Friday, December 30, 2005

உண்மை உறவுகள்..!

சரவணனிற்கு தவறுதலாய் தான் மண்டை உடைந்தது, இருந்தும் தான் தள்ளியதால் தான் உடைந்தது என்ற கவலை கலந்த பதட்டம் கலாவிற்குள். 999 ற்கு அடிக்கச் சென்றாள்.

"இஞ்ச கலா அதொன்டும் பெரிய காயம் இல்லை பேசாமல் விடும், இப்ப அவங்களுக்கு கடிச்சால் ஆயிரம் கேள்வி கேட்டுக்கொண்டிருப்பானுகள். அவனது பேச்சைக் கேட்கையில் தலைக்கேறின வெறி முற்றாய் முறிஞ்சிருக்க வேணும் என்ற எண்ணம் கலாவிற்குள் எழுந்தது. சரவணனின் பேச்சையும் மீறி 999 ற்கு அடித்து அம்புலன்சிற்கு சொல்லிவிட்டு வீட்டுச்சாவி மற்றும் ஏனைய முக்கிய பொருட்களை எடுத்து கைப்பையில் போட்டுக்கொண்டு அம்புலன்ஸ் வர போவதற்கு தயாரானாள். சரவணனின் தலையில் இருந்து கசிந்து கொண்டிருந்த இரத்தத்தை நிறுத்த வெள்ளைத்துணியினால் கட்டி தன்னால் முடிந்த முதலுதவியைச் செய்து முடித்திருந்தாள்.

இரண்டு ஆண்களும் ஒரு தாதியும் அம்புலன்சில் வந்து இறங்கினார்கள். தாதியாக வந்த ஒரு வெள்ளைக்கார பெண்மணி என்ன நடந்தது என்று கேட்க, கலா நடந்ததை சொல்ல முன்னர். " ஒரு சிறிய விபத்து" என ஆங்கிலத்தில் கூறிமுடித்தான் சரவணன். சரவணனைப் பார்க்க கலாவிற்கு பாவமாய் இருந்தது. ஏன் பொய் சொல்கிறான் என்னைக்காக்கவா இல்லை தன்னைக்காக்கவா? என்ற கேள்வி அவளிற்குள்.

போதையில் வந்து கலாவிடம் வாலாட்டிய சரவணனிடம் இருந்து தன்னக்காக்க நடந்த கெடுபிடியில்.. அவள் அவனைத் தள்ளியபோது அருகில் இருந்த நிலையுடன் அவன் மோதியதால் ஏற்பட்ட காயம். அதில் இருந்து தான் இரத்தம் கசிந்து கொண்டிருந்தது. உண்மை தெரிந்தால் பொலிஸ் கேசாக் கூட மாறலாம்.

பிரயாணத்தின் நடுவே "கலோ றூபி... நான் அண்ணி கதைக்கிறன். அண்ணாவை ஆஸ்பத்திரிக்கு கொண்டு போறன், உனக்கு நாளைக்கு ஏதாவது சோதினை இருக்கோடா இல்லை எண்டா ஒருக்கா வா. இதில கை கில் யெனரல் கொஸ்பிரல் என்று தான் நினைக்கிறன். எதுக்கும் போன உடனை போன் பண்ணிறன். வண்டியைப் பாத்து ஓட்டு அவருக்கொண்டும் இல்லை சரியேடா.. பிறகு உன்னை தனிய வாட்டில பாக்க முடியாது " ... " சரி அண்ணி வந்திடிறன் பதட்டப்படாதேங்கோ இப்ப எனக்கு ஒரு சோதினையும் இல்லை சும்மா தான் நிக்கிறன். " அவன் ரூபன் சரவணனின் தம்பி படிப்பதற்காய் வந்தவன் விடுதி ஒன்றில் தங்கி நின்று படிக்கிறான்.

வைத்தியசாலைக்கு வந்த ரூபன் நேரடியாகச் சென்று அண்ணன் சரவணனை சந்தித்தான், அவனுடன் காரசாரமான வாக்குவாதம். " அம்புலன்ஸைக்' கூப்பிட்டு ஆஸ்பத்திரிக்கு வந்தாச்சு இனி வக்கிலக் கூப்பிட்டு கோட்டுப்படி ஏறுவது எப்பண்ண?.. பாவம் அண்ணி
உன்னை கலியாணம் செய்ததைவிட என்ன தம்புச்செய்தவா?.. உன்ர வாழ்க்கையையும் அழிச்சு அவவின்ர வாழ்க்கையையும் அழிச்சு என்னையும் அநாதையா நடுத்தெருவில நிக்கவிட்டிட்டியே.. இதை நினைச்சா உனக்கு வெட்கமாய் இல்லையே??" ஆத்திரம் தீரக்கத்தி விட்டு வராண்டாவில் அமர்ந்திருந்த கலாவிடம்.

" என்ன அண்ணி செம போடு போட்டிருக்கிறயள் போல கிடக்கு இழைப் போட்டிருக்கு... அண்ணா மன்னிப்பெல்லாம் கேக்கிறார்.. நீங்கள் பாவமாம் நிறைய கஸ்டப்படுத்திப் போட்டாராம்.. நினைக்க வெட்கமாயக்கிடக்காம்.. கதையைப்பாத்தா அடிபலமாய் விழுந்திட்டுது போல கிடக்கு?? இதை முதலிலையே செய்திருந்தால் நான் ஏன் கடைச்சாப்பாட்டில கிடந்து காயிறன். உங்களோடயே இருந்திருப்பன் எல்லே. அவற்ற தொல்லை தாங்காமல் தானே என்னை விடுதிக்கணுப்பினியள். போங்கண்ணி உங்களில எனக்கு கோவமும் தான்" மெல்ல சலுத்துக் கொண்டான் ரூபன்

"எட விசரா நான் ஒன்டும் செய்யேல்லை. உன்ர கொண்ணனோட சரியாக்கதைச்சு இரண்டு கிழமையாச்சு. தினமும் சரியான வெறி. நான் வேலையால வந்து என்ரபாடு.. பத்துப்பதினொன்டுக்குப் பிறகு வருவார். நான் சாப்பாட்டைப் போட்டா போய் படுத்திடுவார்.
நான் இல்லாட்டாப் போட்டுச் சாப்பிடுவார். இப்படி தினம் விளையாடிக் கொண்டிருந்தார். இண்டைக்கு வேலையால வந்து களைப்பில படுத்திட்டன் சமைக்க நேரம் போட்டு. அறக்க பறக்க என்டு சமைச்சுக் கொண்டிருக்கிறன் அடுப்படிக்க வந்து ஏதோ தனகிக்கொண்டு நிண்டார். பேசாமல் நான் என்ர பாட்டில வேலை செய்திட்டிருக்க. என்ன உம்.. என்றிருக்கிறாய் கதையன் என்டு அடிக்க வந்தார். தடுத்துப்போட்டு தள்ளிவிட்டன் நிலையில போய் மோதினார், அதில கிடந்த ஆணி ஒன்று கிழிச்சுப்போட்டுது, அது தான் கொண்டந்தனான்" என்று விரக்தியோடு சொல்லி முடித்தாள் .

"நல்ல வேலை செய்தியள் அண்ணி.. நீங்களும் பாவம் அண்ணாவை என்ன செய்யிறது எனக்குத் தெரியேல்லை. பாப்பம் இனிக் குடிக்கமாட்டன் என்றார்" ஏக்கத்தோடு கூறினான் ரூபன்.

கலா துடுக்கோடு சுத்தித்திருந்த ஒரு சிட்டு. இப்படி ஒரு வாழ்க்கை அமையும் என்று ஒரு நொடி கூட கற்பனை பண்ணியிருக்கமாட்டாள். உயர்தரம் முதலாவது முறை எழுதி பெறுபேறு காணாதென்று இரண்டாது தடவை தோற்றுவதற்காய் விண்ணப்பித்துவிட்டு படித்துக் கொண்டிருந்தவள். திடீரென கூடிவந்த திருமணம். லண்டன் மாப்பிளை சரவணன். 10ப்பொருத்தமும் பொருந்திச்சாம் நல்லாய் இருப்பாளாம். பெற்றார்களின் ஆவல் அவளை சம்மதிக்க வைத்தது.

லண்டன் குடியுரிமை பெற்ற சரவணன் அவளை இலங்கைக்கு வந்து மணம் முடித்து வர எந்தப் பிரச்சனையும் இருக்கவில்லை. திருமணமான புதிதில் சரவணன் இலங்கையில் இருந்த ஒரு சில வாரங்களில் இருவரைப்பற்றியும் பேசி தாங்களே அறிந்து கொண்ட நேரம். குடி புகை பற்றி கலா கேட்டபோது முன்பு பழக்கம் இருந்ததாகவும் பின்னர் நிறுத்திவிட்டதாகவும் சரவணன் கூறினான். நேர்மையாக உண்மையைக்கூறிய அவனை அவளிற்கு அந்தக்கணங்கள் மிகவும் பிடித்திருந்தது. " எல்லாம் அளவோட இருந்தால் நல்லது தானே... இதில மற்றவைக்கு இடையூறுகள் வராமல் இருக்கவேணும்.... நீங்கள் இப்ப விட்டிட்டியள் என்றதில மகிழ்ச்சி.." அவனைப் பாராட்டினாள்.

திருமணம் முடிந்து ஒரு சில மாதங்களின் பின்னர் சகல சம்பிரதாயங்களையும் சட்டரீதியாக முடித்து லண்டன் வந்து சேந்தாள் கலா.
புதிய நாடு, புதிய சூழல் வாழ்க்கை மாற்றம், பிடித்த கணவன் என்று இடர்களிற்குள்ளும் சிறிதுகாலம் ஆனந்தமாய் போனது வாழ்க்கை.
அவர்களது மகிழ்ச்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க வந்த நிகழ்வாய் ஒரு அழைப்பு. திருமண விருந்து என்று இருவரையும் உறவினர்கள் அழைக்க அங்கு சென்ற சரவணனிற்கு மறுபடி அரங்கேற்றம். மெல்ல மெல்ல கைவிட்டவற்றை எல்லாம் கையில் எடுத்தான். ஆரம்ப நாட்களில் அளவோடு நின்றான். அதால் அவளிற்கு எந்தப்பிரச்சனைகளும் இல்லை. சிறு வருத்தம் இருந்தாலும் அதை அவள் சரி செய்து கொண்டாள்.

நாளாக நாளாக நிலமை முற்றியது சரவணன் மறுபடி மதுவிற்கு தன்னை முற்றாக அடிமையாக்கிக்கொண்டான். அது மட்டுமல்ல கலாவை தாக்கவும் செய்தான். முதன்முறை எதுவும் அறியாமல் அவனிடம் அடிவாங்கிய கலா என்ன செய்வதென்று அறியாது திகைத்து நின்றாள். அதன் பின்னர் தன்னை சுதாகரித்துக்கொண்டாள் அவனை எதிர்கொள்ளத் தயாரானாள். இப்படித்தான் ஒருநாள் முழுப்போதையில் வந்து அவளை அடிக்க முயன்றவனை தும்புத்தடியால் விளாசு விளாசென விளாசிவிட்டு கட்டிக்கட்டிலில் போட்டுவிட்டாள். இவற்றை எல்லாம் பார்த்திருந்த ரூபன் சற்று குழப்பமடைந்தான் படிப்பில் கவனம் செலுத்த முடியாது தவித்தான். சரவணனின் கூத்து அப்போதெல்லாம் ஏதாவது ஒருவிதத்தில் தினமும் வீட்டில் கலகத்தையே கொண்டு வந்தது. அதனால் தான் கலா ரூபனை விடுதியில் தங்க வைத்தாள். எப்பாவது ஒருநாள் இவர்களை ரூபன் வந்து பார்த்துச்செல்வதுண்டு. அன்பான அண்ணி அண்ணன் அருகில் இருந்தும் அநாதையாய் தனியாக வாழவேண்டிய துர்ப்பாக்கிய நிலை ரூபன்.

சரவணனிற்கும் கலாவிற்குமிடையிலான இடைவெளி நீண்டுகொண்டே போனது. சரவணனது குடிப்பழக்கத்தை கண்டிக்கும் தகப்பனும் கலா அவனை அடித்தாள் என்பதைக்கேட்டு கலாவிற்கு சாபமழை பொழியும் தாயும் என்று சரவணன் குடும்பம் ஒருவிதமாக இருந்தது.
தானாக வேலையைத்தேடி தனது வாழ்க்கையை தானே தீர்மானிக்க தொடங்கிவிட்டாள் கலா. குடிவெறி அதனால் அவளிடம் சச்சரவு இதைவிட குறை சொல்லும்படி சரவணனிடம் எதும் இல்லை. ஆனால் அவனது போதைக்கு அவள் காயங்களைச்சுமக்க முடியாது என்ற முடிவோடு அதன் வலியை அடிக்கடி அவனிற்கு உணர வைத்தாள் கலா இன்றும் கூட அப்படித்தான். அழகாய் பூத்துக்குலுங்க வேண்டிய இளம் தம்பதிகளின் வாழ்க்கை இப்படி விடையின்றி விரிந்து சென்றது.

பாவம் சரவணன் இப்படி படுக்கவைத்து விட்டோமே என்ற கவலை அவளினுள். அவளது வாழ்க்கை நாலுபேர் சிரிக்கிற நிலையில் இருக்கிறதே என்று வருத்தம். அவர்களிற்குள் உள்ள விரிசலை சரி செய்ய முனையாத உறவுகள் விடுப்புப் பார்ப்பதில் துடியாய் நின்றார்கள். அதனால் உறவுகள் மேலும் அவளிற்கு வருத்தம். தான் உண்டு தன்ர பாடு உண்டு என்று ஒதுங்கியே இருந்தாள். அவர்களது வெற்றிலை வாய்க்கு இவள் அவலாக விரும்பவில்லை.

இன்றைய பிரச்சனை கொண்டு வந்த தீர்வு. இனிமேல் குடிப்பதில்லை என்ற முடிவுக்கு சரவணன் வந்திருந்தான். தான் செய்த தவறுகளுக்காய் கலாவிடமும் ரூபனிடமும் அழுது மன்னிப்புக்கேட்டான். இதை எந்த அளவு நம்புவது கலாவிற்கு சிறிய தடுமாற்றம் நடப்பதை எதிர்கொள்ளத் தயாராகிவிட்டாள். அவனை துண்டு வெட்டி வீட்டிற்கும் கூட்டி வந்து விட்டார்கள்.

சரவணன் மருந்துவமனையில் அனுமதிக்கப்பட்டதையும் மண்டை உடைந்ததையும் அறிந்த சரவணனின் பெற்றோர் துள்ளிக்குதித்தார்கள். " ஒரு பொடிச்சி மண்டையை அடிச்சு உடைச்சு ஆஸ்பத்திரில போடுவாள் அதைப்பாத்திட்டு சும்மா இருக்கவேணுமே.. அப்பவே சொன்னான் உந்த புத்தகம் தூக்கினதுகளை கட்டாதேங்கோ.. என்னை மாதிரி ஒன்டைக்கட்டியிருந்தால் அடிச்சா என்ன பிடிச்சா என்ன அழுதுபோட்டு அமைதியா இருந்திருக்கும்.. இது நாலு எழுத்துப்படிச்சதை கட்டிவைச்சு அது வேலை வெட்டி செய்யிறன் என்ட உடனை அவன்ர மண்டையை உடைச்சுப்போட்டுது. அங்க ஒருத்தன் பாத்துக்கொண்டிருக்கிறான். அண்ணனுக்கு அடிச்சவளை வெட்டிப்போட்டு ஜெயிலுக்குப் போக வேண்டாமே..?? " அறியாமை நிறைந்த ஒரு அப்பாவித் தாயின் ஏக்கங்கள் அப்படி வெளிப்பட்டன... அவள் ஏன் இந்த நிலைக்குத் தள்ளப்பட்டாள் என்றதை உணர அவர்கள் தயாராக இல்லை.

கலாவிற்கு சிரிக்கிறதா அழுகிறதா தெரியவில்லை. சரவணனைப் பார்த்தாள் அவன் தெளிந்திருந்தான், தனது தவறிற்கு தக்க தண்டனை தன் மனைவி கொடுத்திருந்தாள் அதை அவனும் ஏற்றிருந்தான் தாயிடம் கூறினான். "அம்மா உன்ர பிள்ளை நான் குடிச்சு கொண்டு என்னையே நான் அழிச்சுக்கொண்டிருந்தா நீ பாத்திட்டு சும்மா இருப்பியா..?? உன்னை மாதிரித்தானே கலா என்னை திருத்தியிருக்கிறாள். ஏன் பேசிறாய்?? இனியாவது நாங்கள் வாழலாம் மகிழ்ச்சியாய் மூன்று வருசங்கள் வீணாய் போயிட்டுது இனி இப்படி ஒரு தவறை நான் செய்ய மாட்டன். சும்மா கத்தாதையணை." உறுதியோடு அழைப்பைத் துண்டித்தான்.
கலாவின் மகிழ்ந்தாலும் சற்று கனத்தது வன்முறைக்கு வன்முறை தான் தீர்வா?? அவளது மனதில் பெரிய கேள்வி?.

பெட்டி படுக்கைகளுடன் ரூபனும் வாசலில் நின்றான். " அண்ணி இனி நீங்கள் அடிச்சுக் கலைச்சாலும் நான் போகமாட்டன். நேரத்திற்கு நேரம்.. படம் பாத்தது காணும் புத்தகத்தை எடுடா என்ற அந்த அன்பான அதட்டலும் அடிக்கடி என்னை மேற்பார்வை செய்யும் அண்ணாவின் அன்பும் எனக்கு வேணும். அநாதையா என்னால வாழமுடியாது" ஓடிச்சென்று இருவரையும் அணைத்துக்கொண்டு.. அவனும் குதூகலத்தில் பங்கெடுத்தான். கலாவிற்கு சரவணன் மேல் நம்பிக்கை மறுபடி சற்று அதிகரித்திருந்தது.

Tuesday, December 27, 2005

சற்றிங் சாலையில்....

காலை நேரம் பல்கலைக்கழக வாசலில் ஒரே கூட்டம். பஸ்ஸில் இருந்து இறங்கிய சங்கர் ஓட்டமும் நடையுமாய் அவசரமாய் போய்க் கொண்டிருந்தான். அவனை வாசலில் கண்டுவிட்டு ஓடி வந்த துசி " டேய் சங்கர் எங்க போறா... ஒப்படை (அசைன்மெண்ட்) கொடுக்கிறதுக்கோ, நில்லு நானும் வாறன்". அதுக்கு சங்கர்.. இல்லையடாப்பா, சின்னப் பிரச்சனை ஒன்று, என்ர நண்பிகள் அவசரமா வரச் சொல்லி போன் பண்ணிச்சினம் அதுதான் போறன். "இன்று ஒப்படைக்கு இறுதி நாள் எல்லோ.. சரி சரி நீங்கள் போய் அவைக்கு விலக்குப் பிடியுங்கோ.. நான் ஒப்படை கொடுக்கப்போறன்"

சங்கர் பல்கலைக்கழகம் வந்த புதிதில் அப்பாவியாகத்தான் தெரிந்தான். பின்னர் நாட்கள் போகப்போக நண்பிகளோடு சுற்றுவதும் அவர்களோடு கடலை ( அரட்டை) போடுவதும் "காட்ஸ்" விளையாடுவதும் என்று தன் பல்கலைக்கழகப் பொழுதை செலவு செய்ய ஆரம்பித்தான். அவன் தன் நண்பர்களைக் காணும் போதெல்லாம் தான் பழகும் ஒவ்வொரு பெண்ணைப் பற்றியும் அவர்களின் குணம், இயல்புகள், நடத்தைகள் என்று பலவாறு விபரிப்பான். அவர்களும் கேட்டு ரசித்து சிரிப்பார்கள். இது அவனோடு பழகும் பெண்களுக்கும் தெரியும். இருந்தும் அவர்களும் இவற்றைக் கண்டுகொள்வதில்லை. சில சந்தர்ப்பங்களில் மிக மட்டமாகக் கூடக் கதைப்பான்.அதைக் கூட அவர்கள் பெரிதுபடுத்துவதில்லை. அதையே வேறு யாரும் செய்துவிட்டால் காவாலி, பொறுக்கி என்று திட்டுவார்கள், கோவிப்பார்கள். ஒருவேளை அவர்களும் அவனிடம் அதை விரும்பினமோ என்னவோ, சங்கர் அவர்களுக்கு மிக நெருக்கமானவனாகவே இருந்தான்.

ஒரு நாள் சங்கர் துசியிடம்.. டேய் இவள் மதி பற்றி என்ன நினைக்கிறா என்றான். " டேய் உனக்கே இது தகுமா.. எனக்குத்தான் பெரிசா அவையளோட பழக்கமில்லையே. பார்க்க அமைதியான நல்ல பிள்ளையாத்தான் தெரியுது. பழகிப் பார்த்தாத்தான் புரியும். நமக்கு அதுக்கெல்லாம் நேரமில்லை. ஏன் கேட்கிறாய் ஏதும் பிரச்சனையோ ??" என்று பதில் கேள்வியோடு முடித்தான் துசி. ம்.. சின்னப்பிரச்சனை அவளை இங்க ஒரு பொடியன் விரும்புறான். இவளும் அவனோட நல்ல மாதிரித் தான். இப்ப சமீபத்தில அவைக்க புதிசா ஒரு பிரச்சனை கிளம்பியிருக்கு. அதுதான் போன் பண்ணி என்னை அன்று வரச் சொன்னாள். " ஓஓ அப்படியே.. அவைக்கு இப்படியான பிரச்சனைக்கும் நீங்களே "அட்வைஸ்" கொடுக்கிறனீங்கள். நல்ல தொழில்தான் செய்யுங்கோ " என்று நக்கலாகப் பதில் கொடுத்தான் துசி. டேய் துசி உனக்கு பெண்களைப் பிடிக்காது. அதால அலட்சியமாப் பேசுறா.. அதுகளுக்கு எத்தினை பிரச்சனைகள் தெரியுமே சமூகத்தில. அதற்கும் துசி.." அப்படியே, தேவையில்லாம கண்டவையோடும் பழகிறது.. பழகிட்டு பழகினவையில, சமூகத்தில குறை சொல்லுங்கோ. சரி ஏதோ பிரச்சனை எண்டா... அப்படி என்னதான் பிரச்சனை சொல்லன்."

இல்லையடாப்பா.. மதி கொஞ்சம் "மொடேன்". தெரியும் தானே. அவள் இன்ரநெற் சற்றிங் அது இதென்று ஜாலியான பெண். இவன் கபிலன் இருக்கிறான் எல்லோ அவன் தான் இப்ப அவளோட நெருக்கம். " அட இவன் கபிலனே.. அடப்பாவி அவனும் தொடங்கிட்டானே " பின்ன எல்லாரும் உன்னை மாதிரி சாமியாரோடாப்பா. உடனே துசி " சங்கர் சும்மா கடிக்காம விசயத்தைச் சொல்லு எனக்கு வகுப்பு இருக்கு" இவள் மதி சற்றிங் என்று போறவள். அங்க பலரோடும் அவள் வஞ்சகமில்லாம கதைப்பாள். உடனே துசி குறுக்கிட்டு " அதுசரி அவள் வஞ்சகம் இல்லாமல் தான் கதைக்கிறாள் என்றது எப்படி உனக்கு தெரியும். ஏதாவது கருவி வைச்சிருக்கிறியா கண்டுபிடிக்க" அதுக்கு சங்கர்.. எல்லாம் பழகிப் பார்த்து வந்த ஒரு நம்பிக்கையிலதான். நான் சீரியஸாக் கதைச்சிட்டு இருக்கிறன் நீ நக்கலடிச்சுக் கொண்டே இருக்கிறா. " இல்லையடாப்பா நீங்களா தான் எல்லாம் சொல்லுறிங்கள் வஞ்சம், சூதுவாது, நல்லவன், கெட்டவன் என்று அதுதான் எப்படி அறியுறிங்கள் என்று கேட்டன்". சரி அதைவிட்டிட்டு விசயத்தைக் கேளன். அதற்கு துசி "ம் சொல்லு கேட்பம்". அவள் சற்றிங் போற "இன்ரநெட் சற் கிளப்புக்கு" ஒரு நாள் எதேச்சையா கபிலனும் போயிருக்கிறான். அங்க ஒரே கூத்தும் கும்மாளமுமாம். ஆண்களும் பெண்களும் விடிய விடிய ஏதோ கதைக்கினமாம். துசி மீண்டும் குறுக்கிட்டு " என்னடாப்பா சங்கர்.. விடிய விடிய அப்படி என்னதான் கதைக்கினம். உலக அரசியலோ.. இல்ல விஞ்ஞானக் கண்டுபிடிப்புகள் பற்றியோ.. இல்ல கதாப்பிரசங்கமோ வைக்கினம்". பாத்தியே மீண்டும் நக்கல் உனக்கு. அதுகள் சின்னஞ்சிறுசுகள் பலதும் பத்தும் கதைக்குங்கள். " ஏண்டா.. சின்னஞ்சிறுசுகள் என்றா.. பலதும் பத்தும் கதைக்குங்கள் என்றா, அப்ப அங்க வில்லங்கம் இருக்குது போல. சமீபத்தில கேள்விப்பட்டன் சற்றிங்கில ஒரு பெண் தன்னை நடிகை அசின் என்று சொல்லி ஒருத்தனை ஏமாத்தினதா. அப்படி ஏதும் ஏடாகூடமா நடந்திட்டோ". ம்.. நீ விசயத்துக்கு கிட்ட வந்திட்டா துசி.. கதையை கேளன்.. கபிலன் சற்றிங் போன இடத்துக்கு மதியும் வழமை போல போயிருக்கிறாள். கபிலன் வேற பெயரில போனவனாம். மதியும் வேற பெயரில தானாம் இருந்தவள். இரண்டு பேரும் நல்லா கதைச்சிருக்கினம். கபிலன் படம் காட்டச் சொல்லி கேட்டிருக்கிறான். பெயர் விபரம் ரெலிபோன் நம்பர் எல்லாம் கேட்டிருக்கிறான். மதியும் எல்லாம் கொடுத்திருக்கிறாள். படமும் காட்டி இருக்கிறாள். உடன கபிலன் திகைச்சுப் போய் மதி நீயா என்று கேட்டு தான் கபிலன் என்று சொல்லி இருக்கிறான். சுமார் 4 - 5 மணி நேரம் சற்றிங்காம், அதிகாலை வர. தான் சற் பண்ணினது கபிலன் என்று அறிஞ்ச உடன மதி சற்றிங்க "கட்" பண்ணியிருக்கிறாள். இப்ப அதுதான் அவைக்க பிரச்சனையாப் போச்சடாப்பா.

பாத்தியோ சங்கர், இணையம் என்றது பனிப்போர் காலத்தில அமெரிக்க இராணுவ தகவல் பரிமாற்றத்துக்கு என்றிருந்தது. சோவியத் வீழ்ச்சிக்குப் பிறகு அதை தகவல் பரிமாற்றத்துக்கு என்று உலக வலைப் பின்னலாக வர்த்தக நோக்கத்துக்குப் பயன்படுத்த தொடங்கியதும் பல நன்மைகளோட தீமைகளும் வந்திருக்கு. அதிலும் இந்த சற்றிங் பல மணித்தியாலங்களை வீணே விழுங்கிறதோட சின்னஞ்சிறுசுகளில இருந்து தாத்தாக்கள் வரை நல்ல விசயங்களை பகர மட்டுமன்றி பெருமளவில வேண்டாத அலட்டல்களிலும் ஈடுபடவும் தூண்டுது. குறிப்பாக இளம் பெண்களும், ஆண்களும் இப்ப சற்றிங்கிலதான் அதிக நேரம் செலவிடினம். அதிகம் அறியாதவையோட வெளிப்படையாகவும் ரகசியமாகவும் பேசிக் கொள்ளினம். அவை என்ன பேசினாலும் வெளி உலகுக்கு தெரியாது என்பதால எதுவும் அங்க பேசப்படலாம். அவை அவர்களை உளவியல் ரீதியில் பாதிக்கவல்லனவாகக் கூட இருக்கலாம். அதால பல தீமைகளும் நடந்தேற வாய்ப்பிருக்கு. இது இப்படியே கட்டுப்பாடில்லாமல் கவனிப்பாரற்று தொடர்ந்தால் பெரிய சமூகத் தாக்கம் ஒன்றை உலகம் எதிர்கொள்ள வேண்டி இருக்கும். மேற்குலகத்தைப் பொறுத்தவரை அவைக்கு இது ஒன்றும் புதிதல்ல. ஆனால் நாங்கள் இந்தச் "சுதந்திர சற்றிங்" கருத்துப் பரிமாற்றம் பற்றி கவனமாக இருக்க வேண்டும். குறிப்பா சிறுவர், சிறுமியர், இளம் ஆண்கள், பெண்கள் தொடர்பில் இந்த சற்றிங்கில யாரோட என்ன கருத்தப் பரிமாற்றம் செய்யினம் என்றதிலை குடும்பத்தில் உள்ள பெரியவர்கள் மற்றும் பொறுப்புவாய்ந்தவர்கள் கூடிய கவனம் எடுக்க வேண்டும். இல்லாட்டி கபிலன் - மதிக் கிடையில் தோன்றியது போல சின்னச்சின்ன பிரச்சனைகளில இருந்து பெரிய குழப்பங்கள் வரை குடும்பத்தில சமூகத்தில நாட்டில வர வாய்ப்பிருக்கு.

ம்ம்... நீ சொல்லுறது சரி தாண்டா துசி. எப்படித்தான் இதைக் கட்டுப்படுத்த வெளிக்கிட்டாலும் அரட்டைக்கு பழகினவையை கட்டுப்படுத்திறது கொஞ்சம் கஸ்டம் தான். " என்ன சங்கர் அனுபவம் பேசுதோ". இல்லையடா துசி.. இது விடயத்தில கட்டுப்பாடுகளைக் கொண்டு வர, தாங்கள் சுதந்திரமா கதைக்கிறதை தடுக்கினம், தங்கள் நோக்கங்களைச் சந்தேகிக்கினம் என்று வேற வடிவத்தில பிரச்சனை திசை மாறிட வாய்ப்பிருக்கு எல்லோ. எனவே எல்லோரும் அவையா நிலைமைகளைப் புரிந்துணர்ந்து தேவையற்ற சற்றிங்கில ஈடுபடுறதைத் தவிர்த்தா இப்படியான அநாவசிய முரண்பாடுகளை, தனி நபர், குடும்ப, சமூகப் பிரச்சனைகளைத் தவிர்க்கலாம். முன் பின் அறியாத கண்டவையோடும் தனிப்பட்ட முறையில் வீணே கண்டதையும் கதைச்சு, தனிப்பட்ட தகவல்களை பரிமாறப் போய் ஏன் வில்லங்கத்தை வலிய விலைக்கு வாங்க வேணும் சொல்லு பாப்பம். " உண்மைதான் சங்கர் நீயே சொல்லிட்டாய், இதில நான் என்ன சொல்ல இருக்கு. சம்பந்தப்பட்டவை கேட்டு அவதானமா நடந்து கொண்டாச் சரி. இப்ப எனக்கு வகுப்புக்கு நேரமாச்சு போயிட்டு வாறன்." என்று கூறி நண்பர்கள் இருவரும் விடைபெற்றுக்கொண்டனர்..!

ஆக்கம் தேசப்பிரியன்.

Tuesday, December 20, 2005

உயிரா ? உறவா?

"விடிஞ்சிட்டுது எழும்பு தம்பி கடைக்குக்கிடைக்குப்போய் காய் கறி களை வாங்கி வந்தால் காய்ச்சி படைச்சுப்போடலாம் எல்லே. இப்ப போனால் தான் நல்ல மரக்கறியள் வாங்கலாம் எழும்பப்பன்". அம்மாவின் குரல் என்னை சங்கடப்படுத்துகிறது. அதுகளுக்காய் ஒரு சொட்டுக்கண்ணீர் சிந்த வக்கில்லாமல் ஓடிய நாங்கள் படைச்சென்ன காச்சி என்ன?? அலுத்தது மனசு.

கண்கள் மூட மறுத்த இந்த வாரத்தின் முடிவு நாள் இந்த மாதத்தின் தொடக்க நாள். கண்ணீர் இன்றி என் மனசழும் காலமிது. எத்தனையோ வீடுகளில் இது தான் நிலை, அத்தனை சுமையை எங்கள் மீது கொடிய கடவுள் இறக்கிவைத்த நாட்கள் இவை. எப்படி நான் மறப்பன், வருசங்கள் சும்மா இல்லை காலில சக்கரத்தைக்கட்டிக்கொண்டு ஓடுது. நானும் தான் சேந்து ஓடிறன் பலன் என்ன. என்ர மனச்சாச்சியைக்கொண்டு, நான் மிருகமாய் நடந்த அந்த நாளை அந்த கணங்களை பத்து வருசமாகியும் என்னால மறக்கவே முடியவில்லை.

"இன்று என் நண்பன்ரையும் அவன்ர குடும்பத்தின்ரையும் நினைவுநாள். ஒன்றாய் நாலு உருப்படிகளை நான் அநாதைப்பிணங்களாய் விட்டு விட்டு கோழையாய் ஓடிய நாள். வலிகாமத்திற்கு ஆமியின் படை நகர்வு ஆரம்பித்த வேளை அது, செல்லடிகள் பலரது காதுகளை ஊனமாக்கிச்சென்றது. நான் கூட அந்த தாக்கத்தை கனநாள் உணர்ந்திருக்கிறன். நாங்கள் மண்ணில் அ, ஆ எழுதிப்பழகிய காலம் தொட்டு கள்ள மாங்காய்க்கு கல்லெறிந்து, மாடு மேய்ச்சு, மாட்டுக்குப்புல்லறுத்து, தோட்டம் செய்து, மதவடியில சைக்கிலும் கையுமாய் கூட்டம் கூடி காட்ஸ்விளையாடி, அரும்பும் மீசையுடன் அவரவர் வாழ்க்கைத்துணைகளை தேடி இப்படிப்பல நிகழ்வுகளிற்கு என்னோடு ஒன்றாய் நின்றவன். அந்த இடப்பெயர்வோடு என் தோழமையை முடித்துக்கொண்டான்.

என்ர நண்பன் பாஸ்கரன் ஒரு வேலி இங்கிருந்து நான் சமிக்கை காட்ட அதுக்கு ஏற்றபடி எங்களது அன்றாட நடவடிக்கைகளை அமைத்துக்கொள்வான். ஒன்றாய் உண்டு ஒன்றாய் உறங்கி வாழ்ந்த
தோம். நாங்கள் மட்டும் இல்லை எங்களுக்கு அமைஞ்ச மனைவிமார் கூட இருவரும் நல்ல நண்பிகள் தான். குடும்பம் குடும்பமாய் எங்கட நட்பு விரிந்து சென்றது. செல்லடியின் உக்கிரம் உணர்ந்த பாஸ்கர். தோட்டம் துரவு காணி வீடு என்று இதுகளை கட்டிக்கொண்டிருந்த என்னையும் என் குடும்பத்தையும் எத்தனை தரம் கெஞ்சி இடப்பெயரச்செய்தான். "எட பைத்தியக்காரா காணி பூமிகளை நாளைக்கு நாங்கள் வாங்கிச்சேர்க்கலாமடா இதுகள் எங்க ஓடப்போகுதுகள் நீ எத்தனை வருசம் கழிச்சு வந்தாலும் இங்க தான் இருக்கும். இதுகளைப்பாக்கிறதுக்கு நீ முதலில உயிரோட இருக்கோணுமடா. விசர்க்கதை கதைக்காமல் வெளிக்கிடு போவம்."

அவனது அதட்டலும் அன்பான வேண்டுதலும் உயிர்காக்க எங்களது ஓட்டத்தை ஆரம்பிக்க வைத்தது. இருவரும் ஆளுக்கொரு உழவு இயந்திரத்தில் அத்தியவசியமான பொருட்களை ஏத்திககொண்டு வெளிக்கிட்டோம். அவனது வண்டி முன்னால் சென்று கொண்டிருந்தது நான் அவனைப்பின் தொடர்ந்தேன். இடையில் இரு மரநிழலில் அவன் வண்டியை மறித்து "மச்சான் சீப்பிளேன் மேலால பறக்குது இப்படி இரண்டு வண்டி முன்னாலும் பின்னாலும் போக வந்து அடிக்கப்போறான். நான் முன்னால போறன் ஒரு கால் மணித்தியாலம் கழிச்சு பின்னால வா பத்திரமாய் ஓடுடா அவசரப்படாதே. நான் கொஞ்சத்தூரம் போய் காத்திருக்கிறன்." என்றான்.

அவன் எப்பொழுதும் தீர்க்க தரிசனத்தோடு நடப்பதுண்டு நானும் உடன்பட்டேன். அது தான் எங்கள் கடைசி பேச்சு என்று நான் எதிர்பார்க்கவில்லை. அவன் சொன்னபடி கால் மணிநேரம் கடந்தபின்னர் எனது குழந்தைகள் பசியாறி முடிய மரநிழலில் இருந்து வண்டியை எடுத்துக்கொண்டு நெடுஞ்சாலையில் பயணமானேன். கண்ணுக்கெட்டிய தூரம் வரை அவனைக்காணவில்லை கொஞ்சம் விரைந்து சென்றேன். அவனது வண்டி ஒரு மதவுடன் மோதி நின்றிருந்தது அந்த பெட்டியில் இருந்த பொருட்களிற்கும் அவர்களது தசைகளிற்கும் வித்தியாசம் தெரியவில்லை எல்லாம் ஒன்றாகி கிடந்தது நாங்கள் நிழலில் நின்ற வேளை காதைக்கிழித்துக்கொண்டு சென்ற செல் என் நண்பனை பதம் பார்த்திருக்கும் என்று நான் நினைக்கவில்லை. ஒருவர் கூட மிச்சம் இல்லை அவனது நாய் மட்டும் மதவின் கீழ் முனகிக்கேட்டது. அந்த சத்தத்தைக்கேட்ட எனது நாயோ தன் தோழனைத்தேடிக்குரைத்து குதித்துச்சென்றது. நாயை நின்று அழைத்து வர அவசரம் என்னை விடவில்லை. குடும்பத்தோடு அநாதையாய் சிதறிப்போயிருக்கும் என் நண்பனை அருகில் சென்று கட்டி அணைத்து அழ என்னால் முடியவில்லை. "அப்பா பாஸ்கரன் மாமாவையிட வண்டி அங்க கிடக்குது நாங்கள் எங்க போறம்" என் மகனின் கேள்விக்கு எனக்கு விடை கிடைக்கவில்லை. தேம்பி அழுது கொண்டிருந்த அவர்களை. "சத்தம் போடாமல் இருக்கிறியளா இப்ப இதில நிண்டா உங்களுக்கும் இது தான் கதி" சற்று முரட்டுத்தனமாய் அடக்கிவிட்டு நான் வண்டியை ஓடியபடியே இருந்தேன்.

ஒரு கணம் நின்று நான் அவனிற்காய் அழுதால் அடுத்த கணம் தொடர்ந்து பெய்து கொண்டிருந்த செல்மழையில் நானும் அதே நிலைக்குத்தான் ஆளாகியிருக்கக்கூடும். மரணத்தை தொட்டுவிட்ட என்ன நண்பனைப்பற்றி விளிம்பில் நிற்கும் நான் சிந்திக்கலாமா?? என்ற சமாதானத்தை எனக்கு நானே கூறியபோதும் அடிக்கடி நான் தலைகுனிவேன். கோழையாய் நான் எப்படி ஓடினே. சீவனை விட்டுக்கிடப்பவன் என் நண்பன் அவனது உருவம் கூட சரியாக இல்லை சிதறிப்போய் இருந்தான். கையும் காலும் எங்கெங்கோ போயிருக்க முண்டங்களாய் கிடந்த அவனது மனைவி பிள்ளைகளை திரும்பிப்பார்க்காமல் ஓடிய என்னை நண்பன் என்று அவன் ஏற்றுக்கொள்வானா.?? எனது நாய்க்கு இருந்த உணர்வு கூட அந்த நிமிடங்கள் எனக்குள் செத்துப் போனதே இதை அவனது உயிர் பார்க்கக்கிடைத்தால் என்னை மன்னிக்குமா? ஒன்றா இரண்டா 35 ஆண்டுகள் நட்பை அரைநொடியில் வந்த மரணபயம் அறுத்துவிட்ட அவமானக்கதையை மறந்து விடத்தான் முடியுமா.? என்னையே என்னால் மன்னிக்க முடிவதில்லை. அவனிடம் மண்றாடுவதுண்டு மன்னித்துவிடும்படி இறைஞ்சுவதுண்டு மன்னிப்பானா? கேட்டுச்சொல்லுங்கள்! இன்று அவன் நினைவு நாள் காய்ச்சிப்படைப்போம் அவன் வந்து போவான் என்னை காறித்துப்பாமல் போவானா.??

Sunday, December 04, 2005

கோலங்கள்! [தேசப்பிரியன்]

விமானம் யாழ்ப்பாணம் பலாலியில் இருந்து கிளம்புகிறது. ஏக்கம் கவ்விய மனதோடு கவின் யன்னலோர இருக்கையில் இருந்து சொந்த தேசத்தின் அவலங்களை பார்த்தபடி பறக்கிறான். என்ன அழகான தேசம், என்ன நேர்த்தியான கட்டுமானங்கள், கட்டம் கட்டமாக வயல்களும் தோட்டங்களும், இன்று அவை இருந்த அடையாளங்கள் சிதைந்து சின்னாபின்னமாகி..காவலரண்களால் நிறைந்திருக்கின்றன. காணும் காட்சி கவலையைத் தந்தாலும் ஐரோப்பிய இயந்திர வாழ்க்கைக்குள் செயற்கைச் சூழலுக்குள் கடந்த பதினைந்து ஆண்டுகளாக சுழன்றவனுக்கு சொந்த தேசத்தின் அலங்கோலம் கூட ரசிக்கக் கூடியதாவே இருந்தது.

அன்று ஒரு நாள், அதிகாலை நேரம், சன்னங்கள் வீட்டு யன்னல்களைப் பதம்பார்க்கின்றன. நாய்கள் விடாமல் தொடர்ந்து குரைக்கின்றன. "பூட்ஸ்" சத்தங்கள் வீட்டைச் சுற்றிவளைக்கின்றன. சிறிது நேரம் கழித்து பூட்டப்பட்டிருந்த வீட்டுக்கதவு தட்டப்படுகிறது. "சலோ சலோ" என்று ஹிந்தியில் சொல்லி சிலர் கத்துகிறார்கள். "அம்மா இந்தியன் ஆமி வந்திருக்கிறான் என்ன செய்யுறது" கவின் சிறுவனாக பயத்தால் குரல் நடுங்கியடி, தாயை அணைத்துக் கொண்டு கேட்கிறான். " பொறு..பயப்பிடாத.. அப்பா போய் என்னென்று பார்ப்பார்.." அம்மா மகனைத் தேற்றியபடி. கணவனைப் பார்த்து "என்னங்க தனியப் போகாதேங்கோ நாங்களும் வாறம்". தகப்பன் முன்னே செல்ல தாயும் கவினும் பின்னே நிற்க, கதவு திறக்கப்பட்டதும் ஹிந்தியில் ஏதோ கத்தியபடி இந்தியன் ஆமி வீட்டுக்குள் நுழைந்து நாலு பக்கமும் சூழ்ந்து கொள்கிறது. அவர்களில் ஒருவன் சென்னைத்தமிழில் " உங்க வீட்டுக்க எல்ரிரிஈ ஆக்கள் பதுங்கி இருக்கிறதா..? சோதனை பண்ணனும்". அவன் சொல்லி முடிப்பதற்குள் வந்த மற்றையவர்கள் வீடு முழுவதும் தட்டிக்கொட்டி சோதனை செய்யும் சத்தம் கேட்கிறது.

தொடங்கிய சோதனை முடிவதற்குள் மீண்டும் அந்த ஆமிக்காரன் தமிழில் " உங்க வீட்டில இருந்துதான் எல்ரிரிஈ சுட்டிருக்கு.. விசாரணைக்கு ஒருவர் வரனும்" அதைக்கேட்ட கவினின் அப்பாவும் அம்மாவும் செய்வதறியாது திகைத்துப் போயினர். " என்ர அவரை தனிய விட ஏலாது நானும் பிள்ளையும் கூட வாறம்" என்று கவினின் அம்மா காட்டமாகச் சொல்ல " எல்லாரும் நட, ஜீப்பில ஏறு" என்று உத்தரவு வருகிறது. நடந்த சம்பவம் தொடர்பாக எதுவும் அறியாத அவர்கள் மூவரும் வாகனம் ஒன்றில் ஏற்றப்பட்டு கண்கள் கட்டப்பட்டு நீண்ட பயணத்தின் பின் முகாம் ஒன்றில் இறப்பட்டு விசாரிக்கப்படுகின்றனர். விசாரணையின் பின் தாய் வேறாகவும் தகப்பனும் சிறுவனான கவினும் சேர்த்து வேறாகவும் பிரிக்கப்பட்டு அடைக்கப்படுகின்றனர். பல மணி நேரம் விசாரணை தொடர்வதாக சொன்னாலும் இறுதியில் கவின் மட்டும் வற்புறுத்தி வீட்டுக்கு அழைத்து வரப்படுகிறான். பள்ளிச் சிறுவன் என்று காரணம் காட்டி அவனை வீட்டில் விட்டுவிட்டு சென்றுவிட்டார்கள்.

அந்த நாள் வரை தாயையும் தந்தையும் பிரிந்தறியாத கவின் அன்று அவர்களின் பிரிவால் பெரும் துன்பப்பட்டான். பதட்டம் பயம் ஒரு புறம் பெற்றோறைப் பிரிந்த கவலை மறுபுறம் வாட்ட அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அவனின் துன்பத்தைப் பாராது விடுப்பு கேட்பதிலேயே அதிகம் அக்கறை காட்டினர். அதுவும் கூட அவனுக்கு மிக வேதனை அளித்தது. பிறர் உதவிகள் ஏதும் இல்லாது தனிமைக்குள் தனித்துவிட்ட சின்னவனான கவின் வீட்டில் அழுதபடி கண்ணீரோடு காலம் தள்ளத்தொடங்கினான். அதுவே தொடர்கதையுமானது. இப்படியே வந்த நாட்கள் சோகமாக கடந்தனவே தவிர தாயும் தகப்பனும் விடுவிக்கப்படுவதாக இல்லை. பின்பு ஒரு நாள் தாயும் தகப்பனும் காங்கேசன்துறை இந்திய இராணுவ வதை முகாமுக்கு மாற்றப்பட்டு அங்கு நீண்ட நாள் காவலில் அடைக்கப்பட்டிருப்பதாக உறவினர்கள் மூலம் அறிந்து கொண்டான். நீண்ட நாள் பெற்றோரின் பிரிவு, அது தந்த விரக்தி, நீதி என்பதே கிட்டாது எனும் போது எழுத்த ஆதங்கம், மனச்சோர்வு இவை தந்த பாதிப்புக்களால் வாழ்கையில் வெறுமைக்குள் சென்ற கவின் யாருக்கும் சொல்லாமல் கொள்ளாமலே வீட்டை விட்டு வெளியேறி இயக்கத்தோடு இணைந்து செயற்படத் தொடங்கினான். சில காலம் இயக்கத்தோடு செயற்பட்ட பின் அவன் ஐரோப்பாவுக்கு நெருங்கிய உறவினர்களால் அழைக்கப்பட்டுக்கொண்டான்.

ஐரோப்பிய மண்ணில் பல வித்தியாசங்களை சந்தித்த போதும் வசதிகள் வாய்ப்புக்கள் இருந்த போதும் அவனால் மனதளவில் அவற்றோடு ஒன்றித்து அவற்றை திருப்தியோடு அனுபவிக்க முடியவில்லை. அவற்றோடு ஒன்றித்து தன்னை வித்தியாசமானவனாக காட்டி போலியாக வாழவும் முடியவில்லை. பெற்றோரின் பிரிவும் அவர்களுக்கு என்ன நேருமோ என்ற ஏக்கமுமே அவனுக்குள் எப்போதும் குடிகொண்டிருக்கும். வீட்டு நினைவுகளால் அவன் அடிக்கடி ஆளப்படுவான். சொந்த மண்ணில் கண்ட அனுபவங்களே அவனை அந்நிய மண்ணிலும் கொள்கைப்பற்றோடு ஒரு தெளிவான வளமான இலட்சியத்தோடு பற்றுறுதியோடு வாழ வழி சொல்லிக்கொண்டிருந்தது. ஐரோப்பாவிலும் அவன் தனிமையையே விரும்பினான். தானும் தன் படிப்பும் வேலையும் அதுவே அவனுக்கு வாழ்வாகிப் போனது. மற்றைய ஊர் ஆட்கள் போல அவனால் சொந்த மண்ணின் அவலங்களை மறந்து சொந்த வாழ்வில் சந்தித்த துயரங்களை மறந்து போலிப் போர்வைக்குள் புகுந்து இயல்பான அடையாளங்கள் தொலைத்து ஐரோப்பியனாக தன்னை அடையாளம் காட்டி போலித்தனத்தனமாக வாழவும் அவனால் முடியவில்லை. அதற்காக அவன் அப்படி வாழும் மற்றவர்களைக் குறை கண்டதும் இல்லை. அவரவர் தங்கள் மனத்துக்குப் பிடித்தது போல வாழ்கிறார்கள்.அது அவரவர் சுதந்திரம் என்றுணர்ந்தும் கொண்டான்.

விமானம் இரத்மனால விமான தளத்தை நெருங்குகிறது. பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னர் இந்திய இராணுவ வதை முகாமுக்குள் விட்டுவிட்டு வந்த பெற்றோரைக் கண்டு, கொஞ்சி மகிழ்ந்த திருப்தியும், சொந்த மண் பெரும் அவலத்தைக் கண்டிருந்தாலும் இன்னும் அழியாது வைத்திருக்கும் சில அழகுகளை ரசித்த திருப்தியும் மனதிற்கு ஒரு சின்ன ஆறுதலை தந்தாலும், வானூர்தியில் இருந்து அவன் அவதானித்த தாய் மண்ணின் கோலத்தையும் சிங்கள மண்ணின் கோலத்தையும் ஒப்பிட்ட பார்த்த போதுதான் தன் தாய் மண்ணின் ஏழ்மையையும் அவள் இன்னும் ஓரவஞ்சனையை சந்தித்துக் கொண்டிருப்பதையும் தெளிவாக உணரமுடிந்தது. மனதில் அதை படமாக்கிப் பதிந்தும் கொண்டான். ஐரோப்பாவிலும் சரி சிங்கள மண்ணிலும் சரி கடனோ சொந்தமோ வசதிகள் என்று வாழ்ந்தாலும் அந்நியத்தனம் என்பது மனதுக்குள் தேடாமல் தேடி வரும் ஒன்று. அதை சொந்த மண்ணில் அவன் உணரவே வாய்ப்பிருக்கவில்லை. வசதிகளால் ஏழ்மை என்றாலும் சொந்த மண் மனதுக்கு தரும் திருப்தியால் என்றும் நிறைவானதுவே." சொர்க்கமே என்றாலும் நம்மூரைப் போல் ஆகுமா"...என்ற கவிவரிகளின் யதார்த்தத்தை அனுபவம் தந்த உணர்வுகளால் உள்வாங்கியபடி கவின் கொழும்பு இரத்மனால விமான தளம் விட்டு வெளியே நடக்கிறான்.

free hit counter