவளது வாழ்வில் பெரிய திருப்புமுனையாய் போனது, குழந்தைகளுடன் மாரடிச்சு ஒரு கறியும் சோறும் வைச்சிட்டு சீலன் என்ன இடியோட வாறானோ என்று ஏங்கிக்காத்திருந்தாள், அவள் எதிர்பார்த்தபடியே நடந்தது. முழுவெறியோடு வந்து கறிச்சட்டியை தலையில் வைத்தான். வீட்டு மூலையினுள் போட்டு உதைத்தான். இன்னும் கொஞ்சம் ஏத்துவதற்காய் மீண்டும் வெளிக்கிட்டு போனான். அவன் செய்து விட்டு போன அபிசேகத்தை கழுவிவிட்டு அழுத குழந்தையை பால் கொடுத்து கிடத்திவிட்டு ஒரு மூலையில் ஒதுங்கி தலை விதியை நினைத்து அழுதவளை ஒரு கை தொட்டது. திடுக்கிட்டு எழுந்தாள்.

முன்னால் நிண்டது சிவா, "பயப்பிடாதேங்கோ இதுவரை உங்கட முகத்தை கூட நான் பாத்ததில்லை, ஆனா பிறந்த அவனுக்கு பிறந்த குழந்தையை கூட சந்தேகப்படுற அளவிற்கு சீலன் போட்டான், இனி இவனோட வாழ்ந்து என்னத்தை காணப்போறியள். உங்களுக்கு ஆட்சேபனை இல்லை என்றால் என்னோட வாங்கோ, எங்கையாவது கண்காணத இடத்திற்கு கொண்டு போய் உங்கள கண்கலங்காமல் வைச்சுக்காப்பாத்திறன், இப்படி ஒரு எண்ணம் எனக்கு இதுவரை இருந்ததில்லை சோத்துப்பானை வெளியில வந்த வேகத்தில எட்டிப்பாத்தன் சுடுகறிச்சட்டி தலையில வந்ததை, அந்த கணம் எனக்கு இப்படி கேக்க தோன்றியது, தப்பிருந்தா மன்னிச்சுக்கொள்ளுங்கோ, உங்களுக்கு விருப்பம் என்றால் யோசிச்சு சொல்லுங்கோ, சத்தியமாய் இப்படி ஒரு இழிஞ்ச மனிசனாய் ஒரு நாள் கூட நான் இருக்கமாட்டன்". என்றான். சட்டென அந்த நொடி அவளிற்கு தோன்றியது. அவனோட போயிடணும் இந்த நரகத்தில இருந்து தப்பி ஓடவேணும் என்ற ஒரே நினைப்பு. "சரி நான் வாறன் இரண்டு குழந்தைகளையும் என்ன செய்யிறது" என்றவளுக்கு. "எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை அதுகளை தூக்கிட்டு வாங்கோ". ஒரு கணம் யோசிச்சவள். குழந்தையை விட்டிச்சென்றாள். அதுகள் அவனிற்கு தண்டனையாய் இருக்கவேணும் என்றதால். அவன் வரும் வரை ஒரு மறைவில் இருந்து பார்த்தவள் அவன் வந்தவுடன் அந்த இடத்தை விட்டு அகன்றே விட்டாள். கடைசியாக அந்த மண்ணை அவள் மிரிச்சது அன்று தான். அதன் பின் அவளது பிள்ளைகள் பற்றி அப்பப்ப தகவல்கள் அறிந்த வண்ணம் இருந்தாள். இப்ப அவர்கள் வளர்ந்து பெரிய ஆக்கள், சீலன் வெளிநாடு சென்று விட்டான். அவளை தேடவே இல்லை. அவளை ஓடுகாலி நடத்தை கெட்டவள் என்று பல பெயர் கொண்டு அழைத்தது ஊர். "தினம் தினம் சித்திரவதை செய்த போது யாருமே நெருங்கிப்பார்க்கவில்லை ஒரு வார்த்தை பேசவில்லை இப்ப எல்லாரும் கண்டபடி பேசிறார்கள்" என்று அவள் கதறி அழுதபோது நான் ஆடிப்போய் நின்றேன்.

இத்தோடு அவளது முதல் தாலியின் கொடுமையான வரலாறு முற்றுப்பெற, இரண்டாவது தாலியின் சோக கதை என்னை எதோ செய்தது. சிவா சொன்ன மாதிரியே இருந்தான். சீலனைப்பற்றி ஒருவார்த்தை கூட பேசியத கிடையாது. அவன் ஒரு சாரதி. போதும் போதும் என்ற வருமானம் இருவரும் நின்மதியாய் வாழ்ந்தனர். என்ன தான் சந்தோசம் வந்தாலும் ஆனந்தியின் மனம் நடுவழியில் விட்டு வந்த இரு குழந்தைகளை அவள் இன்னும் மறக்கவில்லை, எப்படி மறக்க தொப்பிள் கொடி உறவென்பது சாதாரனமானதா ஒரு நொடியில் மறந்து விட? அவளது துயரம் தெரிஞ்ச சிவா அவளை வற்புறுத்தவில்லை. என்ன தான் இருந்தாலும் அவனது உதவிக்கு அவளால் முடிந்தது சிவாவிற்கும் ஒரு அழகிய பெண் குழந்தையை பெற்றுக்கொடுத்தாள் 2 வருடத்தில். வாழ்க்கை பூந்தோட்டமாய் பூத்துக்குலுங்கியது. தனிமையான நேரத்தில் மூத்த பிள்ளைகளை எண்ணி அழுவதும் உண்டு. சீவாவின் குழந்தையில் அந்த குழந்தைகளைப்பார்த்தாள். விதி மறுபடி விளையாடியது, வாகன விபத்தொன்றில் சிவா உயிர் தவறியது. விதவைக்கோலம். அன்று தான் சீலன் உயிரோடு இருக்க சீவா இறந்து போனான். " நான் விதவையா சுமங்கலியா.?? எனது நிலை எனக்கே தெரியேல்லை" என்று ஆனந்தி சொன்னபோது. கலங்கி அறியாத என் கண்கள் கலங்கியது.

ஒரு குழந்தையுடன் இதே வீட்டில் இருந்தாள். சாதாரனமாயே ஒரு ஆணின் உழைப்பில் ஒரு குடும்பம் ஓடுவது கஸ்டம். யாரைத்தெரியும்? என்ன தெரியும்? பட்டினியாய் பல நாள் கிடந்தாள். அயலவர் பரிதாபத்தில் குழந்தை ஒரு நேரம் வயிராறியது. அப்போது தான் சீலணின் தம்பி கண்ணனின் பரிதாபம் ஆனந்தி மேல் விழுந்தது. அவள் கணவனை விட்டு ஓடி வந்தவள் என்பது அந்த வட்டாரத்தில் அனைவரும் அறிந்திருந்தார்கள். கண்ணன் அவளிற்கு ஆதரவாய் இருந்ததை பலர் பலவாறு பேசினார்கள். பல வருடமாய் அவர்களிற்குள் எந்த நெருக்கமும் இருந்ததில்லை. காலம் மாற்றியது, எத்தனை நாள் அவனை எதிர்பார்த்திருப்பது. நேரடியாகவே கேட்டாள், கண்ணன் இனி நீங்கள் எங்களுக்காய் கஸ்டப்படவேண்டாம். நான் திரும்பி ஊருக்கு போறன், என்ன நடந்தாலும் பாக்கிறன். என்ற கண்கலங்கி நிக்க, "நீங்க இனி அங்க போய் என்ன ஆனந்தி செய்யப்போறியள். என்னோட இருந்திடுங்கோ அண்ணாவை மாதிரி இல்லாட்டாலும் உங்களையும் பிள்ளையையும் நான் பாத்துக்கொள்ளுறன், நீங்கள் பட்ட கஸ்டங்களை ஒண்டும் விடாமல் அண்ணா எனக்கு சொல்லியிருக்கிறார்" என்றான். எந்த இலாபமும் இன்றி அவனிடம் எப்படி கடமைப்படுவது. ஒரு துணையின்றி மீதி வாழ்வை எப்படி அவள் கழிப்பது, பல வாறு யோசித்தாள். கடைசியாய் மீண்டும் ஒரு முறை அவனது தாலியையும் ஏற்றுக்கொண்டாள். 2 வருடத்தின் பின்னர் மீண்டும் ஒரு பெண் குழந்தையைப்பெற்றெடுத்தாள். வாழ்க்கை ஓடுது கண்ணனுடனும், அவனது குழந்தையுடனும், சீலனின் குழந்தையுடனும். அவளிற்கு 4 குழந்தைகள் 3 கணவன்கள். ஒரு முறை விதவையும் ஆனவள் மறுபடி சுமங்கலி..?? நாளை எப்படி இன்னும் அவளிடம் கேள்விக்குறியே மிச்சம். தற்செயலாய் கண்ணனிற்கு ஒன்று நடந்தால் என்ன நிலை என்று கேட்டேன், தலை குனிந்தாள் குற்ற உணர்வோ? "கண்ணன் துணையிருக்க இனியாவது உனது சொந்தக்காலில் நிக்கப்பார். கண்ணீரோடு கதை சொல்லி கறைகளை கரைத்திட முடியாது" என்று கூறிவிட்டு வெளியேறினேன்.

அவள் பற்றி எதை நினைப்பது என்று எனக்கு தோன்றவே இல்லை. பிறப்பிலேயே அவளை முடக்கி விட்ட விதியையா? அவளை கொடுமை செய்த சித்தியையா? சீதனத்திற்காய் அலைந்த சீலணையா? சுயமாய் தனக்கென்றொரு வாழ்வை திடமாய் அமைக்க முடியாது இழுத்தபாட்டிற்கெல்லாம் போக நினைத்த ஆனந்தியையா? யாரைக்குற்றம் சொல்ல?

Saturday, June 25, 2005

என் காதல் தோல்வியில் அவன் காதல் வெற்றி!

திருமண அழைப்பிதழை மேசையில் வைத்துவிட்டு, போயிட்டு வாறேன்டி சிவா காத்திருப்பான் என்று சொல்லிவிட்டு பறப்பாய் பறந்தாள் சித்திரா. அவளை வழி அனுப்ப ஒரு வார்த்தை கூட பேசாது மெளனமாய் இருந்தேன்.
இரண்டு மாதமாய் என்னோடு இந்த மெளனம், இப்படியே ஒரு வித தனிமை குடிகொண்டது காரணம் எனக்கு மட்டும் தெரிந்த உண்மை. என்னோடு, என்மனதோடு காதலனாய், காவலனாய் வாழ்ந்த சிவா சித்திராவை காதலிக்கிறான் என்ற செய்தி எனக்குள் இருந்த துடிப்பு, சுறுசுறுப்பு எல்லாத்தையும் பறிச்சுக்கொண்டு போன மாதிரி ஒரு உணர்வு. அவன் எனக்கு என்று எண்ணிய நான் ஏனோ அவனுக்கு நான் தானா என்று பார்க்க மறந்துவிட்டேன்.

என்ர ஒரே ஒரு சிநேகிதி சித்திரா அவளிற்கு கூட தெரியாமல் எல்லோ அவன் எனக்குள் வாழ்ந்தவன். இரண்டு மாசத்திற்கு முதல் அவன் சித்திராவிற்கு தன் காதலைத்தெரிவிக்கும் படி என்னிடமே வந்து தூது சொன்னான் என்ர உயிரை யாரோ பறிச்ச மாதிரி தெரிஞ்சுது. சிரித்து சிரித்து கலா கலா என்று பேசுவானே. நீ வா போ என்று என்னோடு தடையின்றி பேசுவான், இந்த உரிமையை நான் யாருக்கும் இருவரை கொடுத்ததில்லையே. சித்திராவைவிட என்னோடு தான் அவன் அதிகம் பேசுவான். சித்திராவை கூட வாங்கோ, போங்கோ என்று அந்நியமாய் கூப்பிடுவானே. என்னோடு தான் அத்தனை நெருக்கம். அதனால் தான் அவன் எனக்குள் வந்தான். ஆனால் ஆனால் சித்திராவிற்காய் தான் அவன் என்னோடு நெருக்கமானான் என்பதை, அவன் காதலிற்கு தூது செல்லச்சொன்ன போது தான் நான் தெரிந்து கொண்டேன். சித்திரா கூட அவன்ர காதலை மறுக்கவில்லை அவன் சொன்னவுடன் எதிர்பார்த்திருந்தவள் போல சம்மதம் சொல்லிவிட்டாள். ஒரு வேளை இது தான் உண்மைக்காதலா தெரியவில்லை சிவாவின் உணர்வு சித்திராவிற்கு இருந்தது. ஏன் என்ர உணர்வு சிவாவிற்கு வரவில்லை காரணம் தெரியவில்லை, அதற்காய் அவன் உணராததால் என் காதல் பொய்யென்று எப்படிச்சொல்ல முடியும். கொப்பி கொப்பியாய் 2 வருசம் அவனுக்காய் கவிதை என்ற பெயரில நான் எழுதியவற்றையும், அவன்ர பெயரையும் தேடித்தேடி அழிச்சனே என்ர மனம் அப்ப என்னை அறியாமல் அழுதிச்சே இதெல்லாம் பொய்யா? என் நண்பிக்காய் இவற்றை அழிக்க தான் என்னால் முடிந்தது மனசில எப்பவும் அவன் இருப்பான் என்று தான் நினைக்கிறன். ஒரு வேளை இதை யாருக்கும் முதலில சொல்லியிருந்தால் சிவாவை நான் இழந்திருக்க மாட்டேனோ என்று நினைக்கிறன். அவன் என்னை காதலிக்காட்டால் என்ன நான் காதலிச்சது அவனை அந்த நின்மதி போதும் எனக்கு. ஆனால் அவனும் சுயநலக்காரணா இதுவரை எப்படிப்பழகினவன். இப்ப நலம் கூட விசாரிக்க சந்தர்ப்பம் கிடைப்பதில்லை. சந்தர்ப்பம் கிடைக்கவில்லையா இல்லை அவன் தவிர்க்கிறானா தெரியவில்லை. இப்ப கூட சித்திராவின் கலியாணத்திற்குரிய வேலைகளை செய்யத்தான் சித்திராவீட்டை வந்தன். ஆனா ஆனா இது சிவாவின் கலியாணமும் கூட. அவர்கள் காதல் வென்றிச்சா? என் காதல் தோத்ததா? காதலின் வெற்றி என்றால் என்ன கலியாணத்தில் முடிவதா? அப்படி என்றால் நான் தோர்த்தவள் தானே? தேற்றது என் நண்பியிடம் என்ற நினைவில் அவனது திருமண வேலையில் இறங்குகிறேன்.

free hit counter