வேசி மகள்..! (சிறுகதை)
ஊர் முழுதும் ஒரே பரபரப்பு. அந்தப்பொண்ணா இப்படி செய்தாள்? பலரது மனங்கள் ஒரே மாதிரி கேள்வியை வினவ வைத்தன. என்ன தான் செய்தாலும் பெற்ற தாயை இப்படி ஈவு இரக்கமில்லாமல் கொலை செய்திருக்கக்கூடாது என்று சிலர் நொந்தும் கொண்டார்கள். கொலையை துணிவாய் செய்த சசி ஏன் செய்தாள் என்பது பலருக்கும் தெரிந்திருந்தாலும். இப்படி செய்திட்டாளே என்பது தான் அவர்கள் ஆதங்கம். அதற்கு விளக்கம் சொல்லவும் அவள் விரும்பவில்லை. அவளைப்பொறுத்தவரையில் சமூகத்தில் ஒதுக்கி வைக்க வேண்டிய ஒரு விபச்சாரியைத்தான் கொலை செய்திருந்தாள். அதற்குப்பிறகு தான் அவளது தாய். பெற்ற தாயாக இருந்தாலும் சமூகத்தை சிரழிக்க காரணமாய் இருந்தவள் உயிருடன் இருக்க கூடாது என்று நினைத்தவள். தனது கொள்கையில் எந்த மாற்றமும் அற்றவளாய், தான் செய்த குற்றத்திற்கு நியாயம் தேடாதவளாயும் தான் இதுவரை இருக்கிறாள். பதினாறு வயது நிரம்பிய பெண்ணவள். இதுவரை தாயே உலகமாய் தான் வாழ்ந்தவள். ஊரில் உள்ள பலர் அவளையும் தாயையும் கண்டு விலகித்தான் நடந்தார்கள் அப்பொழுது எல்லாம் காரணம் என்னவென்று அவளிற்கு தெரிந்ததில்லை. அப்பொழுதெல்லாம் அவர்கள் மனசில்லாதவர்கள் என்பது மட்டும் தான் அவளிற்கு தெரியும். அவளை எத்தனையோ தடவை வேசி மகள் என்று மற்றவர்கள் பேசிய போதும். அதற்குரிய அர்த்தம் என்னவென்று அப்பொழுது அவளிற்கு தெரியவில்லை.
அவளது பிறப்பு கூட ஒரு தேவையற்ற பழிக்குரிய பிறப்பாய் தான் இந்த உலகில் ஆரம்பமானது.
சசியின் தாய் சாந்தி அவளது வயதில் அழகாய் கண்ணுக்கு இலட்சணமாய் தான் இருந்தாள். பலரை காதல் வலையில் விழவைத்தது அவளது அழகு. குடும்ப வறுமை அத்தோடு கௌரவம் கட்டுப்பாடு என்று, அவள் காதல் எதையும் ஏற்றுக்கொள்ளவில்லை. அவளிற்கு அழிவு அவளது அழகால் வந்தது. அவளைக்காதலித்தவர்களின் ஒருதன் அவளால் மறுக்கபட்டவர்களின் ஒருதன். அவளை சீரழிக்க திட்டமிட்டிருந்தான். அதற்கு கைகொடுத்தாற்போல் ஊரில் திருவிழா நடந்தது. திருவிழாக்காலங்களில் இரவு நேரங்களில் திரைப்படம் போடுவது வழக்கம். படத்திற்கு போவதற்காய் தாயிடம் கெஞ்சிக் கூத்தாடி உத்தரவு வாங்கி வேளைக்கு வந்திடுவதாய் கூறிச்சென்றாள் சாந்தி.
தாய் எதிர்பார்த்துக்கொண்டிருப்பாள் என்று பாதியில் வெளியேறி தனியாய் வீடு நோக்கி வந்து கொண்டிருக்கையில் அவளைத்தொடர்ந்து வந்த இருவர் அவளை சீரழித்து விட்டார்கள். விடிய அவள் ஒரு பற்றையில் கிடந்தாள். என்ன நடந்தது என்பது அரைவாசி தான் அவளிற்கு தெரியும். அவள் கெடுக்கப்பட்டாள் என்று ஊரில் பேச்சு. பேச்சு வந்த அடுத்த நிமிடம் அவளிற்கு ஆறுதல் சொல்வதற்காய் கூட காத்திருக்காத தாய், தூக்கில் தொங்கிக்கொண்டாள். சிறுவயதில் தந்தையை இழந்த சாந்தி என்ன செய்வது உறவுகள் நன்றாய் இருக்கும் போது கூட எட்டி நடந்தவர்கள் கெட்டுப்போன நேரத்திலா உதவப்போகிறார்கள்?. பசி பாதி பட்டினி பாதியாய் திரிந்த சாந்தி கூலி வேலைக்கு கூட செல்ல முடியாது தவித்தாள். அவள் போகுமிடம், வருமிடம் எல்லாம் அவளை தீண்டத்தகாத தொழு நோயாளி போலப்பார்த்தார்கள். நாற்று நட்டு, களை எடுத்து மற்றவர்களிற்கு கூலி வேலை செய்வது தான் தாயினதும் அவளதும் வேலை. அதைத்தவிர அந்தக்கிராமத்தில் செய்வதற்கு என்ன வேலை இருக்கிறது. அவளது வேலை கூட கெட்டுப்போனவள் இவள் இங்க வந்தாள் வேலை செய்கிற ஆண்களும் வேலை செய்ய மாட்டாங்கள், என்று பழியுடன் பறிக்கப்பட்டது. உறவுகள் அற்ற நிலையில், வேலையும் அற்ற நிலையில் கஸ்டப்பட்டாள். என்ன செய்ய பெரிய பரம்பரைப்பணக்கார்கள் வீட்டிலா பிறந்தாள். பரம்பரைச்சொத்தை அழித்து திண்ண.? வறுமை தாண்டவம் ஆடியது. அப்போ அவளை ஆறுதல் படுத்த ஒரு சில ஆண்கள் மட்டும் ரகசியமாய் வந்தார்கள். அவர்களது வரவு ஆரம்பத்தில் அவளிற்கு கசந்தாலும். அவளினுள் உருவான கருவை வளர்ப்பதற்காய், அவர்கள் வருவதை அவள் தடுக்கவில்லை. அவர்களது வரவு இதுவரை ரகசியமாய் இருந்த போதும். மெல்ல மெல்ல அது கசிந்து அவள் விபச்சாரி என்ற பெயரை பெற்றுக்கொண்டாள். அப்படி பிறந்தவள் தான் சசி. ஊரினால் உறவுகளால் அயலவர்களால் வெறுப்புடன் பாக்கப்பட்ட அவள். தனது வீட்டிற்கு வந்து போகும் ஒரு சிலர் தான் மனிதர்கள் என்று எண்ணியிருந்தாள். அவர்கள் வரும் பொழுது சசி வீட்டில் நின்றால், அவளது கையில் 10, 15 ரூபாய்களை வைப்பார்கள். சசியை ரொபி வாங்கி சாப்பிடச்சொல்வார்கள். அறியா வயது காசைக்கண்டவுடன் ஊரிலே உள்ள ஒரே ஒரு கடை அங்கே சென்று தனக்கு வேண்டியவற்றை வாங்கி, அவள் திரும்பிவர சில சமயங்களில் தாயைக்காண முடிவதில்லை. சில சமயங்களில் வந்தவர்களை காணக்கிடைக்காது. அறியா வயது வருபவர்களை மாமா, மாமா என்று அன்புடன் அழைப்பாள். காலம் காத்திருக்கவில்லை அவளும் வயதடைந்தாள். வீட்டிற்கு வருபவர்களை தாய் மெல்ல மெல்ல குறைக்கத்தொடங்கினாள். இருந்தும் ஒரு சிலர் வந்தவண்ணம் தான். காலம் செல்ல செல்லத்தான் தன் வீட்டில் என்ன நடக்கிறது என்பதை அவளால் புரிந்து கொள்ள முடிந்தது.
வேசி மகள் என்று ஊரில் ஒரு சிலர் கூறியதற்கான அர்த்தம் என்னவென்று. இப்பொழுது தான் அவளிற்கு புரிந்தது. தன் தாய் ஒரு விபச்சாரி என்பதை அறியக்கூடிய வயசை அடைந்து விட்ட அவளால் அதை தாங்க முடியவில்லை. அவளது ஆசிரியை ஒருவர் மூலம் தன் தாய் ஒரு விபச்சாரி என்பதை உறுதிப்படுத்திக்கொண்டாள். அப்பொழுது தான் தனது கைகளில் வைக்கப்பட்ட சில்லறைகளிற்கான காரணங்கள் புரிந்தது. ஒரு சில நாள் யோசித்தாள் தாய் என்பவள் அவளது மனதில் இருந்து எங்கையோ சென்றுவிட்டாள். அண்மையில் அலரிவிதை அரைத்து உண்டு ஊரில் யாரோ இறந்ததாய் அறிந்திருந்தாள். "இப்படிப்பட்ட ஒரு தாயின் மகளாய். பிறக்கும் போதே பிறந்து விட்டேன் இனி என்ன செய்ய" என்று எண்ணியவள் தன் வாழ்வை அதே வழியில் அழித்து விட எண்ணினாள்.
ஊரிலே அலரிவிதைகளிற்கு பஞ்சம் இல்லை. பொறுக்கிவந்து நன்றாய் அரைத்து அதை தான் உட்கொள்வதற்காய் தயாரானவள். "நான் செத்து இந்த உலகிற்கு என்ன செய்யப்போறேன். என்ர அம்மா போன்ற சமூகத்தூரோகிகளை இப்படி விட்டுவிட்டு நான் போய் என்ன செய்ய" என்று எண்ணியவள். தன் தாயைக்கொலை செய்வதற்காய் துணிந்துவிட்டாள். சாந்தியின் உணவில் விசம் வைத்து கொடுத்து அவள் குற்றுயிராய் இருக்கும் வேலை தான் சொன்னாள். "அம்மா நீ எப்படி பிழைப்பு நடத்திறாய் என்பது எனக்கு இப்போ புரிஞ்சிட்டுது. என்னை எப்படி வளர்த்தாய் என்பதை இப்ப புரிஞ்சிட்டுது. நான் இனி வாழக்கூடாது என்று நினைச்சன். அதற்கு முதல் என்னால முடிஞ்சது இந்த சமூகத்தில் கிருமியாய் இருக்கிற உன்னை எடுக்கவேணும் என்று நினைச்சன் செய்திட்டேன். ஒரு மகளாய் உன்னைக்கொலை செய்தாலும் ஒரு சமூகப்பெண்ணாய் நான் செய்தது ஒரு களையெடுப்பு" என்றவள். தானும் அலரி விதையை விழுங்க துணிந்து விட்டாள். அனால் அதை தாய் அனுமதிக்கவில்லை. "நான் செய்தது பாவம் அப்படி என்று நீ நினைச்சால் அதை நீ எனக்கு செய்தது மூலம் துடைச்சிட்டாய். உனக்காக தான் இதுவரை இப்படி எல்லாம் வாழ்ந்தன் நீயும் செத்திட்டால் நான் இப்படி வாழ்ந்தற்கு அர்த்தம் என்ன? நீ அதை விழுங்காதே கடைசி ஆசையாய் உன் தாயின் ஆசையை நிறைவேற்று" என்று கெஞ்சினாள்.
அத்தோடு சாந்தியின் அத்தியாயம் முடிந்தது. "அம்மா நீ சாகும் போது உனக்கு உறவாய் நான் இருக்கிறன். நான் சாகும் போது அனாதையாய் தான் போகப்போகிறேன்". என எண்ணிக்கொண்டாள் சசி. அவளை இதுவரை ஒரு மனிசியாய் பார்த்து சுக துக்கங்களை தெரிந்து கொண்ட அவளது ஆசிரியை சகல விடயமும் அறிந்து. சசியைப்பார்க்க வந்திருந்தார். தாயின் உடலை காவல் துறையினர் கொண்டு சென்றபின் சசியையும் காவல் துறையினர் அழைத்துச்சென்றுவிட்டார்கள். அங்கு வந்த ஆசிரியை "ஏன் சசி இப்படி அவசரப்பட்டாய்" என்று கேட்டாள். "இதுவரை தன்னைப்பற்றி எந்த விடயமும் உனக்கு தெரியக்கூடாது என்கிறதில உங்க அம்மா றொம்ப கவனமாய் இருந்தா, ஆனால் உண்மை எப்படியும் வெளியில வந்திடும். நீ என்னிடம் கேக்கும் போது. இப்படி செய்வா என்று நான் நினைக்கல." என்றார். அதற்கு சசி "ஏன் ரீச்சர் அம்மாவை நான் கொலை செய்யல ஒரு சமூகதுரோகியை தான் கொலை செய்தன். இது தப்பு என்றால் நான் என்ன செய்ய?" என்றாள். "எந்தச்சமூகத்திற்காய் நீ உன் தாயைக்கொலை செய்தியோ. அந்த சமூகம் தான் உன் தாயை இந்த நிலைக்கு உருவாக்கினது தெரியுமா? அவளுக்கு தெரியாமல் யாரோ செய்த தப்பை அவள் மேல போட்டு. அவளை ஒரு மனிசியாக்கூட பாக்காத இந்தச்சமூகம் அவளுக்கு எத்தனை செய்திச்சு? அதை சிந்திச்சுப்பாத்தியா? சும்மா இப்படி விபச்சாரியா வரணும் என்று உங்க அம்மா ஆசைப்பட்டாவா? தான் கெட்டுப்போன பின்னும் கூட வேலை செய்து சாப்பிடவும் உன்னை வளர்க்கவும் தானே ஆசைப்பட்டா. அப்ப வேலை கொடுக்காத இந்த சமூகம் தானே அவளை இந்த நிலைக்காக்கினது. இது யார் தப்பு, அவளது தப்பா..?? அல்லது தன்னைத்தொலைச்சிட்டு வந்த போது. அவளிற்கு நம்பிக்கை கொடுக்க கூட வேண்டாம் சாகும் போது அவளையும் கூட்டிக்கொண்டு போகாதது யார் தப்பு. தாய் செய்த தப்பா அவள் செய்த தப்பா? கூலி வேலை செய்து என்றாலும் உழைச்சுசாப்பிட எண்ணிய அவளிற்கு இந்த கொடுமையைக்கொடுத்த கடவுள் எங்க போனான் இப்படி தவறு செய்தது எல்லாரும் சேர்ந்து நீ தண்டிச்சது மட்டும் அவளையா? இற்றவரைக்கும் உன்ர அப்பன் யார் என்கிறது. உன் தாய்க்கு மட்டும் அல்ல யாருக்கும் தெரியாது. இப்ப இருக்கிற மாதிரி அந்தக்காலத்தில காவல் துறையும் இல்லை பொலீஸ் இல்லை. இதுவரை உன் அப்பன் யார் என்று கூட தெரியாது. இப்படி உன் பிறப்பிலும் வாழ்விலும் எத்தனையோ. பேர் தவறு செய்திருக்கிறாங்க. நீ உன் அம்மாவை கொண்டது எந்த விதத்தில சரி என்று யோசி தெரியும்" என்றாள். சற்றும் காத்திருக்காதவளாய். " ஏன் ரீச்சர் அவமானத்தின் சின்னம் நான். நான் என்ன காதலில கிடைச்ச பரிசா? இல்லை ஒரு புனிதமான உறவில பிறந்தவளா? என்னை ஏன் பெற்றெடுத்தா? இதுவரை அம்மா எனக்கு என்ன சொன்னவா? அப்பாவை ஆமி பிடிச்சுக்கொண்டு போட்டான் என்று தானே? வயிறை வளக்கிறதுக்காக உடலை விக்கிற அளவிற்கு போக வேண்டிய நிலை ஏன் வந்தது. அம்மா தன் தாயுடன் சேந்து செத்துப்போய் இருந்தால் கூடப்பறவாய் இல்லை மானத்தைவிற்றுப்பிழைக்க வெளிக்கிட்டாவே இது சரி என்கிறீங்களா..?? தன்னால மானத்தோட என்னை வளர்க்க முடியும் என்றால் பெற்றிருக்கலாம். என்னை பெறுறதிற்காக அவங்க மானத்தை விற்றா என்கிறது என்னால ஏற்க முடியல. நியாயமா மானத்தோட வாழ முடிஞ்சா வாழ்ந்திருக்கலாம் இல்லாட்டால் அலரி விதையை திண்டு செத்திருக்கலாம் அது எவ்வளவோ மேல். நீங்க சொன்ன தவறுசெய்த ஒவ்வொருவரையும் தண்டிக்கிறதுக்காக அவங்க செய்த செயல் அவங்கள புனிதமாய் நினைத்து சிலைவைக்கிற செயலா?. செத்திருந்தால் கூட மானத்தோட செத்தாள் என்று இருந்திருக்கும். தன்னை விற்று திண்டாள் என்பதை விட அது மேல் இல்லையா"?. என்று பல கேள்விகளை அடுக்கினாள் சசி. "சசி உன் அம்மா ஒருத்தியை உன்னால அழிக்க முடிஞ்சிச்சு. ஆனா இப்படி எத்தனை பேர் இருக்காங்க. அவங்க எல்லாரும் இப்படி சந்தர்ப்பமும் சமுதாயதாயத்தாலும் இப்படி மாற்றப்பட்டவங்க தான். சமூகமே திருந்தும் வரை இதை ஏதும் செய்ய முடியாது" என்றார் . "என்ன சொல்லுறீங்க ஏது சமூகம் நீங்களும் தான் சமூகம் நானும் தான் அதில அடக்கம். நாங்க செய்கிற தப்புகளை சமூகத்தின் மேல் போடுறதில எந்த சரியும் இல்லை. இது தவிர்க்கப்படவேண்டுமே தவிர நியாயப்படுத்தப்பட வேண்டியது அல்ல." என்று ஆணித்தரமாய் முடித்தாள். என்ன சொல்ல முடியும் அவளது நிலை கண்டு வருந்திய ஆசிரியை "சரி இனி நீ என்ன செய்வதாய் உத்தேசம்" என்று கேட்டார். " வழக்கில என்ன சொல்லினமோ அதைத்தானே செய்யனும். நான் செய்தது சரி என்று சொல்ல வரல என் தப்புக்கு தண்டனையை அனுபவிக்க நான் தயார்" என்றாள். அவள் 18 வயது நிறையாதவள் என்பதால் அவளை நன் நடத்தைக்கல்லூரியில சேர்ப்பதற்காய் உத்தரவு இடப்பட்டது.
தனி மரமாய் போன அவளிற்கு அடிக்கடி ஆசிரியை ஆறுதலாய் வந்து பேசுவாள். அவளது இலட்சியம் எல்லாம். தன் தாயைப்போல சமூகத்தின் பெயரில சாட்டைப்போட்டுக்கொண்டு இப்படி செய்கிறவர்களை திருத்துவதும். அவர்களை இப்படி பட்ட நிலைக்குள் தள்ளுபவர்களை களை எடுப்பதற்குமாய் ஆன போலீஸ் அதிகாரியாய் ஆவது தான். இலட்சியத்தில் பெரிய இலட்சியமாய் தன்னை அவமானச்சின்னமாய் பிறக்க வைத்த அந்த பிறப்பையும் தேடியபடி இலட்சியத்தில் குறியாய் இருக்கிறாள். அது நாளை நிறை வேறலாம். சகல சமூகத்தையும் இப்படி பட்ட தவறில் இருந்து திருத்த முடியாவிட்டாலும். ஒரிருவரை திருந்தினாலும் அது நாளைய பலரது இனிய வாழ்விற்கு வழி வகுக்கலாம். ஒரு தனி மனிசியாய் அவளால் உலகை திருத்த முடியாவிட்டாலும் ஒரு சில மனிதர்களை எனினும் திருத்த முடியும் என்ற நம்பிக்கையில். !