தாலியினால் ஒரு பந்தம்..! (சிறுகதை)
நடக்கிறதுகளைப்பார்க்க எரிச்சல் எரிச்சலாய் இருந்தது கவிதாவிற்கு இரண்டாவது முறையாக மீண்டும் மணமேடையில் மணப்பெண்ணாய்.
அதே ஐயர், அதே மண்டபம், நெருப்பு, அதே மந்திரம், ஆனால் இம்முறை மாப்பிள்ளை மட்டும் மாற்றம். "என்ன இது இவர்கள் இப்படி எத்தனை நாளைக்கு தான் இந்த மந்திரம் தந்திரம் என்று ஏமாற்றப்போகிறார்கள்" தனக்குள் நொந்து கொண்டாள். இத்தனை மந்திரங்களையும் அன்றொருநாள் ஒன்றும் விடாமல் ஒப்பித்தவள் தானே கவிதா.
எத்தனை எதிர்பார்ப்புக்களுடன் கணவனுடன் அப்படி பழகவேணும், இப்படி சிரிக்க வேணும் என்று எத்தனை நாள் நினைத்தது நினைத்து கற்பனை பண்ணி இதே மணமேடையில் தாலியையும் ஏந்திக்கொண்டவள். இவர்களது மந்திரம் வாழ்த்துக்கள் நெருப்பு எல்லாவற்றையும் மீண்டும் ஒரு முறை மணமகளாய் இருந்து பெறுவாள் என்று எதிர்பார்த்தாளா.? எரிச்சலை அடக்கிக்கொண்டு ஐயர் சொன்ன மந்திரங்களை எல்லாம் ஒன்றும் விடாமல் ஒப்பித்தாள் வேண்டாவெறுப்பாய்.
அவளது முகத்தில் இருந்த எரிச்சலை புரிந்து கொண்ட வசி கேட்டான். "ஏன் கவிதா என்ன சூடாய் இருக்கிறீங்க?". "ஒன்டும் இல்லை வசி, தயவுசெய்து சும்மா இருங்கோ பிறகு கவலைப்படப்போறீங்க" இரகசியமாய் சொன்னாள். மணப்பெண்ணல்லவா? மணமகனுடன் மணமேடையில் அதிகம் கதைத்தால் சிரிப்பார்கள் அதிலும் இவள் இரண்டாவது தடவை மணமகள். "எனக்கு தெரியும் கவிதா நீங்க என்ன நினைச்சீங்க என்று, சரி வேண்டாம் விடும்". என்று அவனே தவிர்த்துக்கொண்டான்.
இன்று வசியைக் கவிதா இரண்டாவதாக மணம் முடிக்கிறாள். இரண்டு வருடங்கிளிற்கு முன்னர் இதே மேடையில் இத்தனை சுற்றமும் சூழ வசியின் அண்ணா சசிகரனை மணம் முடிச்சு திருமண பந்தத்தில் நுழைந்தவள். ஒரு பாதி நாளும் அந்த பந்தத்தை அனுபவிக்க முடியாதாவளாய் போய்விட்டாள். கலியாணம் முடிந்த முதல் இரவு கணவன் என்ன கேட்பான் எப்படி பதில் சொல்ல என்று ஆவலாய் அறையில் நுழைந்தவளுக்கு இடி பின்னால் வந்தது. வெட்கத்துடன் கட்டிலில் அமர்ந்திருந்தவளின் முகம் கண்ணாடியில் தெரிந்தது. கண்ணாடியை வெறித்து பார்த்துக்கொண்டிருந்தான் சசி பேச்சு எதுவுமே இல்லை. அருகில் இருந்த அந்த கண்ணாடியில் கவிதாவின் உருவம் தெரிந்தது. கணவன் தன்னை கண்ணாடியில் பார்த்துக்கொண்டிருந்தான் என்று எண்ணி வெட்கத்துடன் தலை குனிந்தாள் கவிதா.
தீடீரென கதவு தட்டும் சத்தம் கேட்டு கதவைத்திறந்தாள். சசியின் தாய் தண்ணீரும் மாத்திரையுமாய் வந்தாள். "இல்லைப்பிள்ளை குளிசை போட மறந்திட்டான் அது தான் கொண்டுவந்தனான்" என்றாள். என்ன குளிசை? ஏன்? எதற்கு? எத்தனையோ கேள்விகளைக்கேட்க நினைத்தவள் அடக்கி கொண்டு "என்னட்ட தாங்கோ அத்தை நான் கொடுக்கிறன்" என்று வாங்கியவள். "என்னத்திக்கு அத்தை இவ்வளவு குளிசை பாவம் சசி என்றாள்". "என்ன செய்யிறது அவனின்ர விதி பிள்ளை யார் என்ன செய்ய முடியும்" என்று விட்டு நகர்ந்தாள் சசியின் தாய். குளிசைகளிற்கிடையில் நித்திரைக்குளிசைகள் இரண்டு முழித்துக்கொண்டிருந்தன. என்ன இது என்று புரியாதவளாய் அவனிடம் மாத்திரைகளை நீட்டினாள். வாங்கி அதை விழுங்கியவன் அப்படியே சிறிது நேரத்தின் பின் தூங்கிவிட்டான். அவளிற்கு எப்படித்தூக்கம் வரும் ஒரு வார்த்தை கூட அவன் பேசவில்லை அவளுடன்.
இல்லற வாழ்வில் இணைய காத்திருக்கும் இரு சோடிகளில் ஒன்றிற்கு இப்படியா நித்திரைக்குளிசை கொடுப்பார்கள். கோவித்த படி மெல்ல கதவை திறந்து வெளியில் வந்தவளிற்கு எதிரில் தென்பட்டவள் சசியின் தாய் தான். அவளிடம் விசாரித்ததில் தான் தெரிந்தது அவன் மனநிலை பாதிக்கப்பட்டிருப்பது. இந்த விடயம் கவிதாவின் பெற்றோருக்கும் தெரியும் என்பது கவிதாவிற்கு பேரிடியாக விழுந்தது.
சிறுவயதில் வெளிநாட்டிற்கு பிழைப்பிற்காய் அனுப்பப்பட்டவன் தான் சசி. சிறுவயதில் அவனிற்கு வேண்டிய அன்பு பாசம் அரவணைப்பு எல்லாத்தையும் இழந்தவன். அதை ஏங்கி ஏங்கி தவித்து தனியாக வாழ்ந்தவன் இன்று இந்த நிலையிற்கு வந்துவிட்டான். பார்க்காத வைத்தியர்கள் இல்லை வெளிநாட்டிலும் சரி இலங்கையிலும் சரி எல்லாரும் அன்பும் பாசமும் தான் அவனிற்கு முக்கியம் என்று கூறிவிட்டார்கள். உடனேயே அவன் தாய் தந்தையாரிடம் வந்துவிட்டான். இலங்கை வந்தபின்னும் பல வைத்தியர்களிடம் காட்டினார்கள். எந்த பிரயோசனமும் இல்லை என்பது தான் பதில். தனிமையையே நாடிய சசி திடீரென சத்தம் போடுவதும், கத்துவதும் என்று எல்லாரையும் பயப்பிடித்தினான். அப்பொழுது தான் சசிக்கு ஒரு திருமணம் செய்தால் சரியாகிவிடும் என்ற முடிவிற்கு வந்தார்கள்.
இவர்களது காலம் கவிதாவிற்கும் அப்பொழுது திருமணத்திற்கு மாப்பிள்ளை பார்த்துக்கொண்டிருந்தார்கள். தரகர் ஒருவர் மூலம் இருகுடும்பத்திற்கும் இடையே இணைப்பு ஏற்பட்டது. சசியின் தாய் எல்லாவிடயங்களையும் கவிதாவின் பெற்றோருக்கு கூறியிருந்தார். மிகவும் வசதியான குடும்பம், அது மட்டும் அவர்களது கண்களிற்கு தெரிந்தது. கவிதா நல்ல பொறுமைசாலி அவளால் நிச்சயமாக சசியைக்குணப்படுத்த முடியும் என்று முடிவெடுத்தார்கள். இருந்தும் இதுபற்றி கவிதாவிடம் எதுவும் அவர்கள் பேசவில்லை. பெற்றோர்கள் தனக்கு தீங்கைச்செய்யப்போவதில்லை என்ற முழுநம்பிக்கையில் கவிதா மேலதிகமாய் எந்த ஆராச்சியிலும் ஈடுபடவில்லை. திருமணத்திற்கும் சம்மதித்தாள். அது தான் அவள் செய்த ஓரே ஒரு தவறாய் இருக்கலாம். இன்று தான் இந்த விடயம் எல்லாம் அவளிற்கு தெரிந்தது. இத்தனையும் அறிந்த பின் என்ன செய்வது என்று ஏதும் அறியாமல் நின்றாள். பெற்றோரே இப்படி செய்வார்கள் என்று எந்த பெண்ணாவது எண்ணுவாளா.? அதுவே அவளிற்கு இடியாய் விழுந்தது. உண்மையை முதலில் சொல்லியிருந்தால் ஒரு வேளை இதன் தாக்கம் குறைவாக இருந்திருக்கலாம். ஆனால் இப்பொழுது எல்லாரும் சேர்ந்து ஏமாற்றிய ஒரு உணர்வு. எங்கையாவது போய்விட வேண்டும் என்று தான் தோன்றியது. ஆனால் சசியின் நிலையையும் அவனது குடும்பத்தையும் பார்க்கையில் இவர்கள் என்ன பாவம் செய்தார்கள் என்ற எண்ணம் தான் தோன்றியது. எது நடந்தாலும் இனி இப்படியே வாழ்வது என்று முடிவுடன் போய் அமர்ந்து கொண்டாள். எப்படி மனதை தேற்றிக்கொண்டாலும் சசியை கணவன் என்பதைவிட அவன் ஒரு மனநோயாளி என்பது தான் அவளிற்கு தெரிந்தது.
முதல் இரவு என்பது தாம்பத்தியத்தில் மறக்க முடியாத இரவு என்பார்கள். அவளிற்கும் அதே போல் தான் ஆனால் இந்த இரவு வந்திருக்க வேண்டாம் என்பது தான் அவளது எண்ணம். அன்றைய இரவு அவளது தூக்கம் சோபாவினுள் அடங்கியது. நீண்ட நேரம் விழித்திருந்தாள் எழுந்திருக்க நேரம் ஆகிவிட்டது. காலை ஆறுமணி இருக்கும் ஒரு அழைப்பு "கவிதா எழும்பி போய் கட்டிலில் படுக்கலாமே". புதிய குரல் தன்னை உசார் படுத்திக்கொண்டு விழித்துப்பார்த்தாள் அது சசி. "இல்லைப்பறவாய் இல்லை" என்றவள் எழுந்தாள். "I am very sorry" என்று அவன் அவளைப்பார்த்து சொன்னான். அவன் ஏன் அப்படிச்சொன்னான் என்பதற்கு காரணம் அவள் தேடவில்லை. அவன் நல்ல மனநிலையில் இருக்கும் போது பேசுகின்ற ஒரு சில வார்த்தைகள் இவை.
இப்படித்தான் அவர்களது வாழ்க்கை ஆறு மாதங்களாய் ஓடியது என்று தான் சொல்லவேண்டும். சசியின் அழைப்பில் விழித்துக்கொண்டவள். எழுந்தவுடன் விறுவிறு என்று வெளிக்கிட்டு எங்கேயோ அவசரமாய் சென்றாள். "என்ன அண்ணி அவசரமாய் கிளம்பீட்டீங்க வீட்டையோ!? எதிர்ப்பட்டவன் வசி. "ம் ஒருக்கா போயிட்டு வாறன்" என்று ஒரே சொல்லில் பதில் சொல்லிவிட்டு கிளம்பிவிட்டாள். வீட்டிற்கு சென்றவள் அவர்கள் இரவு சொன்னது எல்லாம் பொய்யாய் இருக்கக்கூடாதா என்று எண்ணியபடி வீட்டினுள் நுழைந்தாள். இத்தனை வெள்ளென மகளைக்கண்ட பெற்றோருக்கு நெஞ்சு பதை பதைத்தது. "என்னம்மா என்ன நடந்தது" என்று பதற்றத்துடன் விசாரித்தார் தகப்பன். "அப்பா சசிக்கு பயித்தியம் என்று உங்களுக்கு தெரியுமோ தெரியாதோ, ஏன் எனக்கு சொல்லலை" . கேள்விகளை கணையாய் தொடுத்தாள். "என்னம்மா இப்படிகேக்கிறாய் சசிக்கு ஒன்றும் பயித்தியம் இல்லை ஒரு சிறிய மனக்குழப்பம் அவ்வளவும் தான்" என்று தாய் கூறிய போது கவிதாவிற்கு தூக்கிவாரிப்போட்டது. "அப்ப உங்களிற்கு அந்தவிடயம் தெரியும் ஏன் எனக்கு சொல்லேல்லை. என்னை எப்படியாவது தொலைச்சுப்போடவேணும் என்று நினைச்சியள். செய்து முடிச்சிட்டியள் அப்படித்தானே?". என்று கேட்டவளிற்கு பதில். அவள் கார் பங்களா வேலைக்காறி என்று சந்தோசமாய் இருக்க வேணும் என்று நினைத்தார்களாம். அப்படி ஒரு வாழ்வு இத்தனை நாளும் அவளிற்கு கிடைக்கவில்லை இனியாவது சந்தோசமாய் வாழட்டும் என்று தான் செய்தார்களாம் இது அவர்கள் பதில். நெஞ்சே வெடித்து போய்விடும் போல் இருந்தது கவிதாவிற்கு. என்ன இவர்கள் பெற்றவர்கள் மாதிரியா பேசுறார்கள். வசதியும் பணமும் இருந்தால் போதுமா.? சந்தோசம் வேண்டாமா.? பல கேள்விகளைக்கேட்டவள் இனி செய்வதற்கு ஏதும் இல்லை. விதி வழி வாழ்க்கை போகட்டும் என்று நினைத்துவிட்டு. "சரியம்மா காரையும் பங்களாவையும் கட்டிக்கொண்டு நான் வாழுறன். இனி உங்களிற்கு ஒரு மகள் இருந்தாள் என்றதை மறந்திடுங்க. எனக்கு ஒரு தலைவலி என்றால் பணம் ஓடிவந்து மருந்து தரட்டும். அந்தப்பணம் மட்டும் எனக்கு போதும் என்னைப்பாக்கிறதிற்காய் இனி அங்கினை வரதேங்கோ. இன்றையோட முடிஞ்சிது எனக்கு இந்த வீட்டு உறவு. பணத்திற்காய் ஆசைப்பட்டு என் தங்கைகள் வாழ்க்கையயையும் இப்படி ஆக்கிப்போடாதேங்கோ அவர்கள் ஆவது நல்லாய் இருக்கட்டும்" என்று கண்ணீரால் கதையை சொல்லிவிட்டுச்சென்றாள்.
இப்படியே தான் ஆறு மாதங்கள் காலம் போனது. எப்படி அவளால் கணவனையோ அவனது குடும்பத்தையோ தண்டிக்க முடியும்? அவர்கள் என்ன செய்தார் என்ற எண்ணத்தோடு இப்படியே காலத்தை கழிப்பது என்ற முடிவுக்கு வந்து விட்டால் கலியாணம் முடிந்து ஒரு சில வாரங்களில் அவள் மீண்டும் வேலைக்கு போக தொடங்கிவிட்டாள். யாருடன் தனது கதையைச்சொல்லி அழுவது யாரையும் அவளிற்கு பிடிக்கவில்லை. பெற்றவர்களே இப்படி ஏமாற்றும் போது வேறு யார் உண்மையாக இருப்பார்கள் என்ற எண்ணம் தான். வேலை முடிந்தால் வீடு வீட்டில் எந்த நேரமும் கையில் புத்தகம். ரமணிச்சந்திரனின் கதைகள் யாவையும் கரைத்துக்குடித்து விட்டாள் என்று தான் சொல்லவேண்டும். வீட்டில் இருப்பவர்கள் எல்லாம் வேற்று மனிதர்கள் போல் தான் அவளிற்கு. ஏதோ கடமைக்கு பழகுவது போன்று. வாழ்க்கை ஒரு பிடிப்பில்லாமலே போய்விட்டது. கணவனுக்கு அவளும் முடிந்தளவு முயற்சி செய்து விட்டாள். வைத்தியரிடமும் பல முறை காட்டினாள்.
அவசரப்பட்டு திருமணம் செய்து விட்டார்கள் என்று பலர் பேசினார்கள். சசி என்ன நேரம் எப்படியிருப்பான் என்று யாருக்கும் தெரியாது. ஆனால் அவனிற்குள் நெருடல். ஒரு பெண்ணின் வாழ்வு தன்னால் அழிந்து விட்ட குற்ற உணர்வு. இதுவே அவனது கதையை முடித்தது. அந்த உணர்வினாலேயே ஓரு நாள் தற்கொலைக்கு சென்று விட்டான். இதுவரை ஏதோ ஒரு உறவு அவளை அங்கு வைத்திருந்தது. நேயாளியாய் எனினும் கணவன் இருந்தான். அந்த உறவும் முறிந்து போனது. சசிக்கும் கவிதாவிற்கும் இடையில் இருந்த உறவு எப்படி என்பது எல்லோருக்கும் தெரியும். தாமரையிலையில் தண்ணியைப்போலத்தான் அவர்கள் எட்டி நடந்தார்கள். கணவன் இறந்த ஒரு சில மாதங்களின் பின் கவிதா அங்கிருந்து வெளியேறிவிட்டாள். வீட்டில் எல்லோருடைய சம்மதத்துடன் தான். அவர்களும் எப்படி மறிப்பார்கள்.? தாலி ஏற்படுத்திய உறவால் அங்கிருந்தாள். அந்த தாலியே இல்லை என்றானபின் அவள் விலகிக்கொண்டாள். இருந்தாலும் அவளினுள் உறுத்தல் தன்னால் ஒரு உயிர் பறிபோய்விட்டதாய் வருத்தம், அங்கிருக்கும் நிமிடங்கள். என் அண்ணணை என் பிள்ளையை கொன்றுவிட்டாயே பாவி என்று கேட்பது போல் ஒரு உணர்வு.
அவள் வெளியேறிவிட்டாள். வேலை செய்யும் இடத்திற்கருகில் ஒரு பெண்கள் விடுதியில் சரனடைந்து கொண்டாள். தாய்வீட்டிற்கு செல்ல அவளிற்கு மனசு இடம் கொடுக்கவில்லை வாவென்று அழைக்க முடியாதவர்களாய் அவர்களும் வரச்சொல்லி வற்புறுத்தினார்கள். வெட்டி விட்டவர்களை மீண்டும் இணைத்துக்கொள்வதில் அவளிற்கு விருப்பமில்லை. விதவை என்ற சொல்லைத்தவிர அவளிற்கு எந்த பிரச்சனையும் இருந்ததில்லை. வெறுமை வெறுப்பு யாவும் சூழ்ந்த நிலை பழகிப்போய்விட்டது.
சசியின் குடும்பத்திலிருந்து அடிக்கடி ஒருரிருவர் வந்து அவளைப்பார்த்துச்செல்லவது வழக்கம். அவளும் அதைத்தடைசெய்வில்லை. இப்படித்தான் ஒரு நாள் வசி வந்தான். " கவிதா உங்களுடன் கொஞ்சம் பேசவேணும்" என்றான். சசிக்கும் கவிதாவிற்கும் பெரிய வயசுவித்தியாசம் இல்லை கவிதா அவனைவிட ஒரிரு வயது குறைந்தவள் தான். "என்ன வசி சொல்லுங்கோ" என்றாள். அவன் ஒரு சிறு துண்டை அவளிடம் நீட்டினான். "கவிதா இதை அண்ணா சாகமுதல் எழுதி என் அறையில் வைத்திருக்கிறார். எனக்கு என்ன செய்யிறதென்று என்று தெரியயேல்லை. அம்மா அப்பாவுக்கும் காட்டினனான் அவர்களும் எந்த மறுப்பும் தெரிவிக்கவில்லை. இதைப்பாத்திட்டு உங்கள் முடிவைச்சொல்லுங்கோ எதுவானாலும் எனக்கு பிரச்சனையில்லை. நீங்கள் எங்கட வீட்டை எப்படி வாழ்ந்தீங்கள் என்று எனக்கு நல்லாய் தெரியும். உங்கள் முடிவு தான் வேணும். உங்கட வீட்டில யாரிட்டையும் நாங்கள் பேசேல்ல ஏற்கனவே பிரச்சனை தானே" என்று கூறினான். "சரி கவிதா நான் போயிட்டு வாறன். ஆறுதலாய் யோசியுங்கோ பிறகு ஒரு பதில் சொல்லுங்கோ இது உங்கட வாழ்க்கை" என்று கூறிவிட்டு சென்றுவிட்டான்.
என்னவென்று புரியவில்லை கவிதா புரியாதவளாய் அந்த காகிதத்தை பிரித்தாள். அது சசியின் கையெழுத்து பொதிந்த ஒரு கடிதம்.
வசிக்கு எழுதப்பட்டிருந்தது. அந்த கடிதத்தின் சாரம் இது தான். கவிதா அவன் தாலிகட்டிய மனைவி. அதைவிட அவளிற்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை. ஒரு பாவமும் அறியாத பெண்ணின் வாழ்வை தன்னால் அழிந்து விடக்கூடாது என்பதற்காய் சகலதும் அறிந்த தம்பி வசி. அவளைப்புரிந்து மீண்டும் மணந்து கொள்ள வேண்டும் எனபதே. அதுவும் அவன் விரும்பினால் மட்டும் என்று குறிப்படிட்டிருந்தான்.
தன்னை அழித்து தன் மனைவிக்கு வாழ்வழிக்க எண்ணியிருந்தான் அவன். இதை சசியின் பெற்றோரும் ஏற்றுக்கொண்டார்கள். சசியின் பெற்றோரும் வந்து அவளுடன் கதைத்தார்கள். அவளது வாழ்க்கைக்கு ஒரு அர்த்தம் என்றால் இன்னொரு மணம் புரிவது தான். அவள் இதுவரை வாழ்ந்த வாழ்க்கையை அறியாத ஒருவனை திருமணம் செய்வதை விட வசியை மணம் முடிப்பதால் ஏற்படும் புரிந்துணர்வை எடுத்துக்கூறினார்கள். அவளிற்கும் அது சரி என்றே தோன்றியது.
ஒரு சில மாதங்களின் பின்னர் மீண்டும் அவளிற்கு மறுமணம் இன்று நடக்கிறது. அவள் மீண்டும் மருமகளாய் வசியின் மனைவியாய். இன்று ஆகப்போகிறாள். குனிந்த தலையுடன் கவிதாவின் பெற்றோரும் மீண்டும் ஒரு முறை அறுகரிசிபோட்டு வாழ்த்தினார்கள். அவள் எதிர்பார்த்த வாழ்க்கை ஒரு உயிரின் மறைவின் பின் கிடைத்ததில் அவளிற்கு வருத்தம். இருந்தும் அவனின் தியாகத்தில் அவள் வாழ்வு ஆரம்பமாகப்போகிறது. அவள் மீண்டும் வாழுப்போகும் வீட்டில் உள்ள மனிதர்களை எண்ணி நெகிழ்ந்து கொண்டு தன் பெற்றோர்களை ஏதோ வேண்டா வெறுப்பாய் பார்த்தாள். அவளைப்பொறுத்தவைர அவர்கள் செய்தது இன்னும் துரோகமே...!