Tuesday, December 20, 2005

உயிரா ? உறவா?

"விடிஞ்சிட்டுது எழும்பு தம்பி கடைக்குக்கிடைக்குப்போய் காய் கறி களை வாங்கி வந்தால் காய்ச்சி படைச்சுப்போடலாம் எல்லே. இப்ப போனால் தான் நல்ல மரக்கறியள் வாங்கலாம் எழும்பப்பன்". அம்மாவின் குரல் என்னை சங்கடப்படுத்துகிறது. அதுகளுக்காய் ஒரு சொட்டுக்கண்ணீர் சிந்த வக்கில்லாமல் ஓடிய நாங்கள் படைச்சென்ன காச்சி என்ன?? அலுத்தது மனசு.

கண்கள் மூட மறுத்த இந்த வாரத்தின் முடிவு நாள் இந்த மாதத்தின் தொடக்க நாள். கண்ணீர் இன்றி என் மனசழும் காலமிது. எத்தனையோ வீடுகளில் இது தான் நிலை, அத்தனை சுமையை எங்கள் மீது கொடிய கடவுள் இறக்கிவைத்த நாட்கள் இவை. எப்படி நான் மறப்பன், வருசங்கள் சும்மா இல்லை காலில சக்கரத்தைக்கட்டிக்கொண்டு ஓடுது. நானும் தான் சேந்து ஓடிறன் பலன் என்ன. என்ர மனச்சாச்சியைக்கொண்டு, நான் மிருகமாய் நடந்த அந்த நாளை அந்த கணங்களை பத்து வருசமாகியும் என்னால மறக்கவே முடியவில்லை.

"இன்று என் நண்பன்ரையும் அவன்ர குடும்பத்தின்ரையும் நினைவுநாள். ஒன்றாய் நாலு உருப்படிகளை நான் அநாதைப்பிணங்களாய் விட்டு விட்டு கோழையாய் ஓடிய நாள். வலிகாமத்திற்கு ஆமியின் படை நகர்வு ஆரம்பித்த வேளை அது, செல்லடிகள் பலரது காதுகளை ஊனமாக்கிச்சென்றது. நான் கூட அந்த தாக்கத்தை கனநாள் உணர்ந்திருக்கிறன். நாங்கள் மண்ணில் அ, ஆ எழுதிப்பழகிய காலம் தொட்டு கள்ள மாங்காய்க்கு கல்லெறிந்து, மாடு மேய்ச்சு, மாட்டுக்குப்புல்லறுத்து, தோட்டம் செய்து, மதவடியில சைக்கிலும் கையுமாய் கூட்டம் கூடி காட்ஸ்விளையாடி, அரும்பும் மீசையுடன் அவரவர் வாழ்க்கைத்துணைகளை தேடி இப்படிப்பல நிகழ்வுகளிற்கு என்னோடு ஒன்றாய் நின்றவன். அந்த இடப்பெயர்வோடு என் தோழமையை முடித்துக்கொண்டான்.

என்ர நண்பன் பாஸ்கரன் ஒரு வேலி இங்கிருந்து நான் சமிக்கை காட்ட அதுக்கு ஏற்றபடி எங்களது அன்றாட நடவடிக்கைகளை அமைத்துக்கொள்வான். ஒன்றாய் உண்டு ஒன்றாய் உறங்கி வாழ்ந்த
தோம். நாங்கள் மட்டும் இல்லை எங்களுக்கு அமைஞ்ச மனைவிமார் கூட இருவரும் நல்ல நண்பிகள் தான். குடும்பம் குடும்பமாய் எங்கட நட்பு விரிந்து சென்றது. செல்லடியின் உக்கிரம் உணர்ந்த பாஸ்கர். தோட்டம் துரவு காணி வீடு என்று இதுகளை கட்டிக்கொண்டிருந்த என்னையும் என் குடும்பத்தையும் எத்தனை தரம் கெஞ்சி இடப்பெயரச்செய்தான். "எட பைத்தியக்காரா காணி பூமிகளை நாளைக்கு நாங்கள் வாங்கிச்சேர்க்கலாமடா இதுகள் எங்க ஓடப்போகுதுகள் நீ எத்தனை வருசம் கழிச்சு வந்தாலும் இங்க தான் இருக்கும். இதுகளைப்பாக்கிறதுக்கு நீ முதலில உயிரோட இருக்கோணுமடா. விசர்க்கதை கதைக்காமல் வெளிக்கிடு போவம்."

அவனது அதட்டலும் அன்பான வேண்டுதலும் உயிர்காக்க எங்களது ஓட்டத்தை ஆரம்பிக்க வைத்தது. இருவரும் ஆளுக்கொரு உழவு இயந்திரத்தில் அத்தியவசியமான பொருட்களை ஏத்திககொண்டு வெளிக்கிட்டோம். அவனது வண்டி முன்னால் சென்று கொண்டிருந்தது நான் அவனைப்பின் தொடர்ந்தேன். இடையில் இரு மரநிழலில் அவன் வண்டியை மறித்து "மச்சான் சீப்பிளேன் மேலால பறக்குது இப்படி இரண்டு வண்டி முன்னாலும் பின்னாலும் போக வந்து அடிக்கப்போறான். நான் முன்னால போறன் ஒரு கால் மணித்தியாலம் கழிச்சு பின்னால வா பத்திரமாய் ஓடுடா அவசரப்படாதே. நான் கொஞ்சத்தூரம் போய் காத்திருக்கிறன்." என்றான்.

அவன் எப்பொழுதும் தீர்க்க தரிசனத்தோடு நடப்பதுண்டு நானும் உடன்பட்டேன். அது தான் எங்கள் கடைசி பேச்சு என்று நான் எதிர்பார்க்கவில்லை. அவன் சொன்னபடி கால் மணிநேரம் கடந்தபின்னர் எனது குழந்தைகள் பசியாறி முடிய மரநிழலில் இருந்து வண்டியை எடுத்துக்கொண்டு நெடுஞ்சாலையில் பயணமானேன். கண்ணுக்கெட்டிய தூரம் வரை அவனைக்காணவில்லை கொஞ்சம் விரைந்து சென்றேன். அவனது வண்டி ஒரு மதவுடன் மோதி நின்றிருந்தது அந்த பெட்டியில் இருந்த பொருட்களிற்கும் அவர்களது தசைகளிற்கும் வித்தியாசம் தெரியவில்லை எல்லாம் ஒன்றாகி கிடந்தது நாங்கள் நிழலில் நின்ற வேளை காதைக்கிழித்துக்கொண்டு சென்ற செல் என் நண்பனை பதம் பார்த்திருக்கும் என்று நான் நினைக்கவில்லை. ஒருவர் கூட மிச்சம் இல்லை அவனது நாய் மட்டும் மதவின் கீழ் முனகிக்கேட்டது. அந்த சத்தத்தைக்கேட்ட எனது நாயோ தன் தோழனைத்தேடிக்குரைத்து குதித்துச்சென்றது. நாயை நின்று அழைத்து வர அவசரம் என்னை விடவில்லை. குடும்பத்தோடு அநாதையாய் சிதறிப்போயிருக்கும் என் நண்பனை அருகில் சென்று கட்டி அணைத்து அழ என்னால் முடியவில்லை. "அப்பா பாஸ்கரன் மாமாவையிட வண்டி அங்க கிடக்குது நாங்கள் எங்க போறம்" என் மகனின் கேள்விக்கு எனக்கு விடை கிடைக்கவில்லை. தேம்பி அழுது கொண்டிருந்த அவர்களை. "சத்தம் போடாமல் இருக்கிறியளா இப்ப இதில நிண்டா உங்களுக்கும் இது தான் கதி" சற்று முரட்டுத்தனமாய் அடக்கிவிட்டு நான் வண்டியை ஓடியபடியே இருந்தேன்.

ஒரு கணம் நின்று நான் அவனிற்காய் அழுதால் அடுத்த கணம் தொடர்ந்து பெய்து கொண்டிருந்த செல்மழையில் நானும் அதே நிலைக்குத்தான் ஆளாகியிருக்கக்கூடும். மரணத்தை தொட்டுவிட்ட என்ன நண்பனைப்பற்றி விளிம்பில் நிற்கும் நான் சிந்திக்கலாமா?? என்ற சமாதானத்தை எனக்கு நானே கூறியபோதும் அடிக்கடி நான் தலைகுனிவேன். கோழையாய் நான் எப்படி ஓடினே. சீவனை விட்டுக்கிடப்பவன் என் நண்பன் அவனது உருவம் கூட சரியாக இல்லை சிதறிப்போய் இருந்தான். கையும் காலும் எங்கெங்கோ போயிருக்க முண்டங்களாய் கிடந்த அவனது மனைவி பிள்ளைகளை திரும்பிப்பார்க்காமல் ஓடிய என்னை நண்பன் என்று அவன் ஏற்றுக்கொள்வானா.?? எனது நாய்க்கு இருந்த உணர்வு கூட அந்த நிமிடங்கள் எனக்குள் செத்துப் போனதே இதை அவனது உயிர் பார்க்கக்கிடைத்தால் என்னை மன்னிக்குமா? ஒன்றா இரண்டா 35 ஆண்டுகள் நட்பை அரைநொடியில் வந்த மரணபயம் அறுத்துவிட்ட அவமானக்கதையை மறந்து விடத்தான் முடியுமா.? என்னையே என்னால் மன்னிக்க முடிவதில்லை. அவனிடம் மண்றாடுவதுண்டு மன்னித்துவிடும்படி இறைஞ்சுவதுண்டு மன்னிப்பானா? கேட்டுச்சொல்லுங்கள்! இன்று அவன் நினைவு நாள் காய்ச்சிப்படைப்போம் அவன் வந்து போவான் என்னை காறித்துப்பாமல் போவானா.??

6 Comments:

Blogger துளசி கோபால் said...

இப்படி எத்தனையோ சோகங்களைச் சுமந்துகொண்டு 'வாழ்கின்றோம்'தானே?

December 20, 2005 9:23 PM  
Blogger சினேகிதி said...

kavalai padathyungo ungada nanbaruku ungada nilamai villangum.uppidi ethinai pear pachai kulanthaya koda thotil la vididu oodinavai.ithellam vithi endu solrathaa?aandavanai than kekonum.

December 20, 2005 11:53 PM  
Blogger கயல்விழி said...

//இப்படி எத்தனையோ சோகங்களைச் சுமந்துகொண்டு 'வாழ்கின்றோம்'தானே?//

இப்படி உறவினர்கள் உயிரிழந்து கிடக்க ஓவென்று அழமுடியாமல் ஓடுற நிலைமை யாருக்கும் வரக்கூடாது. தமிழர் இப்படி எத்தனை கொடுமையை சந்தித்துவிட்டார்கள்.


//kavalai padathyungo ungada nanbaruku ungada nilamai villangum.uppidi ethinai pear pachai kulanthaya koda thotil la vididu oodinavai.ithellam vithi endu solrathaa?aandavanai than kekonum. //

சிநேகிதி கதையோட ஒன்றிவிட்டீர்களா. உண்மை தான் பெற்றாரைக்கூட பங்கரில் விட்டுவிட்டு வந்த எத்தனையோ பேர் இன்னும் வீடுதிரும்பவில்லை அவர்கள் நிலை என்ன யாருக்குத்தான் தெரியும்.??

December 21, 2005 11:41 AM  
Blogger U.P.Tharsan said...

என்ன கயல்விழி தங்களுடைய கதைகள் ஒரே சோகமாகவே இருக்கிறது. கதை நன்றாக இருக்கிறது. உணர்ச்சிகளை நன்றாக வெளிப்படுத்தியிருக்கிறீர்கள்.

December 21, 2005 11:50 AM  
Anonymous Anonymous said...

கயல் உங்கள் கதைகள் இயல்பாக அழுத்தமாக சொல்ல வரும் விடயத்தை உணர்வு கலந்து சொல்லிவிடுகின்றன. வாழ்த்துக்கள். தொடர்ந்து படையுங்கள்.

உங்களுக்கு இனிய புத்தாண்டு வாழ்த்துக்களும் உரித்தாகட்டும்.

( தேவையற்ற பின்னூட்டல்களை அகற்றிவிடுங்கோ)

December 26, 2005 10:36 AM  
Blogger கயல்விழி said...

நன்றி தேசப்பிரியன். அகற்றியுள்ளேன். உங்கள் கருத்திற்கு நன்றி தர்சன்.

December 27, 2005 4:35 PM  

Post a Comment

<< Home

free hit counter