பெண்மைக்குள்ளே ஒரு மென்மை!
"செல்லம் எல்லா வேளைக்கு வந்திடுறன். சிரிச்சுக்கொண்டு வழி அனுப்பனை" குகன் கெஞ்சினான். அவனது கெ(கொ)ஞ்சல் அவளை மாற்றவே இல்லை. இவன் எப்படி இப்படிச்செய்யலாம் இன்றைய நாள் எனக்குரிய நாள், இன்னொரு நிகழ்ச்சியை எப்படி போடலாம். சின்னனாய் அவன் மேல் கோவம் இருந்து அவன் அவள் சிரிக்காமல் ஒரு முத்தம் வாங்காமல் வெளியே போகான் என்பதை அறிந்தவள் "சரிடா போயிட்டு வா" என்று சொல்லி முத்தத்தோடு வழி அனுப்பியவள்.
சோபாவில் உட்கார்ந்து மெல்ல வயிற்றைத்தடவினாள். 6 மாதமாய் இன்னொரு குட்டிக் குகன் அவளுக்குள் தவழ்கிறான். இத்தனை நாள் அவள் தான் அவனிற்கு குழந்தை,தாய்,நண்பி எல்லாமே. ஈருயிர் ஓருடல் என்பது அது தானோ அப்படித்தான் வாழ்க்கை. ஒரு சுடுவார்த்தை பேசிய நினைவுகள் இருந்ததில்லை இருவருக்குள்ளும். வாழ்க்கை என்பது இப்படித்தான் இருக்கவேண்டும் என்று வாழ்க்கையே எண்ணும்படி வாழ்கிறார்கள். ஊடலும் கூடலும் வருவது இந்த பிரிவால் தான். எந்த நேரமும் தன்னோடு ஒட்டியபடி அவன் இருக்க வேண்டும் என்று அவளும். வேலையோடு மாரடிக்கும் அவனும் வாழ்க்கையில், பார்த்து பார்த்து பலவருசம் காதலிச்சு சேர்ந்த சோடி தானே. அவன் ஆரம்ப நாட்களில் சொன்னவை நினைவில் " ஏம்பா நாங்க கலியாணம் கட்டி பிள்ளை குட்டி வந்து பேரன் பேத்தி வந்தாலும். நான் உன்னை காதலிக்கிறதை விடமாட்டன் நீயும் விடக்கூடாது சரியா". ஓம் என்று அன்று தலையாட்டியவள் இன்றுவரை ஒவ்வொரு விநாடியும் அவனைக்காதலிக்கிறாள், அவனும் தான். வாழ்க்கையின் நெளிவுகள் சுழிவுகள் அறியாமலா அவள். 7 நாட்களில் ஒரு நாள் ஞாயிற்று கிழமை இருவரும் ஒன்றாய் கழிப்பதாய் என்றோ போட்ட திட்டம். ஓரிரு முறை அவன் மீறியிருக்கிறான். என்ன தான் இருந்தாலும் இன்று அவன் மோசம் வேலை விடயமாய் 2 நாள் பயணமாம் தவிக்க விட்டு சென்று விட்டான். உறவுகள் யாரும் அருகில் இல்லை தனிமையாய் இருவரும் ஒருவருக்கொருவர் துணையாய் 2 வருட வாழ்க்கை இனிமையாய்த்தான் போனது.
அவள் கோவம் கொள்வதும் அவன் அன்பால் ஆற்றுவதும் அதில் ஒரு தனிச்சுகம் தான். அவளது சங்கடமான வேளைகள் அவனிற்கு போல் உணர்ந்து செயற்படுவதில் அவன் அவன் தான். எங்கு எப்போ சென்றாலும் அவளை அழைத்துச்செல்வான் அதுவும் ஒரு நாளுக்கு மேலான பயணம் என்றால் கூடவே அவளும் அவனுடன் சென்றுவிடுவாள், அவனும் விட்டுப்பிரியான். அவளுள் ஒரு உயிர் உள்ளே இருப்பதால். வீணான சிரமங்கள் வேண்டாம் என்பதால் இன்று அவளை விட்டுச்சென்றான் இது தான் நடந்தது. "மனிசியையும் பிள்ளையையும் விட்டிட்டு அப்படி என்ன வேலை வேண்டிக்கிடக்கு" என்று அவனைத்திட்டியபடி தூங்கியவள். எழும்பியபோது அறையினுள் கட்டிலில் இருந்தாள். பக்கத்தில் அவன் தலை தடவியபடி. "என்னடா கோவமா இந்த நேரம் என்ன தூக்கம்?" செல்லமாய் மூக்கை கிள்ளினான். கண்ணை ஒரு தடவை கசக்கிப்பார்த்தவள். "ஏம்பா நீ வெளியூர் போகலையா முக்கியமான விசயம் என்றாய் என்னாச்சு" என்றவள் அவனது மார்போடு சாய்ந்து கொண்டாள். "உன்னை விட்டிட்டு போய்.
என்ன செய்யிறியோ என்னமோ என்று பதைபதைக்க. போன விசயமும் ஒழுங்கா முடிக்காமல் உன்னையும் விட்டிட்டு போய் யார் அவஸ்தை படுறது. உதில போய் திரும்பிட்டன் அடிச்சு சொல்லிக்கிடக்கு வேணும் என்றால் அவை இஞ்ச வரட்டும். என்ர மனிசி பிள்ளையை விட உந்த பிசினஸ் பெரிசா என்ன. சரி இப்பவாவது கொஞ்சம் இழியன். என்று குட்டினான்". அவனது வாய் உதிர்ந்தது அவளது உள்ளுள் என்னமோ போல் இருந்தது. நன்றி சொல்வதற்கு மேல் அவனை இறுக கட்டி முத்தமழை பொழிவதைவிட அவளால் என்ன செய்ய முடியும். அந்த நொடிகளில் அவளது முகமதில் அவன் கண்ட மாற்றம். அந்த விடயம் முடிந்து வரும் லாபத்தை விட பெரிசாய் தெரிந்தது. மெல்ல அணைத்துக்கொண்டான். அவளது உள்ளுணர்வுகளை முழுமையாய் புரிந்தவனாய்.
0 Comments:
Post a Comment
<< Home